
டாக்டர் சிவபாலன் இளங்கோவன்.எம்.டி. மனநல மருத்துவர்.
அது ஒரு இரவு நேரம்.முன்னிரவாக இருக்கலாம்.கார் ஒரு அகலமான சாலையில் சென்றுகொண்டிருக்கிறது.நான் தான் காரை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.எனது அருகில் யார் அது? என் நண்பன். நெருங்கிய நண்பன் அமர்ந்திருக்கிறான்.பின் சீட்டில் யாரோ ரெண்டு பேர் அமர்ந்திருக்கிறார்கள்.
யாரும் எதுவும் பேசுவதாய் தெரியவில்லை.அந்த அகலமான சாலையைப் போலவே காரின் உட்புறமும் அத்தனை அமைதியாக இருக்கிறது.
திடீரென ஒரு பெரும் சத்தத்துடன் எனது கார் எதன் மீதோ மோதுகிறது. எனக்குப் படபடப்பாய் இருக்கிறது.எனது நண்பன் நடு சாலையில் தூக்கியெறிப்படுகிறான். அவனை நோக்கி ஒரு கனமான லாரி ஒன்று வேகமாக வருகிறது.
எனக்குத் தொண்டையை அடைக்கிறது.இது கனவாக இருக்கக் கூடாதா என நினைக்கிறேன்.என்னை நானே கிள்ளிப் பார்க்கிறேன்.தண்ணி தாகமாக இருக்கிறது.
திடீரென என் அருகாமையில் எனது மகனின் குரல் கேட்கிறது.
“அப்பா, தண்ணி.” அவ்வளவுதான், விருட்டென எழுந்து என்
மகனைத் தேடுகிறேன், அவன் என் அருகே தூங்கிக்கொண்டிருக்கிறான்.
ஆம் இது கனவுதான்.எத்தனை மோசமான கனவு.தண்ணீரைக் குடித்துவிட்டு நிம்மதியுடன் திரும்பத் தூங்கி விட்டேன்.
ஒரு நாள் இரவு மணி பன்னிரண்டு இருக்கும்.நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறேன்.திடீரென என்மீது யாரோ ஏறி உட்கார்ந்திருப்பது போல் இருக்கிறது.மூச்சுவிட முடியவில்லை. பக்கத்தில்தான் என் மனைவி படுத்திருக்கிறாள்.அவளைக் கூப்பிடலாமென்று நினைக்கிறேன்.பேச முடியவில்லை.கத்த நினைக்கிறேன், சத்தமே வரவில்லை.என் கை கால்களைக்கூட அசைக்க முடியவில்லை.கண்ணையும் திறக்க முடியவில்லை.
“சரி முடிந்தோம், அவ்வளவுதான்” என நினைக்கிறேன்.விழிப்பு வந்துவிட்டது. ஆம், கனவு.
ஒரு முறை சாலையில் நடந்து செல்லும்போது ஒருவர் வந்து என்னிடம் சகஜமாகப் பேசுகிறார்.என்னைப் பற்றியும் எனது குடும்பம்,வேலை என எல்லாவற்றையும் விசாரிக்கிறார்.அவருக்கு என்னைப் பற்றி எல்லாமும் தெரிந்து இருக்கிறது.ஆனால் எனக்குத்தான் அவர் யாரென்றே நினைவில் வரவில்லை.
அவரை நிச்சயமாக எங்கோ பார்த்திருக்கிறேன்.ஆனால் நினைவில்லை.அன்று பகல் முழுவதும் எனது வேலையில் கூட கவனம் இல்லாமல் நான் அவரைப் பற்றியே யோசித்துத் கொண்டிருக்கிறேன். ஆனாலும் எதுவும் நினைவில் வரவில்லை.
இரவு தூங்குகிறேன்.கனவு ஒரு புகை போல மெல்ல மெல்ல எனது உறக்கத்தில் விரிகிறது.அதில் அந்த நண்பர் வருகிறார்.வருவது மட்டுமில்லை, அவருடனான எனது முதல் சந்திப்பு, சந்தித்த இடம், எங்களது உரையாடல்கள் அத்தனையும் ஒரு காட்சி போல தெரிகிறது.அவரது பெயர் உட்பட அவரைப் பற்றிய அத்தனையும் எனது கனவில் நான் அறிந்து கொண்டேன்.
ஜே.கே. ரவுலிங் கேள்விப் பட்டதுண்டா? ஒரு எழுத்தாளர். ‘ஹாரி பாட்டர்’ நாவல் அவர் எழுதியதுதான்.அவர் தனது,”அத்தனை ஹாரி பாட்டர் கதைகளின் மூலமும் தனது கனவின் வழியாகக் கிடைத்ததே” என்கிறார்.
கனவுகள் – எப்போதும் ஒரு புதிரானது.
பல நூற்றாண்டுகளாகக் கனவு என்பது மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான ஊடகம் என நம்பப்பட்டு வந்தது.கனவை ஆராய்ச்சி செய்வதும்,அதில் நடக்கும் நிகழ்வுகளை இணைத்துப் பார்ப்பதும், அதற்கு ஒரு காரணம் கற்பிப்பதும் இன்றளவுக்கும் நடக்கிறது.
கிரேக்கர்களும், ரோமர்களும், கனவுகளுக்கு எதிர்காலத்தைக்
கணிக்கும் திறமை இருப்பதாக நம்பிக் கொண்டிருந்தனர்.கனவுகளைப்
பற்றி ஏராளமான கட்டுக்கதைகள் இங்கிருந்துதான் தொடங்கின.
19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை கனவுகளுக்கு இப்படிப்பட்ட
விசித்திர பிம்பம்தான் இருந்தது.
சிக்மண்ட் பிராய்ட் என்ற உளவியல் நிபுணர்தான் கனவுகளை
அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றார்.அவரைப் பொறுத்த
வரை கனவு என்பது ‘ஆழ்மன இச்சை’.
அதாவது நாம் நினைவில் இருக்கும்போது ஏற்படும் பாலியல்
முதலான இச்சைகளை, அது நமக்கு ஒழுக்க கோட்பாடுகளுக்கு
எதிரானதாக இருப்பதால் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம். இப்படிக்
கட்டுப்படுத்தப்பட்ட இச்சைகள்தான் கனவாக வருகிறது என்றார்.
சிக்மண்ட் பிராய்டிற்குப் பிறகு கனவுகள் முழுக்க முழுக்க உளவியல் ரீதியாக அணுகப்பட்டது.
மேல் சொன்ன இந்த இரண்டு அணுகுமுறைகளும் கனவைப் பற்றி ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றன.அதாவது கனவுகளுக்கு அர்த்தமுண்டு.அது ஏதோ நம்மிடம் சொல்ல வருகிறது.
இருபதாம் நூற்றாண்டிற்குப் பிறகு மருத்துவத் துறையில் ஏற்பட்ட துரிதமான வளர்ச்சி,குறிப்பாக மூளை மற்றும் நரம்பியல் துறையில் கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் ஸ்கேன்கள், கனவுகளை அறிவியல் பூர்வமாக விளக்க முற்பட்டன.
அதாவது, கனவு என்பதற்கு எந்த ஒரு அர்த்தமும் இல்லை.உங்கள் கனவு அர்த்தமற்றவை.மேலும் அவை எந்த தொடர்ச்சியும் அற்றவை.நாம் தான் அதாவது கனவு காண்பவர்தான் புள்ளிகளை இணைத்து கனவுக்கு ஒரு அர்த்தத்தை கொடுக்கிறோம்.மற்றபடி கனவு என்பது மூளையில் அநாமதேயமாக நடக்கும் சில மின்புல மாற்றங்கள் (Electrical activity). அவ்வளவுதான்.
அது மட்டுமல்லாமல் கனவு என்பது மனிதனுக்கு மட்டும் வருவதல்ல, எல்லா விலங்குகளுக்கும் கனவு வரும்.நாய் தூங்கும்போது காலை ஆட்டிக்கொண்டே தூங்குவதை கவனியுங்கள்.அது கனவின் வெளிப்பாடு என்கிறது அறிவியல்.
கனவினால் எந்தப் பயனும் இல்லையா?
நம்மில், நமது உடம்பில் நடக்கும் ஒரு நிகழ்வு எப்படி பயனற்றதாய் இருக்கும்?
கனவிற்குப் பயன் உண்டு.நமது மூளைதான் நமது ஒட்டுமொத்த உடலின் கட்டுபாட்டு மையம்.நம் உடம்பில் இருக்கும் ஒவ்வொரு பாகத்தையும் கட்டுப்படுத்த மூளையில் அதற்கென ஒரு பகுதி உண்டு.சாப்பிடுவதற்கு வாயைத் திறக்க வேண்டும் என்றால்கூட மூளையில் நமது வாய்க்கான பகுதி வேலை செய்தால்தான் முடியும்.
அதேபோல நமது உணர்ச்சிகளுக்கு என்று மூளையில் சில பிரத்யேகப் பகுதிகள் உண்டு.கனவின்போது அந்தப் பிரத்யேகப் பகுதிகளைத் தூண்டுவதன் மூலம் மூளை நமது உணர்ச்சிகளை
உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அதாவது நமது உணர்ச்சிகள் எல்லாம் சரியாக உள்ளதா என மூளை கனவின் வழியாக ஒரு ஒத்திகை செய்து பார்த்துக் கொள்கிறது.
அதுமட்டுமல்லாமல் கனவின் வழியாக நமது நினைவுகள் கிளறப்படுகின்றன.நமது நினைவுகள் அத்தனையும் ஒரு குப்பையைப் போல மூளையின் பல்வேறு அடுக்குகளில் சிதறிக் கிடக்கும்.நாம் எந்த நினைவைப் பகல் முழுக்க தேடிக் கொண்டிருக்கிறோமோ,அதை நம் மூளை கனவின்போது நம்மையும் அறியாமல் தேடத் தொடங்கும்.அப்படிக் கண்டுபிடித்த நினைவைக் கனவின் வழியாகவே
நமது பார்வைக்குக் கொண்டு வரும்.
இதைத் தவிர கனவிற்கு எந்த அர்த்தமும் இல்லை என்கிறது அறிவியல்.
மேலே குறிப்பிட்ட முதல் இரண்டு கனவுகளில், என்ன நடக்கிறது? இரண்டும் கோரமான கனவுகள்.இப்படிப்பட்ட கோரமான கனவுகள் ரெம் (REM) வகை ஆழ்ந்த தூக்கத்தில்தான் வரும்.ஏனென்றால்,ரெம் வகை தூக்கத்தின்போது பல்வேறு வகையான ஹார்மோன்கள் உடலில் சுரக்கும்.அது ஒருவித படபடப்பையும் அச்சத்தையும் தரக்கூடிய ஹார்மோன்கள். அதனால்தான் அப்போது வரும் கனவுகளும் அச்சமூட்டுவதாய் இருக்கலாம்.
இப்படிப்பட்ட அச்சமூட்டும் கனவுகளில் நாம் எழுந்துவிடக் கூடாது. ஏனென்றால், அப்படி எழுந்தால் நாம் அந்தக் கனவை உண்மையென்று நினைத்து எதிர்வினை ஆற்றத் தொடங்கி விடுவோம்.அதனால்தான் நம் மூளை நமது எல்லா தசைகளையும் தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்துவிடும்.அந்த காரணத்தினால்தான் நம்மால் அந்த நேரத்தில் கத்தவோ, கைகளை அசைக்கவோ முடிவதில்லை.மற்றபடி இப்படிப்பட்ட கனவுகளுக்கு வேறு எந்த அர்த்தமும் இல்லை.
கனவுகளைப் பற்றி மருத்துவத்துறையில் பல்வேறு ஆராய்ச்சிகள், புள்ளிவிவரங்கள் உள்ளன.இன்னமும்கூட இந்த ஆராய்ச்சிகள் முற்றுப் பெறவில்லை.
ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் இருக்கிறது, “மிகச் சிறந்த கனவுகள் எப்போதும் நீங்கள் விழித்திருக்கும்போதே வரும்.”
ஆம் உண்மைதான். உண்மையான கனவு எப்போதும் மிகச்சிறப்பாய் இருக்காது.ஏனென்றால், அது உண்மையான கனவு.

