
நமக்கு தீங்கு செய்தவரை தண்டிப்பதற்கு சரியான வழி… அவர் வெட்கித் தலைகுனியும் படியாக அவருக்கு நன்மை செய்வது தான்.
இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயஞ் செய்து விடல்
– திருவள்ளுவர் காட்டும் வழி இதுதான்.
ஒருவர் தவறு செய்தால்,துரோகம் நினைத்தால், செய்நன்றி மறந்தால் அவர்களை பழிவாங்கத் துடிப்பது நல்லதல்ல. கண்ணுக்கு கண்… பள்ளிக்கு பல்… என்று எதிர்வினை ஆற்றுவது நாகரீகச் செயலாக இருக்க முடியாது.
கெட்டவர்களை, சுயநலவாதிகளை உங்களுக்கு சமமாக நினைக்காதீர்கள். அவர்களை பழி வாங்கவும் திட்டமிட வேண்டாம். எதிரிகளை வெறுத்தால் நம் உடல் நலம் கெடும். கோபம் ரத்தக் கொதிப்பை ஏற்படுத்தும்.
கோபம்,எரிச்சல், சோகம்,வெறுப்பு, விரக்தி போன்ற உணர்வுகள் எதிர்மறையானவை. மகிழ்ச்சி,களிப்பு, அன்பு,கனிவு,பணிவு, மன்னிப்பு,மன நிறைவு போன்ற உணர்வுகள் நேர்மறையானவை. நேர்மறை உணர்வுகள் நம்மை வேகமாக செயல்பட வைக்கும்.உற்சாகம் தரும்.
“புத்திசாலியான மனிதன் எதற்கும் கோபப்பட மாட்டான். ஒரு முட்டாளுக்கு கோபப்படவே தெரியாது”என்பது ஒரு சிறந்த பழமொழி.
வெற்றி பெற்ற மனிதர்கள் எல்லோரும் ஈட்டிய முதல் வெற்றி எது தெரியுமா?தன்னை பழிவாங்கும் செயலில் ஈடுபடுத்திக் கொள்ளாமல்,கவலை வலைக்குள் சிக்காமல் தற்காத்துக் கொண்டதுதான்.
உடலும்,உள்ளமும் ஓய்விலும், உடற்பயிற்சியிலும் புத்துணர்ச்சி பெறும். ஒவ்வொரு நாளும் ஒரு திட்ட அட்டவணையோடு செயலாற்ற வேண்டும். அவசரப்படுதல், உணர்ச்சிக்கு வசமாகி செயலற்று முடங்குவதும் இலக்கை அடையும் வழிகளை அடைத்து விடும்.பழிக்குப் பழி, வாங்கும் எண்ணம் நம்மை நிலைகுலையச் செய்யுமே தவிர வளர்ச்சியின் பாதைக்கு அழைத்துச் செல்லாது.
கவலையின்றி வாழ, மன நெருக்கடி இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை கொண்டாட தவறு செய்தவர்கள் மன்னித்து விடுவது தான் சிறந்த வழி. மன்னித்து மறந்து விட்டு நேரம் காலமா காலம் பார்க்காமல் உழைப்பது ஒன்றே நம்மை உயரத்திற்கு அழைத்துச் செல்லும் உன்னதமான வழி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மகிழ்ச்சியாக மன்னித்து வாழுங்கள்!

