
-டாக்டர் கு.சிவராமன், சித்த மருத்துவர்
குடும்ப மருத்துவர் கலாச்சாரம் மாறிப் போய் இணையதள மருத்துவர் பெருகி வரும் காலகட்டம் இது.நம்மில் பலருக்கும் தனக்கான ஒரு நல்ல மருத்துவரைத் தேடுவதும்,அவரை தேவைப்படும் போது உடனடியாக அணுகுவதும் இன்னமும் சிரமமாகவே இருக்கிறது.
கூகுளில் தேடி குணம் பெற எத்தனிக்கும் கூட்டம் இன்று அதிகம்.அப்பா எப்படி இருக்கிறார்? மாமா பொண்ணுக்கு கல்யாணம் ஆச்சா? பையன் எந்த காலேஜில் படிக்கிறார்? சின்னப் பொண்ணுக்கு எத்தனை பிள்ளைகள்? என்று மொத்த குடும்பத்தையும் அன்போடு விசாரிக்கும் குடும்ப மருத்துவர்கள் இன்று இல்லை? ஏன் இந்த மாற்றம்…?
குடும்ப மருத்துவர் எப்படி இருப்பார்? கண்டுபிடிப்பது எப்படி?
முதலில் உங்கள் குடும்ப மருத்துவரை உங்கள் அருகாமையில் இருக்கும் அண்டை அயலார் தாம் அடையாளம் காட்ட வேண்டும். “நல்லா பொறுமையா பார்க்கிறாருங்க” என முதல் சான்றிதழ் கிடைக்க வேண்டும்.அது அவர் பெற்றிருக்கும் பல்வேறு உயர்படிப்புச் சான்றிதழைக் காட்டிலும் பெரிது.கொஞ்சம் அருகாமையில் அவர் மருத்துவமனை இருக்க வேண்டும்.அவசரத்திற்கு எந்நேரமும் அணுக ஏதுவாக இருக்க வேண்டும்.உங்களை உங்கள் குடும்பத்தை நன்கு அறிந்து, நல்லது கெட்டதற்கு வினவ, வீட்டிற்கு வந்து செல்லும் உறவைப் பெற்றிருக்க வேண்டும்.
எந்த ஒரு மருத்துவ ஆலோசனைக்கும் குடும்ப மருத்துவரின் பரிந்துரை அவசியம். உயர் சிகிச்சையோ, உயர் மருத்துவ ஆலோசனையோ அவர்தம் வழிகாட்டுதலில் தான் தொடங்க வேண்டும். ‘இந்த டாக்டர் எம்.டி.தானே…நியூரோவிற்கு எப்படி இவர் பார்க்கப் போகிறார்?’ என அரைவேக்காட்டு முடிவெடுத்து நேரடியாக, ‘நெட்டில் பார்த்தேன், தொலைக்காட்சியில் நல்லா பேசினார்’, என்று நேரடி ஆலோசனைக்குப் போவது தேவையற்ற செலவையும், அதிக கால தாமதத்தையும் தான் வரவழைக்கும்.
உங்கள் குடும்ப மருத்துவர் உங்கள் உடல்நிலை, மனநிலை, குடும்பச் சூழல், பொருளாதார நிலை, குடும்பத்தில் நிலவும் உறவுப் பிரச்சினைகள் அனைத்தையும் அறிந்திருப்பதால், அவரது தேர்வும் பரிந்துரையும் சரியாக இருக்கும். ஆதலால், உங்கள் முதல் தேடல் உங்களுக்கான குடும்ப மருத்துவராக இருக்கட்டும். அது உங்கள் மெடிக்கல் இன்சூரன்சுக்கான தேடலை விட அதிகமானது.
குடும்ப மருத்துவர் நவீன மருத்துவராகவோ, சித்த மருத்துவராகவோ பிற பாரம்பரிய மருத்துவராகவோ இருக்கலாம். மருத்துவத் தொழிலை முறையாகப் படித்து, நேர்மையாகவும், சிறப்புடனும், பற்றுடனும், சமூக அக்கறையுடனும் மகிழ்வுடனும், அருகாமையில் மதிப்புடையவருமான மருத்துவராக மட்டுமே கண்டிப்பாக இருக்க வேண்டும்.
நல்ல குடும்ப மருத்துவரை தேர்வு செய்தாகிவிட்டது. நல்ல நோயாளியாக எப்படி நடந்து கொள்வது? அதென்ன ‘நல்ல நோயாளி’ – முரண்பாடான வார்த்தையாகத் தெரிகிறதே என்ற கேள்வி எழலாம். மருத்துவரிடம் எப்படி தன் துன்பங்களைத் தெரிவிப்பது? விரைவில் குணம் பெற மருத்துவரிடம் எப்படி ஒத்துழைப்பது? என்பதும் நோயருக்கு மிக முக்கியம்.
முதலில் ஒரு நோய்க்காக குடும்ப மருத்துவரிடம் அழைத்துப் போகும் போது, குடும்பத்துடன் கோயில் திருவிழாவிற்கு செல்வது போன்று கும்பலாகச் செல்லாதீர்கள். நோயரைத் தவிர்த்து, கணவனோ, மனைவியோ, பெற்றோரில் ஒருவரோ துணைக்குச் செல்வது போதுமானது. மருத்துவத்தின் முதல்படியே நோயை, நோயரின் வாயிலாகக், கேட்டறிவது தான். நோயரை மருத்துவரிடம் இடையூறு இல்லாமல் பேச விடுங்கள். மருத்துவர் கேட்கும் கேள்விக்கு நோயரே நேரடியாகப் பேசட்டும். “அதைவிடுத்து அவருக்கு ஒண்ணும் தெரியாது சார்! நான் சொல்றேன்”. என குறுக்கே புகுந்து, நோயருக்கு “கோனார் நோட்ஸ்” போடுவது குழப்பத்தை மட்டுமே விளைவிக்கும்.
மருத்துவருக்கு உங்கள் சிரமத்தை, துன்பங்களை முதலில் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். “அங்கே அப்படி சொன்னார்கள்.. சி.டி.ஸ்கேனில் இப்படிப் போட்டிருக்கிறது” என பேசுவது, மருத்துவரின் நோய்க் கணிப்பைத் திசைதிருப்பும்.
மருத்துவர் அறையில் பேசிக்கொண்டிருக்கும் போது உங்கள் செல்போன் மவுனமாக இருக்க வேண்டும். குத்துப்பாட்டு ‘ரிங்டோன்’ திடீரென வந்த பின், பதறி அணைப்பது தவறு.
நோயரது ஆடையும் மிக முக்கியமானது.மூட்டு வலி இருப்பவர், மிக டைட் ஜீன்ஸ் அணிந்து வந்து மேலே அதை உயர்த்திவிட முடியாமல் மருத்துவர் நேரடியாக அந்த மூட்டில் வீக்கம் உள்ளதா, நிற மாற்றம், சூடு உள்ளதா என சோதிக்க முடியாமல் போக வழி வகுக்கும்.
மருந்துகள் மட்டுமல்லாது, உணவு, வாழ்வியல் அறிவுரைகள், உடற்பயிற்சி குறித்த பரிந்துரைகளையும் அவரது பிரிஸ்கிரிப்ஷன் பேப்பரிலேயே எழுதி வாங்கி பத்திரமாகக் கோப்பில் வைப்பது அவசியம்.பலர் சினிமா டிக்கட் மாதிரி முடிந்தவுடன் வீசிவிடுவது உண்டு.அது பெரும் தவறு. வீட்டில் ஒவ்வொரு நபருக்கும் மருத்துவக் கோப்பும், அதில், தேதிவாரியாக மருத்துவ குறிப்புகளை அடுக்கி வைத்திருப்பதும் மிக அவசியம்.
இன்னமும் நோயருக்கேற்ற அளவில் மருத்துவர் இந்தியாவில் இல்லை. அதிலும், மருத்துவர் ‘நல்ல பெயர்’ பெற்றுவிட்டபின் நோயர் கூட்டம் என்பது தவிர்க்க முடியாததாகி விடுவது உண்டு. ஒவ்வொரு மருத்துவரும் ஒவ்வொரு நாளும் இத்தனை நோயாளிகளை மட்டுமே பார்க்க வேண்டும் என திட்டமிடுவது இன்று மருத்துவரிடையே பெரும்பாலும் இல்லை. அவசரம் தவிர, பிற நோயர்களை பதிவு செய்து குறித்த நேரத்தில் பார்ப்பது, மருத்துவர்-
நோயர் இருவருக்குமே சரியான ஒன்று. முதியோர், கைக்குழந்தைகள், நோயின் தீவிர நிலையில் உள்ள அவசர நோயாளிகள் தவிர்த்து மற்றோரை ஒரு நாளக்கு இத்தனை நோயாளிகள் தான் என வரையறுத்துப் பார்ப்பது குடும்ப மருத்துவருக்குச் சிறப்பாயிருக்கும்.
திரைப்பட அரங்கில் சரியாக படம் போடுவது போல, சரியான நேரத்தில் தன்னை அழைத்து விடுவார் என நினைப்பதும், நேரமாகும் போது பொறுமையிழந்து வரவேற்பரையில் சண்டை கட்டுவதும் நோயருக்கு அழகல்ல. முந்தைய நோயரின் துன்பம் கணிக்க நேரமாகலாம்.அந்நிலை இன்னொரு சமயம் நமக்கும் ஏற்படலாம் எனக் கருதி பொறுமையுடன் இருப்பது நல்லது. காத்திருக்கும் நேரத்தில் பொறுமை இழக்காமல் நல்ல புத்தகங்களை வாசிக்கலாம்.
மருத்துவம் மற்றொரு வணிகமாகி வருவது மறுக்க முடியாத உண்மை. சிறந்த சமூக அக்கறையுள்ள மருத்துவர்களை தேர்வு செய்து, சரியான பரிந்துரையும், வழிகாட்டுதலும், மருத்துவமும் பெற்றுக் கொள்ள கூடுதல் அக்கறையும் மெனக்கெடுதலும் மிக அவசியம்!

