
கால் இல்லாத 30 ஆயிரம் பேரை நடக்க வைத்த பெஸ்ட் டாக்டர்!
டாக்டர் எஸ் சுந்தர் மருத்துவராகவும் இசைக் கலைஞராகவும் பரிமளிக்கக்கூடிய திறமைசாலி. மருத்துவத்தில் எம் .டி படித்தவர் .தம்முடைய மறுவாழ்வு மருத்துவத் துறையில் தனக்கென்று ஒரு தனி இடம் பெற்று நற்பெயரோடும் நன்மதிப்போடும் வாழ்ந்துவருபவர்.
தான் பெற்ற மருத்துவக் கல்வியை வைத்து பணம் சம்பாதித்தோமா.. உல்லாசமாக வாழ்ந்தோமா என்றில்லாமல் சமூக அக்கறையோடு மக்களுக்கு பணியாற்ற 1996ம் ஆண்டு ஃப்ரீடம் ட்ரஸ்ட் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை ஆரம்பித்தார்.
இந்த ஆண்டு வெள்ளி விழா கொண்டாடினார்.
விபத்து சர்க்கரை நோய் போன்ற காரணங்களால் கால்களை இழந்தவர்களை தேடிக் கண்டுபிடித்து செயற்கை காலை இலவசமாக கொடுத்து நடக்க பயிற்சியும் கொடுத்து அழகு பார்க்கும் மனிதநேய மருத்துவர் .நடக்கமுடியாமல், வருவாய் ஈட்ட முடியாமல் தவித்தவர்களுக்கு இவரது உதவி மாபெரும் தொண்டு.
தமிழ்நாட்டில் மூலை முடுக்கெல்லாம் சென்று மருத்துவ முகாம்களை நடத்துகிறார். தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று இதுவரை 30 ஆயிரம் பேருக்கு இலவச செயற்கை காலை கொடுத்து நடக்க வைத்துள்ளார்.
ஆங்கிலத்தில் டாக்டர் சுந்தர் ஏழுதிய மறுவாழ்வுக்கான பாட புத்தகம்(Text book for Rehabilitation) 4 பதிப்பு வந்துள்ளது.இந்த புத்தகம் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது.
மருத்துவ சேவைகளைத் தாண்டி இயற்கை பேரிடரின் போதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் தாராள மனம் உள்ளவர். மக்கள் படும் துன்பங்களை துயரங்களை தீர்க்க… தான் ஏதாவது செய்ய வேண்டும் என்ற கருணை உள்ளம் கொண்டவர்.
நான் ஏறத்தாழ 30 ஆண்டுகளாக நன்கு அறிவேன்.மனித நேயம் உள்ள திறமையான மருத்துவர்.அறக்கட்டளை தொடங்கி அறப்பணி செய்துவரும் டாக்டர் எஸ்.சுந்தரை நமது இதழ் சார்பாக வாழ்த்தி மகிழ்கிறேன்.அவர் நீண்ட ஆயுளுடன் சிறப்பாக மக்கள் பணியாற்ற வேண்டும்.
– டாக்டர் ஜி. ராஜமோகன்

