– ஜி.ராஜமோகன்

கால்களை பராமரிப்பது எப்படி?

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்காதவர்கள், பாதங்களை இழப்பது அதிகரித்து வருகிறது. வாழ்நாள் முழுவதும் நடக்க உதவும் பாதங்களை பராமரிப்பது முக்கியம்.

தினமும்‌ காலையில்‌ எழுந்ததும்‌ பாதங்களைக்‌ கவனியுங்கள்‌. சிராய்ப்பு, காயம்‌, கொப்புளம்‌, வெடிப்பு, சருமம்‌ சிவப்பது, வீங்குவது, நிறம்‌ மாறுவது… இவற்றில்‌ ஒன்று தெரிந்தாலும்‌ உடனே மருத்துவரிடம்‌ காட்டுங்கள்‌. கால்‌ மற்றும்‌ பாதங்களைக்‌ காலையிலும்‌ மாலையிலும்‌ சுத்தமான தண்ணீரால் சோப்பு போட்டுக்‌ கழுவி, ஈரம்‌ போகத்‌ துடைத்துக் கொள்ளுங்கள்‌. விரலிடுக்குகளைச்‌ சுத்தம்‌ செய்ய மறக்காதீர்கள்‌.

நாம்‌ கடலில்‌ ரசித்துக்‌ குளிக்க வேண்டுமானால்‌ அதிக ஆழமும்‌ ஆகாது; அதிக அலைகளும்‌ கூடாது. அதுமாதிரிதான்‌ நம்‌ பாதங்களுக்கு அதிகச்‌ சூடும்‌ ஆகாது; அதிக ஈரமும்‌ கூடாது. சூடு அதிகமானால்‌ கொப்புளம்‌ வரும்‌. ஈரம்‌ அதிகமானால்‌ காளான்‌ தொற்று வரும்‌. கால்களில்‌ சூடாக ஒத்தடம்‌ கொடுப்பதும்‌, வீரியமான தைலங்களைத்‌ தடவுவதும்‌ சொந்தக்‌ காசில்‌ சூனியம்‌ வைத்துக்‌ கொள்வது போன்றது. இதையும்‌ சொல்ல வேண்டும்‌. பிளேடால்‌ நகங்களை வெட்டாதீர்கள்‌. நகவெட்டியால்‌ வெட்டுங்கள்‌. நக ஓரங்களைப்‌ பிய்க்காதீர்கள்‌; கடிக்காதீர்கள்‌. பாதங்களில்‌ தோல்‌ தடிப்பு/கால்‌ ஆணி இருந்தால்‌ கத்தியால்‌ கீறாதீர்கள்‌. மருத்துவ ஆலோசனை பெறுங்கள்‌.

கால்களில்‌ ரத்த ஓட்டம்‌ அதிகரிக்க…

அதிக நேரம்‌ அமர்ந்தே இருப்பது நல்லதல்ல. நாற்காலியில்‌ அமரும்போது கால்மேல்‌ கால்போட்டு அதிக நேரம்‌ அமர வேண்டாம்‌. தரையில்‌ அமரும்போது கால்களைக்‌ குறுக்காக வைத்தும்‌ அமராதீர்கள்‌. நேரம்‌ கிடைக்கும்போதெல்லாம்‌ கணுக்காலையும்‌ பாதங்களையும்‌ அசைத்துக்கொண்டே இருங்கள்‌. தினமும்‌ அரை மணி நேரம்‌ நடைப்பயிற்சி அவசியம்‌. புகைபிடிக்காதீர்கள்‌. மது வேண்டாம்‌.

காலணியும்‌ காலுறையும்‌

வெறுங்காலில்‌ நடக்காதீர்கள்‌. சரியான அளவுள்ள காலணிகளை அணியுங்கள்‌. வீட்டிற்குள்ளும்‌ காலணி அணிவது அவசியம்‌. எம்‌.சி.ஆர்‌. அல்லது எம்‌.சி.பி காலணிகள்‌ நல்லது. விரல்‌ நுனிகளையும் மூடும்படியான காலணிகள்‌ பாதுகாப்பானவை. உயரம்‌ இல்லாத காலணிகளே உகந்தவை. பிளாஸ்டிக்‌ காலணிகளைத்‌ தவிர்க்கவும்‌. ஷு அணிவதற்கு முன்பு அதற்குள்‌ சிறு கல்‌, முள்‌ ஏதாவது இருக்கிறதா என்று பார்த்துவிடுங்கள்‌. வியர்வையை உறிஞ்சும்‌ பருத்திக்‌ காலுறைகளே உசத்தி. நைலான்‌ வகைகளையும்‌, ரப்பர்‌ / எலாஸ்டிக்‌ வளையம்‌ உள்ள காலுறைகளையும்‌ தவிர்க்கவும்‌, சரியான அளவுள்ள மெல்லிய காலுறைகளை அணியவும்‌. இன்சுலின்‌ சிகிச்சையுடன்‌ மேம்பட்ட பாதப்‌ பராமரிப்பும்‌ கைகோத்தால்‌ உங்கள்‌ பாதங்கள்‌ எப்போதும்‌ பாதுகாப்பாக இருக்கும். செய்வீர்களா?