
அதிக குழந்தைகளைப் பெறுவது, பிரசவத்திற்குப் பின்பு உடனடியாக அதிக எடைகளைத்தூக்குவது,அடி வயிற்றுக்கு அதிக உழைப்பு தருவது மற்றும் உடல் எடை அதிகரிப்பது போன்றவற்றால் கர்ப்பப்பை பலவீனமடைந்து இறக்கம் உண்டாகிறது. சிறுநீர்ப் பிரச்னைகள், இடுப்பில் வலி. வெள்ளைப்படுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பெண் மருத்துவரை அணுகி கர்ப்பப்பை முழுப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான பரிசோதனையையும் செய்துகொள்ள வேண்டும். கர்ப்பப்பை இறக்கம் ஆரம்பநிலையில் இருப்பின் ஸ்லிங் எனப்படுகிற அறுவை சிகிச்சையின் மூலம் தீர்வு காணலாம். அதாவது இறங்கிய கர்ப்பப்பை பகுதியை லேப்ரோஸ்கோபி சிகிச்சையின் மூலம் இழுத்து வைத்து டேப் மாதிரியான ஒன்றைப் பொருத்திச் சரிசெய்து விடலாம். கர்ப்பப்பை முழுவதும் கீழிறங்கும் நிலை இருக்குமாயின் கர்ப்பப்பையைக் கீழ் வழியாக அகற்றுதல் மற்றும் சிறுநீர்ப்பைக்கான சிகிச்சை மற்றும் மலக்குடல் இறக்கத்திற்கான சிகிச்சையையும் செய்துகொள்ள வேண்டும்.

