டாக்டர்.ஆர்.பரமேஸ்வரன்,

உளவியல் நிபுணர்

‘கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கைவைக்காதே’ என்பது நமது கிராமங்களில் இன்றும் வழக்கத்தில் உள்ள பழமொழி.இந்த பழமொழியை சும்மா சொல்லவில்லை… இதில் ஆயிரம் வாழ்வியல் தத்துவங்கள் அடங்கி உள்ளன. 

நீங்கள் கடைசியாக வாய்விட்டு, மனம்விட்டு சிரித்தது எப்போது? இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்; மகிழ்ச்சியாக இருப்பதற்கான முதல் படியே சிரிப்பதுதான். ஓவராக எக்ஸைட் ஆகி குலுங்கிக் குலுங்கி சிரிக்க வேண்டும் என்று அவசியமில்லை. மெல்லிதாக ஒரு புன்னகையை தவழ விட்டாலேகூட போதும்தான். ஆனால், எத்தனைபேர் அதைச் செய்கிறீர்கள்?

‘உங்களுக்குத் தெரியுமா.? மகிழ்ச்சியாக இருக்க ஏதோ ஒன்று நடக்க வேண்டியதில்லை. அதை யாரோ கொண்டு வந்து தர வேண்டியதில்லை. அதைத் தேடி. நீங்கள் எங்கெங்கோ அலையவோ, விலை கொடுத்து வாங்க முயற்சிக்கவோ தேவையில்லை. ஏனென்றால், அது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. நீங்கள் நினைத்தால், அதை எவ்வளவு வேண்டுமானாலும் சுரக்கச் செய்யலாம்!

ஆச்சரியமாக இருக்கிறதுா? உங்கள் மனதிற்குள் மகிழ்ச்சியை சுரக்கச் செய்யும் மாமருந்துக்குப் பெயர் என்ன தெரியுமா? எண்டோர்ஃபின்ஸ் (endorphins). இது வெளியே எங்கேயும் இல்லை. உங்களுக்குள்தான் சுரக்கிறது. நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் மனதார நினைத்தாலே போதும் மகிழ்ச்சிக்கான இந்த ஹார்மோனை சுரக்கும்படி பிட்யூட்டரி சுரப்பிக்கு முளை கட்டளையிடும். அடுத்த சில நொடிகளில் எண்டோர்ஃபின்ஸ் சுரக்க, மனசுக்குள் மகிழ்ச்சியும், உடலில் புத்துணர்ச்சியும் ஊற்றெடுக்கும்,பொங்கி வரும்.

இந்த ஹார்மோன் எப்போதெல்லாம் சுரக்கும் தெரியுமா? நீங்கள் கறுகறுப்பாக இயங்கும் போது, விறுவிறுவென உடற்பயிற்சி செய்யும்போது, உடலை ஸ்ட்ரெச் பண்ணி யோகா செய்யும் போது, எந்த ஒரு செயலையும் விரும்பிச் செய்யும்போது, இது சுரக்கும்.

அப்படியானால் எப்போதும் இவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டே இருக்க வேண்டுமா? என்று கேட்டால், கண்டிப்பாக அதற்கு அவசியமில்லை. ஆனால், ஒரே ஒரு எளிமையான காரியத்தைச் செய்யவேண்டும். அது, நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக பாசாங்கு செய்வதுதான். அவ்வளவுதான், உங்கள் மனம் அதை நிஜமென்று நம்பி, நீங்கள் மகிழ்ச்சிக்குத் தயார் என உங்கள் மூளைக்குத் தகவல் தரும். உடனே எண்டோர்ஃபின்ஸ் சுரந்து உங்களுக்குள் புத்துணர்ச்சி பெருகும்.

பிரச்னைகளால் மனம் சங்கடப் படும்போது அல்லது கடந்த கால எண்ணங்கள் எதையாவது அசை போட்டு மனம் வாடும்போது நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். உங்களையும் அறியாமல், ஒரு கையால் கன்னத்தைத் தாங்கிக் கொள்வீர்கள் அல்லவா? என்னை, என் பிரச்னையை யாராவது தாங்கிக் கொள்ள மாட்டார்களா என்று ஏக்கத்தின் வெளிப்பாடுதான் அது.

அத்தகைய சமயங்களில், ‘கன்னத்தில் கை வைக்காதே’என்று பெரியவர்கள் சொல்வார்களே, ஏன் தெரியுமா?

நம் பிரச்சனையை நாமே தகர்த்து எரிய வேண்டும். மற்றவர்களை  எதிர்பார்க்கக் கூடாது! என்பதால்தான்.

அதுவே நீங்கள் விழிப்பு உணர்வோடு, உங்கள் உடல் அசைவுகளை உங்கள் மூளை உற்று கவனித்து, நீங்கள் விரும்பும் மனநிலை எதுவோ  அதற்கு உரிய சுரப்பிகளை சுரக்கச் செய்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, கன்னத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும் கையை சட்டென்று எடுத்து விட்டு உங்கள் உதட்டை ஸ்ட்ரெச் பண்ணி அழகாக புன்னகைப்பது போல செய்யுங்கள்

அவ்வளவுதான், உங்கள் சோகம் காணாமல் போய்விடும். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக மூளைக்கு செய்தி போகும் மூளை அதை அதிகப்படுத்துவதற்காக எண்டோர்ஃபின்ஸை சுரக்கச் செய்யும்.

உடனே உண்மையான உற்சாகமும் மகிழ்ச்சியும் உங்களுக்குள் தொற்றிக் கொள்ளும். அது பெருகிப் பரவும்.சிரிப்பது போன்ற தோற்றமே இப்படி சந்தோஷத்தைத் தரும் போது, நீங்கள் எப்போதும் சிரித்த முகத்தோடு இருந்தால், உங்கள் மனநிலை உண்மையில் மகிழ்ச்சியாகவே இருக்கும். வாழ்வே சந்தோஷமகமாக மாறிவிடும்.

 உங்கள் அன்றாட மனநிலையை மகிழ்ச்சியாகவும் நகைச்சுவை  உணர்வுடனும், அறிந்து கொள்ளும் ஆர்வத்துடனும், மனதுக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதிலும் இருக்கும் வகையில் வைத்துப் பாருங்கள். சோர்வு உங்கள் உடலை வேண்டுமானால் நெருங்குமே தவிர, மனதை ஒருபோதும் நெருங்காது. மனம் இளமையாக இருக்கும் வரை உங்களுக்கு தளர்ச்சி வரவே வராது. மகிழ்ச்சியும் உங்களை விட்டு விலகாது!.