
ஸ்மார்ட்போன் கவனம்!
ஸ்மார்ட் போன்/ டேப்லட் வருகைக்குப் பிறகு நாளொன்றுக்கு ஒருவர் 2 – 4 மணி நேரம் அதை நோண்டிக் கொண்டிருக்கிறார். இதன்படி வருடத்துக்கு 700 – 1,400 மணி நேரத்தை நவீன வாழ்வியல் நம்மிடமிருந்து பறித்துக்கொள்கிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும். பார்க்கும் தோரணையாவது சரியாக இருக்கிறதா? ஸ்மார்ட்போனைப் பார்க்கிற சுவாரசியத்தில் கழுத்தின் நிலையை யாரும் கவனிப்பதில்லை. சாய்ந்துகொண்டும் படுத்துக்கொண்டும் குனிந்துகொண்டும்தான் பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட்போனைப் பார்க்கின்றனர். ஷேர் ஆட்டோ போன்ற குலுங்கலான பயணத்தின்போதுகூட பலருக்கும் ஸ்மார்ட்போனைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இந்த நவீன மோகம் கண்ணைக் கெடுக்கிறது: கழுத்துவலியைக் கொண்டுவருகிறது. கழுத்தை நேராக வைத்துக்கொண்டு கண்ணுக்கு முன்னால் ஸ்மார்ட் போனைப் பிடித்துக்கொண்டு, அளவோடு பார்த்தால் கண்ணுக்கும் கழுத்துக்கும் பிரச்சினை இல்லை.
கட்டிலைக் கவனி!
கழுத்தில் தொடங்கி இடுப்பில் முடியும் “முதுகெலும்புச் சங்கிலி’’ லத்திக் கம்புமாதிரி நேராக இருக்காது. அதில் நடுநடுவே சில வளைவுகள் உண்டு. அந்த வளைவுகள் விலகினால், கழுத்துவலி மட்டுமல்ல முதுகுவலியும் சேர்ந்துகொள்ளும். வழக்கத்தில் நார்க்கட்டில், நாடாக் கட்டில், கயிற்றுக் கட்டில், மடக்குக் கட்டில் போன்றவற்றில் படுத்து உறங்குவது இந்த வளைவுகளுக்கு வில்லங்கம் ஆவதால் இவற்றில் படுக்கக் கூடாது. பதிலாக, கட்டாந்தரையில் படுப்பது மிக நல்லது. அல்லது மேற்புறம் மட்டும் மிருதுவாக உள்ள பஞ்சுமெத்தையில் படுக்கலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் மெத்தை ஓர் அங்குலத்துக்கு அதிகமாக அமுங்கக் கூடாது.
அடுத்து, சந்தையில் / ஷாப்பிங் மால்களில் சரக்கு வாங்குபவர்கள் கைகளில் அதிகச் சுமை தூக்குவதைத் தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் ஒரே கையில், ஒரே நிலையில் எந்தச் சுமையையும் தூக்கக் கூடாது; சுமையைக் கைகளில் தொங்கப்போடக் கூடாது; அடிக்கடி கை மாற்றிக்கொள்ள வேண்டும். கையில் சுமையுடன் நடப்பதாக இருந்தால், சுமையை இரண்டு கைகளிலும் சம அளவில் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
மசாஜ் செய்யலாமா?
கழுத்துவலி உண்டானாலே ஆயுர்வேத மசாஜ் செய்துகொள்ளவும் ஒரு கூட்டம் ஆர்வம் காட்டும். தசைகளில் மட்டும்தான் பிரச்சினை என்றால் மசாஜ் கைமேல் பலன் கொடுக்கும். ஜவ்வு விலகி இருந்தால், மசாஜ் செய்வதற்கு யோசிக்க வேண்டும். ஏனெனில், சீலா மீனுக்கு ஆசைப்பட்டு சுறா மீனிடம் சிக்கிக்கொண்டதுபோல் அரைகுறை மசாஜ் ஆட்களிடம் கழுத்தைக் கொடுத்து பாதிப்பை அதிகப்படுத்திக் கொண்டவர்களும் உள்ளார்கள்.
நாள்தோறும் கழுத்துக்குப் பயிற்சி கொடுத்தால், கழுத்துவலி வராமல் பார்த்துக்கொள்ளலாம்.

