– எழில் செல்வி

பூக்களிலேயே மிகவும் உத்தமமான மூலிகைக் குணம் கொண்ட பூ இதுதான். ஆனால், கொப்பரையை மெல்லிசாக சீவி, ஆரஞ்சு நிறம் சேர்த்து வெயிலில் உலர்த்திய சரக்கையே குங்குமப்பூ எனக் கூறி ஏமாற்றி கொடுத்து விடுகிறார்கள். இது நிச்சயம் நமக்கு உதவாது. பெரிய கடைகளில், நம்பகமான நாட்டு மருந்து கடைகளில் நல்ல விலை கொடுத்து வாங்க வேண்டும்.

தரமான குங்குமப்பூவை வாங்கி செய்தித் தாளின் மீது பரப்பி, லேசான தணலில் காட்ட, பூக்கள் ‘மொறுமொறு’வென காயும். தொட்டாலே உதிரும். இந்தப் பக்குவம் வந்ததும் சின்ன பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவும்.

குங்குமப்பூ அழகு தரும் மூலிகை சமாச்சாரங்களில் முக்கிய இடம் வகிக்கிறது. குறிப்பாக, சூரிய ஒளிக் கதிர்களை தடுத்து, மெலனினை கட்டுப்படுத்தும் அனைத்து மூலக்கூறுகளும் குங்குமப்பூவில் இருப்பதால், ஆயுர்வேதம் குங்குமப்பூவை சருமத்துக்கு நிறம் சேர்க்கும் அழகுப் பொருளாகக் கருதுகிறது.

சுத்தமான குங்குமப்பூவில், ஒரு டீஸ்பூன் கசகசாவை சேர்த்து, பசும்பால் விட்டு அரைக்கவும். இதை முகம், நெற்றி, கழுத்துப் பகுதிகளில் பூசி வந்தால், சூரியக் கதிரால் பாதிக்கப்பட்டு கருமை படர்ந்த சருமம், மீண்டும் பழைய அழகை பெறும். சருமத்தின் அழகைக் குலைக்கும் மரு, தழும்பு, பருவின் கரும்புள்ளி போன்றவைகூட நாளடைவில் மறைந்து விடும்.

கர்ப்பிணிகள் தினமும் பாலுடன் பாதாம் பருப்பு, குங்குமப்பூ சேர்த்து சாப்பிட்டால் பிறக்கப் போகும் குழந்தை, உடல் வலிமையுடன், சரும நோயின்றி பிறக்கும். சுகப்பிரசவமாக அமையும்.