
மகிழ்வோம்… மகிழ்விப்போம்!
மகிழ்ச்சி என்பது தினசரி மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். ஏனெனில் மகிழ்ச்சி என்பது வெறும் உணர்ச்சி மட்டுமல்ல; அது உடல் மற்றும் மன நல ஆரோக்கியத்திற்கும் வாழ்க்கையின் வெற்றிகளுக்கும் இன்றி அமையாதது.
மகிழ்ச்சியாக இருக்கும்போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.இதயம் தொடர்பான அபாயங்கள் அதிரடியாக குறைகிறது.மன அழுத்தத்தையும்,அச்சத்தையும், கவலைகளையும் போக்குகிறது. நேர்மறை எண்ணங்களை அதிகப்படுத்துகிறது.உற்சாகம் கொப்பளிக்கிறது.
உறவுகளை வலுப்படுத்துகிறது.வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.
முகத் தோற்றத்தில் அழகை கூட்டுகிறது.
பேச்சிலும் செயலிலும் மென்மையாக,தன்மையாக செயல்பட உதவுகிறது.
நிகழ்காலமும் எதிர்காலமும் சிறப்பாக இருக்க வேண்டுமென்றால்… மகிழ்ச்சியான மனநிலையில் ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு நிமிடத்தையும் கொண்டாடி மகிழ வேண்டும்.
மகிழ்ச்சியுடன் இருந்தால் மூளையில் டோபமைன் எனும் ரசாயன சுரப்பு அதிகரிக்கும்.இது நமது உடல்,மன ஆரோக்கியத்திற்கு உதவும்.இதனால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.கல்வி,தொழில், வியாபாரத்தில்,கலை தொடர்பான முயற்சிகளில் அச்சத்தை உடைத்து எறிந்து விட்டு,மாபெரும் உச்சத்தை அடையலாம்.
வாழ்க்கையில் அடிமேல் அடி வாங்கி,விழி பிதுங்கி தவிக்கும் போது மகிழ்ச்சி இருக்குமா? என்று கேட்கலாம்.
“நீங்கள் மகிழ்ச்சியான தருணங்களுக்காக காத்திருந்தால்,
என்றென்றும் காத்திருப்பீர்கள்.
ஆனால்,நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக நம்பத் தொடங்கினால் என்றென்றும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்”என்பது தான் உளவியல் எதார்த்தம்.
ஒன்று நடந்தால் தான் மகிழ்ச்சியாக இருப்பேன்…இது கிடைத்தால் சந்தோஷப்படுவேன் என்றெல்லாம் நினைத்துவிட்டு, அதை அடைந்ததும் அடுத்த ஆசை வந்துவிடுகிறது.
அதை நோக்கி ஓடத் தொடங்கி விடுவோம்.
எந்தத் தருணத்திலும் மகிழ்ச்சியாக இருக்கும் மனநிலையைத் தவற விடமாட்டேன் என்ற உறுதியோடு இருங்கள்.அதே மன நிலையோடு உங்களுக்கு வேண்டியதை தேடுங்கள்.அப்படிச் செய்தால்,தேடுவது கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி,சந்தோஷத் தருணங்களை உங்கள் மனம் ஒருபோதும் தவறவிடாது.
அதனால்,நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பீர்கள்.
மகிழ்ச்சிக்கு இணையான மருந்து இல்லை.மனதிற்குள் இருக்கிறது மகிழ்ச்சி.
வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி சாதிக்க மனமார்ந்த வாழ்த்துகள்!
-டாக்டர் ஜி. ராஜமோகன்.

