
பெண்மையைப் போற்றுவோம்
காதல் என்பது மனம் ஒத்த இருவர் புரிந்து கொண்டு நிறைகுறைகளை அறிந்து, இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தது போல சாதி, மத, இனம் வேறுபாடின்றி ஒன்றாகக் காண்பது. புணர்ச்சிப் பழகுவதற்கில்லாமல் உணர்ச்சிபூர்வமான நட்பே காதல். காதலிப்பதும், காதலித்தவரை கைப்பிடிப்பதும் தமிழர் மரபாக இருந்தது.
ஆனால் இன்றோ காதல் என்பது கடைச்சரக்காகி விலைபோகும் பொருளாக மாறிவிட்டது. பெண்களைத் தெய்வமாகப் போற்றும் தமிழர் பண்பாடு சிதைந்து வருகிறது. மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும் என்றார் கவிமணி. உளவியலில் கூறுவதுபோல் சிறைக்காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் நிறை காக்கும் காப்பே தலை என்று பெண் தன்னைக் காப்பாற்றிக் கொள்வது அவளைப் பொறுத்ததே என்கிறார்.
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பெனும் திண்மை உண்டாகப்பெறின் என்பது வள்ளுவம். இன்று உணவும், காய்கனிகளும் வேதியல் கலந்த கலப்பு பண்டங்களாக மாறி விட்டதால் பூப்புப்பருவம் குழந்தைப் பருவத்திலேயே தொடங்கி விடுகிறது. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் பக்குவம் இல்லாது போனதால் காதலர் தினத்தில் தன்னை மறந்து தன்னிலை அறியாது தங்களின் உடலை தாரை வார்த்து தந்து விடுகிறார்கள். காதலனை முழுமையாக நம்பி நாசமடைவதும் சகஜமாகி வருகிறது. வேண்டாத கர்ப்பத்தை சுமந்து கருக்கலைப்பு செய்து கொள்ளும் இளவயது பெண்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவது நம் பண்பாட்டிற்கு ஏற்பட்டுள்ள ஒரு கரும்புள்ளி. மேலைநாட்டினர் வியந்து போற்றும் நம் பண்பாடுகளில் ஒன்று ஒருவனுக்கு ஒருத்தி என்கிற பழக்கம். பிறன்மனை நோக்காத பேராண்மையும் நம்மிடம் உள்ள நற்பழக்கம்.
காதலர் தினம் நட்பின் உச்சநிலை புனிதமான உறவின் சான்றாக விளங்கும் ஒரு எதிர்காலத்தின் முதற்படி. காதலின் மகத்துவமும், புனிதமும் புரிந்து காதல் செய்வோம். காதல் வாழ்க.. வளர்க!

