
டாக்டர் சிவபாலன் இளங்கோவன்,MBBS,MD(Psychiatry)
நமது அன்றாட வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கவலைகளை மன அழுத்தத்துடன் குழப்பிக் கொள்கிறோம். உதாரணத்திற்கு, நாளை காலை செய்ய வேண்டிய வேலை தொடர்பாக நமக்குள் ஒரு அலுப்பு ஏற்படலாம்.அதன் விளைவாக அந்த வேலையை நாம் செய்யாமல் போகலாம் அல்லது முழுமையாக செய்யாமல் விடலாம். அப்படி முடிக்காமல் விட்ட வேலை நமக்குள் ஒரு கவலையை ஏற்படுத்தும்.இது தற்காலிகமானது.காலப்போக்கில் அடுத்தடுத்த வேலைகளை பார்ப்போம்.
ஆனால், மனச்சோர்வு என்பது இந்த அன்றாட வாழ்வில் சோறுகளில் இருந்து முற்றிலும் வேறானது மனச்சோறு என்பது மருத்துவ அறிவியலால் தெளிவாக வரையறை செய்யப்பட்டிருக்கிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் வரையறையின்படி மனச்சோர்வு என்பது:
எந்தவிதப் புறக்காரணங்களும் இல்லாமல் அல்லது புறக்காரணங்களின் இயல்பை மீறி ஒரு தொடர்ச்சியான மனக்கவலையை எந்த நேரமும் கொண்டிருப்பது. அப்படி இருக்கும் அந்தக் கவலையானது மேலோட்டமானதாக இல்லாமல் அதைக் கொண்டிருக்கும் மனிதரின் பிரதான உணர்ச்சியாக மாறிப்போயிருக்கும்.அதாவது மகிழ்ச்சி,உற்சாகம், பயம் போன்ற எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்த இயலாத அளவிற்கு அந்த மனக் கவலை பிரதான உணர்ச்சியாக அவருக்குள் நிலைத்திருக்கும். அந்த மனக்கவலை சில நேரங்கள் மட்டும் இல்லாமல் பெரும்பாலான நேரங்களில் வாட்டி வதைக்கலாம்.
உடல் முழுவதும் மிகக் கடினமான சோர்வு இருக்கும்.
ஏன் இந்த உலகம் விடிகிறது? என்று நினைக்கும் அளவிற்கு கடுமையாக பாதிக்கும்.இந்த மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவர் எந்த வேலையும் செய்ய இயலாமல் எந்த நேரமும் படுக்கையில் படுத்திருப்பார்கள். அவருடைய வேலைகளைச் செய்வதற்குக் கூட இன்னொருவரின் உதவி தேவைப்படும் நிலையில் இருப்பார்கள்.
எந்த ஒரு செயல்மீதும்,எந்த ஒரு நிகழ்வின் மீதும் கவனம் என்பது முற்றிலும் இருக்காது.
அவர்களால் எதன்மீதும் ஒரு தொடர்ச்சியான கவனத்தை செலுத்த முடியாது.ஏதோ சிந்தனைகள்,ஓடி அலையும் எண்ணங்கள் என முற்றிலும் வெளிப்புற உலகத்தின் தொடர்பைத் துண்டித்துக் கொண்டு தங்களுக்குள்ளேயே தங்களை முடக்கிக் கொள்வார்கள்.இந்த கவனமின்மையின் விளைவாக அவர்களால் எந்த வேலையையும் முழுமையாக செய்ய முடியாது.யாருடனும் முழுமையாக உரையாடக் கூட முடியாது.
தொடர்ச்சியான மனசோர்வினால் விளையக்கூடிய எதிர்மறை எண்ணங்கள் வாழ்க்கையின் மீது ஒரு பெரிய அவநம்பிக்கையை அவர்களுக்குள் ஏற்படுத்தும். வாழ்தலின் மீதான சுவாரசியங்கள் எதுவும் இல்லாமல் அதற்கான வேட்கைகள்கூட எதுவும் இல்லாமல் ஒரு எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களாக மாறிப்போவார்கள். அது அந்த மன அழுத்தம் வருவதற்கு முன்பிருந்த அவரது ஆளுமைக்கு முற்றிலும் வேறானதாக இருக்கலாம்.இந்த எதிர்மறை எண்ணங் களும்,உடல் சோர்வும், கவனமின்மையும் சேர்வதால் அவர்களின் அன்றாட வாழ்வு மிகவும் மோசமாக பாதிக்கப்படும்.அதன் விளைவாக அவர் தன்னைப் பற்றி அதுவரை கொண்டிருந்த எண்ணங்கள் எல்லாம் மாறிப்போய் சுய நம் பிக்கை இழந்தவர்களாக, தாழ்வுணர்ச்சி நிறைந்தவர்களாக மாறிப்போவார்கள். இந்த தாழ்வுணர்ச்சி யின் விளைவாக அவர்கள் முற்றிலும் வெளிப்புற உலகைத் துண்டித்து தனிமையில் உழல தொடங்கு வார்கள்.
மனம் முழுவதும் வெம்பித் தவிக்கும் தாழ்வுணர்ச்சியும், நம்பிக்கையின்மையும்;உடல் ரீதியான சோர்வுகளும், அலுப்பும்; கவனமின்மையும் சேர்ந்து அவர்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் சேதப்படுத்தி விடும். தங்களது இய லாமையை உணர்ந்து கொள்ளும் நேரத்தில் அது அவர்களுக்குள் ஒரு அதீத குற்றவுணர்ச்சி மன மெங்கும் பரப்பி விடும்.
எந்த நேரமும் மனக்கவலை, அலுப்பு,சோர்வு, உடல் தொய்வு,சாதாரண தேவைகளுக்குக் கூட இன்னொருவரைச் சார்ந்திருக்கும் நிலை,நம்பிக்கை யின்மை, வாழ்க்கையின்மீதான சுவாரசியமற்ற நிலை,தாழ்வுணர்ச்சி, எதிர்மறை எண்ணங்கள், குற்றவுணர்ச்சி என இவை அத்தனையும் ஒருவருக்கு இருந்தால் அவர் அடுத்து எதைப் பற்றி சிந்திப்பார்?ஆம், தற்கொலை எண்ணங்கள். வாழ்வதின்மீதான ஈடுபாடுகள் அற்ற நிலையில், அதற்கான காரணங்கள் அற்ற நிலையில்,தற் கொலை எண்ணங்கள் இயல்பாகவே ஒருவருக்கு வந்து விடும்.ஒருவேளை அந்த மனநிலை மாறி னால் அந்த எண்ணங்கள் குறையலாம். ஆனால், தொடர்ச்சியாக எந்த நேரமும் எந்தக் கணமும் அந்த மனநிலை தொடந்தால்? தற்கொலை மட்டுமே ஒரு நிரந்தர தீர்வாக அவர்களின் கண்முன் தெரியும்.
தூக்கம்,பசி போன்ற உடலியல் நிகழ்வுகள் பெரிதும் பாதிக்கப்படும்.மன அழுத்தமே ஒரு தூக்கம் சார்ந்த பிரச்னை என்ற ஒரு வாதம் கூட இருக்கிறது,அதாவது தூக்கம் இல்லையென்றால் மன அழுத்தம் வரலாம் என நாம் நினைப்பதுண்டு. ஆனால் உண்மையில் மனஅழுத்தம் இருப்பதனால்தான் தூக்கம் பாதிக்கப்படுகிறது. இரவை எதிர்கொள்ளவே ஒருவர் பயப்படும் அளவிற்குத் தூக்கமற்ற ராத்திரிகள் அத்தனை தொந்தரவானதாக இருக்கும்.அதே போல பசி,எந்த சுவையும் இல்லாமல்,எந்த ரசனையும் இல்லாமல் சாப்பிடுவதன் மீதான அத்தனை இன்பமும் வடிந்து போய் உணவின்மீதான வெறுப்பு பிரதானமாக மாறும் அளவிற்கு
பசியின்மை இருக்கும்.உடல் சோர்வு,இயக்கமற்ற நிலை, குற்றவுணர்ச்சி என அத்தனையும் சேர்ந்து சாப்பிடுவதின் மீதான அத்தனை நாட்டங்களையும் சிதைத்து விடும்.
மேலே சொன்ன அத்தனை பண்புகளும் ஒரு வருக்கு இருந்தால் அதுவும் இரண்டு வாரங்களுக்கு மேலாகத் தொடர்ச்சியாக இருந்து வந்தால் அவருக்கு மனச்சோர்வு இருக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம்.
இப்போது திரும்பவும் ஒருமுறை படித்துப் பாருங்கள். மனச்சோர்வு எவ்வளவு மோசமானது என உணர்ந்து கொள்வீர்கள். வாழ்க்கையில் என்றாவது ஒரு நாளாவது மேலே சொன்ன மனநிலையோடு நாம் இதுவரை இருந்திருக் கிறோமா? அப்படி ஒருவேளை இப்படிப்பட்ட மனநிலை இனி எப்போதாவது வந்தால் நம்மால் இத்தகைய மனநிலையோடு ஒரே ஒரு நாள் நமது வாழ்க்கையை வாழ முடியுமா? நமது அன்றாடங்களை எந்தவித பாதிப்புமில்லாமல் செய்ய முடியுமா? ஆனால் குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் இத்தகைய மனநிலையோடு ஒருவர் இருந்தால்தான் நாங்கள் அவருக்கு மனஅழுத்தம் உள்ளது என சொல்கிறோம்.
அப்படி என்றால் இவ்வளவு நாட்கள் “Depressed” என நாம் நினைத்துக் கொண்டிருந்தது எல்லாம் அன்றாட வாழ்க்கையின் துயரங்களையே. உண்மையில் அத்தகைய “Depressed” மனநிலை உங்களுக்கோ அல்லது உங்களுக்கு நெருங்கிய ஒருவருக்கோ வரும்போது நீங்கள் அந்தத் தீவிரத்தை உணர்ந்து கொள்வீர்கள். அப்போது உங்களுக்கு உண்மையில் அவர்மீது அக்கறை இருந்தால் அவர்களுக்கு வெற்று அறிவுரைகளைச் சொல்வதை நிறுத்தி விட்டு ஒரு மருத்துவரைப் பார்க்கச் செல்வதுதான் நியாயமானதாக இருக்கும். ஏனென்றால் அது மட்டுமே இந்தக் கடுமையான மனநிலையில் இருந்து அவர்களை மீட்டுக் கொண்டு வரும்.

