சென்னை, காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். குளோபல் மருத்துவமனை ஒரு மகத்தான சாதனை செய்துள்ளது.

உலக மருத்துவ வரலாற்றில் மிகவும் அரிதான ஒரு சாதனையாக, எஸ்.ஆர்.எம். குளோபல் மருத்துவமனையின் மருத்துவர்கள் 32 வார கர்ப்பிணிப் பெண்ணுக்கு அதிக ஆபத்து நிறைந்த இரண்டு அவசரகால அறுவை சிகிச்சைகளை செய்துள்ளனர். கடுமையான தண்டுவடப் பிரச்சனையால் அப்பெண்ணால் நடக்க முடியாமல் அவதிப்பட்டு இருக்கிறார்.

மலம், சிறுநீர் கழிக்கும் கட்டுப்பாட்டையும் இழந்திருந்தார். மருத்துவக் குழுவினர் முதலில் அவசரகால சிசேரியன் மூலம் குழந்தையைப் பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். அதைத் தொடர்ந்து, நரம்பு அழுத்தத்தைச் சரிசெய்யவும் நிரந்தர பக்கவாதம் ஏற்படுவதைத் தடுக்கவும் சிக்கலான தண்டுவட அறுவை சிகிச்சையை உடனடியாக மேற்கொண்டனர். தற்போது தாய்க்கு நடக்கும் திறன் மீண்டும் கிடைத்துள்ளது; பிறந்த பச்சிளம் குழந்தையும் நலமுடன் பாதுகாப்பாக உள்ளது.

L4-L5 தண்டுவடப் பகுதியில் ஏற்பட்ட சவ்வு விலகலால் உருவான இந்த பாதிப்பு ‘கௌடா ஈக்வினா சிண்ட்ரோம்’ எனப்படும் மிகவும் அரிதான,உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய நரம்பியல் அவசரநிலையாகும். தண்டுவடத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள நரம்புகளே சிறுநீர், மலம் கழித்தல் மற்றும் கால் அசைவுகளைக் கட்டுப்படுத்துகின்றன.விலகிய சவ்வு இந்த நரம்புகளை அழுத்தியதால், கால்களில் பலவீனம் ஏற்பட்டு அவரால் நடக்க முடியாமல் போனதுடன், சிறுநீர், மலம் கழிக்கும் கட்டுப்பாட்டையும் இழந்திருந்தார்.

எஸ்.ஆர்.எம். குளோபல் மருத்துவமனையின் முதுகெலும்பு சிகிச்சை பிரிவின் முதுநிலை நிபுணர் டாக்டர் யோகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த அறுவைசிகிச்சையில்,மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ முதுநிலை நிபுணர் டாக்டர் ஆர்.கே. வித்யாலட்சுமி, மருத்துவ இரத்தவியல் நிபுணர் டாக்டர் டி.அபிநயா, பச்சிளங் குழந்தைகளுக்கான மருத்துவ முதுநிலை நிபுணர் டாக்டர் அசோக் மற்றும் மயக்கவியல் நிபுணர் டாக்டர் ஷண்மிதா ஆகியோர் சிறப்பான பங்களிப்பை வழங்கினர்.

இது சில மணிநேரங்களுக்குள் சிகிச்சை அளிக்க வேண்டிய மிக அவசரமான ஒரு மருத்துவ நிலையாகும்.

சுமார் 130 கிலோ உடல் எடை, அவருக்கு சர்க்கரை நோய்,உயர் ரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு பிரச்னைகள் ஆகியவற்றோடு, ரத்தம் உறைவதைத் தடுக்கும் ‘ஏபிஎல்ஏ சிண்ட்ரோம்’ என்ற பாதிப்பும் நோயாளிக்கு இருந்தது‌, இச்சிகிச்சையை மேலும் சிக்கலானதாக ஆக்கியிருந்தன. ரத்தத்தை மெலிய வைக்கும் மருந்துகள் எடுத்துக் கொண்டதால் சிகிச்சையின் போது அதிக ரத்தக்கசிவு ஏற்படும் அபாயமும் இருந்தது.

தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் மருத்துவ தொழில் நுட்பம் நன்றாக வளர்ந்திருக்கிறது. நமது சமுதாயம் மேலும் சிறப்பாக வளர மருத்துவரின் பேராதரவு தேவைப்படுகிறது. இந்த சாதனையை படைத்த மருத்துவர்களுக்கு நமது ஹெல்த் அண்ட் பியூட்டி இதழ் சார்பாக வாழ்த்துகள்.

-டாக்டர் ஜி ராஜமோகன், ஹெல்த் அண்ட் பியூட்டி(Health and beauty)