
டாக்டர்.எஸ்.வெங்கடாசலம், சாத்தூர்.
சமுதாயத்தில் பெண்ணின் பங்கு முக்கியமானது. தாய்மையின் மூலம் உயிர் ஒன்றை கொடுக்கின்றாள். ஒரு குடும்பத்தில் எப்பொழுதும் இல்லத்தரசி ஆரோக்கியம் உள்ளவளாகவும், அறிவுடையவளாகவும், நிர்வாகத் திறன் மிக்க ஆளுமையாகவும் இருக்க வேண்டும். இதன் மூலம் குடும்பத்தில் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும், நிம்மதியும் நீடிக்கும்.
பெண்கள் பருவமடையும் காலத்தில் பல பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள். அதேவேளை சில பெண்கள் பருவம் அடையாமல் இருக்கின்றார்கள். நாளமில்லாச் சுரப்பிகள் சரிவர வேலை செய்யாமல் இருப்பதே இந்நிலைக்குக் காரணமாக சொல்லப்படுகின்றது. யோகாசனப் பயிற்சிகளின் மூலம் நாளமில்லாச் சுரப்பிகளை சரிவர வேலை செய்ய வைத்து இவ்வாறான பிரச்சினைகளுக்குத் எளிய முறையில் தீர்வு காணலாம்.
பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பான பல பிரச்சனைகள் காணப்படுகின்றன. மாதவிடாய் ஒழுங்கின்மை, அதிக இரத்தப் போக்கு, வயிற்று வலி, களைப்பு, மாதவிடாய் அதிக நாட்கள் நீடித்தல், வெள்ளைப்படுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். யோகாசனப் பயிற்சிகளின் மூலம் மேற்கூறிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.
மாதவிடாய் நிற்கும் காலத்தில் பெண்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றார்கள். இவர்கள் யோகாசனத்தில் ஈடுபட்டால் பிரச்சனைகளில் இருந்து மீள முடியும்.
பெண்களுக்கு கர்ப்பகாலத்திலும், கர்ப்பகாலத்திற்குப் பின்பும் யோகப்பயிற்சி பல நன்மைகளை அளிக்கின்றது. முக்கியமாக யோகாசனம் கர்ப்பப்பையை பலப்படுத்துகின்றது. கர்ப்ப காலங்களில் பெண்களுடைய நாளமில்லாச் சுரப்பிகள் பல மாறுதல்களை அடைகின்றன. இதனால் நீரழிவு நோய் போன்றவை ஏற்படும். யோகப்பயிற்சி நாளமில்லாச் சுரப்பிகளை தூண்டச் செய்து சுகப்பிரசவத்திற்கு வழிசெய்கின்றது.
மகப்பேற்றுக்கு பின்பு காணப்படும் பிரச்சனைகளான மன அழுத்தம், மனப்பதட்டம் போன்றவற்றை நீக்கவும் யோகப்பயிற்சி உதவுகின்றது.
தற்காலத்தில் பெண்களுக்குத் தாய்ப்பால் சுரப்பது மிகக்குறைவாகவே காணப்படுகிறது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி கூடியவர்களாகவும் நல்ல அறிவுடையவர்களாகவும் காணப்படுகிறார்கள். “தாய்ப்பாலுக்கு நிகர் தாய்ப்பாலேதான்”. யோகாசனப் பயிற்சிகள் பிட்யூட்டரி சுரப்பியை தூண்டுதல் அளித்து, தாய்ப்பாலை நன்கு சுரக்கச் செய்கின்றது.
இன்று உலகெங்கும் மார்பகப்புற்று நோய் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்நோய் ஏற்பட மன அழுத்தமும் ஒரு பிரதான காரணமென ஆராச்சிகள் குறிப்பிடுகின்றன. யோகப் பயிற்சி மன அழுத்தத்தினை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. யோகப்பயிற்சிகள் மார்பகப்புற்று நோய் ஏற்படும் வாய்ப்பினைக் குறைக்கிறது.
தகுதி வாய்ந்த யோகாசன நிபுணரிடம் பயிற்சி பெற்று யோகாசனம் செய்ய கற்றுக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழலாம்.
டாக்டர்.எஸ்.வெங்கடாசலம், சாத்தூர்.

