
இந்தியாவில் சத்துக் குறைபாடு மிகப்பெரிய பிரச்னையாக வளர்ந்து வருகிறது. இரும்புச்சத்துக் குறைபாட்டால் பெரும்பாலான பெண்கள் ரத்த சோகை வந்து பாதிக்கப்படுகிறார்கள்.அதிலும் நம் ஊரில் பிறக்கும் குழந்தைகள் பலர் உடல் எடை குறைவாக இருப்பதற்கு காரணம் கர்ப்பிணிப் பெண்களுக்கு இருக்கும் ரத்தசோகைதான். பலருக்கு போலிக் ஆசிட் சத்துக் குறைபாடு இருக்கிறது. குழந்தைகளுக்கு வரும் பல நரம்பு சார்ந்த பிறவிக் குறைபாடுகளுக்கு இந்த போலிக் ஆசிட் குறைபாடு காரணம். சைவம் சாப்பிடும் பலருக்கும் வைட்டமின் பி12 குறைபாடு இருக்கிறது.இதனால் நரம்பு பாதிப்பும் ரத்த சோகையும் நிறைய பேருக்கு வருகிறது. இவைதவிர ஜிங்க், வைட்டமின் ஏ,பி1,பி2, பி3 எனப் பல வைட்டமின் குறைபாடுகள் நம்மில் பலருக்கு இருக்கின்றன.
இதுமாதிரியான சத்துக் குறைபாடுகளை நீக்க,அரிசியில் சத்துகளைச் சேர்த்துச் செறிவூட்டுகிறார்கள். தனியாக அந்த சத்துகளைக் கொடுக்கும் உணவுகளை நிறைய பேர் சாப்பிடுவதில்லை. இந்தச் செறிவூட்டப்பட்ட அரிசியைச் சமைத்துச் சாப்பிடும்போது அந்த சத்துகளும் உடலுக்குக் கிடைத்துவிடும் என்பதால் இப்படிச் செய்கிறார்கள்.
அரிசியை மாவாக்கி, அதில் தேவையான வைட்டமின்கள், சத்துகளையெல்லாம் சேர்த்து ‘extrusion’ என்ற முறைப்படி அந்த மாவை மீண்டும் அரிசியைப்போலவே செய்துவிடுகிறார்கள்.பார்க்க சாதாரண அரிசியைப்போலவே இருக்கும்.இதை வழக்கமான அரிசியோடு கலந்துவிடுவார்கள். எந்த அளவுக்கென்றால்,1 கிலோ சாதாரண அரிசியில் 10 கிராம் அளவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியைச் சேர்ப்பது வழக்கமான ஓர் அளவீடு.
இந்த அரிசியின் மூலம் இந்தியாவைப் பீடித்திருக்கும் சத்துக்குறைபாட்டைப் போக்கிவிட முடியும என்பது அரசின் நம்பிக்கை.இங்கு மட்டுமல்ல, பிலிப்பைன்ஸ், பப்புவா நியூ கினியா, பனாமா போன்ற பல நாடுகளில் செறிவூட்டப்பட்ட அரிசி பயன்பாட்டில் இருக்கிறது. அமெரிக்கா உட்பட சில நாடுகளில் இது கட்டாயமாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது.
செறிவூட்டப்பட்ட அரிசியை எப்படிச் சமைக்க வேண்டும் என்ற சந்தேகம் எழலாம்.நாம் வழக்கமாக எப்படிச் சமைப்போமோ அப்படியே சமைக்கலாம். அப்படிச் சமைப்பதால் இதிலுள்ள சத்துக்கள் சிதையாது.இந்த அரிசிக்குக் காலாவதி தேதி இருப்பதற்கான காரணம்,கிட்டத்தட்ட இது அரிசி வடிவில் இருக்கும் வைட்டமின் மாத்திரை. மாத்திரைக்கு எப்படிக் காலாவதி தேதி இருக்கிறதோ அதுபோலதான் செயற்கையாகத் தயாரிக்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசிக்கும் இருக்கும்.
நம் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியில் 1% மட்டுமே செறிவூட்டப்பட்ட அரிசி சேர்க்கப்படுகிறது. மக்கள் ரேஷனில் தரப்படும் இந்த அரிசியை தாராளமாக வாங்கிப் பயன்படுத்தலாம். உணவில் அதிக அளவில் காய்கறிகள் அல்லது அசைவ உணவுகள் சேர்த்துக்கொள்ள முடியாத,வசதியற்ற மக்களுக்கு இந்தச் செறிவூட்டப்பட்ட அரிசி மிகவும் உதவியாக இருக்கும். சத்துக் குறைபாட்டுக்கும் இது மிகப்பெரும் தீர்வு.அதனால் செறிவூட்டப்பட்ட அரிசி கட்டாயம் வரவேற்கத்தக்க ஒன்றுதான்.யாரும் அச்சப்படத் தேவை இல்லை.
-பவித்ரன்.

