– டாக்டர் சிவபாலன் இளங்கோவன், MBBS,MD(Psychiatry)

தூங்கப் பிறந்தவர்கள் நாம்.”மனிதன் தன் வாழ்நாளில் 25 வருடத்தைத் தூங்கியே கழிக்கிறானாம் தெரியுமா?”என்றார் நண்பர் ஒருவர்.

“ஆமாம்,அதனால் என்ன?”என்றேன் நான்.

“என்னவா? 25 வருடங்கள் எந்த உபயோகமும் இல்லாமல் போய்விடுகிறதே” என்றார்.

“எந்த உபயோகமும் இல்லையா, ஏன்?”என்றேன்.

“ஆமாம், தூங்குவதால் என்ன உபயோகம் இருக்கிறது?” என்றார்.

“நீங்கள் விழித்திருக்கும்போது அப்படி என்ன உபயோகமான காரியங்களைச் சாதித்துவிட்டீர்கள்” என்றேன்.

ஒரு கிண்டலுக்காகத்தான் அப்படிச் சொன்னேன். தூங்குவது ஒரு வெட்டி வேலை என்ற கண்ணோட்டத்தை, அவர் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அப்படிச் சொன்னேன்.

ஒரு நாளில்,அதாவது இருபத்து நான்கு மணி நேரத்தில் குறைந்தபட்சம் எட்டு மணி நேரமாவது தூங்குவது மிக அவசியமானது.இந்த எட்டு மணிநேரம் என்பது சராசரிதான். அது வயதைப் பொறுத்து, வேலையைப் பொறுத்து,தனி நபரைப் பொறுத்து கூடுதலாகவோ,குறைவாகவோ மாறுபடலாம்.

உலக அளவில் தூக்கம் மற்றும் அதன் நோய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டிருந்தது. அதாவது கடந்த ஐந்து வருடத்தில் பெரும்பாலான வர்களின் தூக்க நேரம் என்பது வெகுவாகக் குறைந்திருக்கிறது.

கிட்டத்தட்ட 30 இல் இருந்து 40 சதவீதம் பேர் வரை தூக்கம் சார்ந்த பிரச்சினைகளாலும், நோயினாலும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்கிறது அந்தக் கருத்துக் கணிப்பு.

அதுமட்டும் இல்லாமல்,ஷிஃப்ட் முறையில் வேலை பார்ப்பவர்களுக்கு, அதாவது பகல் இரவு என மாறி மாறி வேலை பார்ப்பவர் களுக்கு இதயநோய் முதற்கொண்டு ஏராளமான நோய்கள் வருவதற்கான சாத்தியம் அதிகமாக இருப்பதாக அந்தக் கருத்துக் கணிப்பு சொல்கிறது.

இப்போது புரிகிறதா, தூக்கம் எவ்வளவு அவசியாமனது என்று?

பகலில் விழித்திருப்பதும், இரவில் உறங்குவதும்தான் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை.இதை நாம் மீறும்போது உடலின் இயக்கத்திலும் மாற்றங்கள் ஏற்படும். இதனால் உடலில் இயல்பாக நடக்கக்கூடிய சில செயல்கள் பாதிக்கப்படும்.அது நாளாக நாளாக உடலின் ஆரோக்கியத்திற்கு மிகுந்த அச்சுறுத்தலாக மாறிவிடும்.

உதாரணத்திற்கு,நமது மூளையில் ‘கிளையல் செல்கள்’ என்று சில செல்கள் இருக்கின்றன. இவைகளின் முதன்மையான வேலை,மூளையில் தேவையில்லாமல் தங்கிவிட்ட நச்சுப் பொருட்களை அழிப்பதுதான். இந்தக் கிளைச் செல்கள் தங்களது வேலையை இரவில் அதாவது தூக்கத்தில்தான் செய்யும்.

நாம் சரியாகத் தூங்கவில்லையென்றால்,இந்தச் செல்கள் தூங்கிவிடும். அப்புறம் அந்தச் செல்கள் செய்ய வேண்டிய வேலைகள் பாதிக்கப்படும். இதனால் மூளையில் நச்சுப் பொருட்கள் அப்படியே தங்கிவிடும்.அப்படிச் சேரும் இந்த நச்சுப் பொருட்கள் ஒரு கட்டத்தில் மூளையையே சேதப்படுத்திவிடும்.

இதுபோல நாம் உறங்கும் நேரத்தில் எல்லாம்,நம் உடலில் ஏராளமான வேலைகள் நடக்கும், இவை அத்தனையுமே நமது உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியமான வேலைகள்.

நாம் சாப்பிட்ட உணவு செரிமானம் செய்வதில் இருந்து, காலையில் படித்த ஒரு பாடத்தை நினைவில் நிறுத்துவதுவரை உறங்கும்போது செய்வதற்காகவே நம் உடலுக்கு அத்தனை வேலைகள் இருக்கின்றன.
ஆனால், தூங்குவதனால் எந்தப் பயனும் இல்லை..  என்பது போலதான் இன்னமும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

உடல் மட்டும் அல்ல, மனதின் ஆரோக்கியத்திற்கும் ஒரு நல்ல தூக்கம் அவசியம்.

மனித மூளை தனக்கு உள்ளேயே ஒரு ‘சர்க்காடியன் ரிதம்’ (Circadian Rhythem) கடிகாரத்தை வைத்துக்கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. அது 24 மணி நேரத்திற்கு ஏற்றவாறு தனது செயல்களைத் திட்டமிட்டுச் செய்து கொண்டிருக்கிறது.

இரவு, பகல் என்ற இரண்டு இயற்கையின் மாற்றங்களை வைத்துத்தான் நமது கடிகாரமும் செயல்படுகிறது. வெளிச்சம் என்றால், விழித்திருக்க வேண்டும்.இருள் என்றால்,உறங்க வேண்டும் என்ற அளவில்தான் நமது இந்தக் கடிகாரம் செயல்படுகிறது.

நாம் நமது தற்காலிக தேவைகளுக்காகவும், நிர்பந்தந்திற்காகவும் இந்தக் கடிகாரத்தின் நேரத்தைத் திருகி மாற்றிவைத்துக் கொள்ளும் போது, அது உடல் அளவிலும் மன அளவிலும் ஒரு நிலையான மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

எனது மருத்துவமனையில் நிர்வாக அதிகாரி ஒருவர் இருக்கிறார். வயது நாற்பது இருக்கும்.மிகுந்த பண்பானவர், யாரையும் அதிர்ந்துகூடப் பேசாதவர்.எந்தவித கடினமானப் பணியையும், விரைவாக அதேநேரத்தில் முழுமையாக முடித்து விடுவார்.

ஆனால், சமீபகாலமாக அவர்மீது நிறையப் புகார்கள்…எல்லோர் மீதும் கோபப்படுகிறார், எரிந்து விழுகிறார். யாருடைய பதிலையும் நிதானமாகக் கேட்பதில்லை. வேலையையும் முடிப்பதில்லை.அவர் செய்ய வேண்டிய அத்தனை வேலைகளும் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார் என நிறையப் புகார்கள்.

நான் அவரது மனைவியை அழைத்து வரச்சொல்லி விசாரித்தேன். வீட்டிலும் நிறையக் கோபப்படுவதாகவும், குழந்தைகளை அடித்து விடுவதாகவும் அவர் மனைவி சொன்னார்.

நான் அதன்பிறகு அந்த அதிகாரியிடம் பேசினேன்.அவர் சொன்னார்: “சார், இப்போதெல்லாம் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. வேலை செய்யவே சுனக்கமாக இருக்கிறது. எல்லோர்மீதும் வெறுப்பாக இருக்கிறது.நான் செய்வது தவறு எனத் தெரிகிறது. ஆனாலும் நான் நிதானத்தை இழந்துவிடுகிறேன்” என்றார்.

நான் அவரிடம் நிறையப் பேசினேன். அதில் எனக்கு ஒன்று நன்றாகப் புலப்பட்டது.அது அவரது தூக்கம்.

கடந்த ஒரு வருடமாக அவர் சரியாகத் தூங்குவதில்லை. இரவு இரண்டு மூன்று மணிவரை செல்போன் பார்க்கிறார் அல்லது டி.வி.யில் படம் என எதையாவது பார்த்துக் கொண்டிருக்கிறார். இரண்டு மணிக்குத் தூங்கி ஆறு மணிக்கெல்லாம் எழுந்து விடுகிறார்.

அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, “இல்லை சார்,சும்மா ஒரு பத்து நிமிடம் பேஸ்புக் பார்த்துவிட்டு தூங்கிவிடலாம் என்றுதான் நினைப்பேன். ஆனால்,நேரம் போவதே தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இப்போது அதே பழகிவிட்டது.நான்கு மணிநேரம் தூங்கினாலும் எனக்கு அடுத்த நாள் நன்றாகத்தான் சார் இருக்கிறது. அதனால் நான் அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என நினைக்கவில்லை” என்றார்.

“அடுத்த நாள் நன்றாக இருக்கிறதா? நீங்கள் கோபப்படுவதற்கும், உங்கள் வேலை பாதிக்கப்படுவதற்கும் என்ன காரணம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் சரியாகத் தூங்காததுதான்” என்றேன்.

இரவு ஒன்பது மணிக்குப் பிறகு நீங்கள் செல்போனோ டி.வி.யோ இனி பார்க்கக்கூடாது என்றேன்.

இப்போது அவர் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டார்.அவரது கோபமோ, வெறுப்போ, கவனமின்மையோ எதுவுமே இல்லை.  அதனால் ஒரு இயல்பான தூக்கம் உடல் ஆரோக்கியத்திற்கும்,  மன ஆரோக்கியத்திற்கும் மிக மிக அவசியமான ஒன்று.

பெருகிவரும் இன்றைய இணையச் சூழலில், 4ஜி,5 ஜி தலைமுறையில் நாம் நிறைய விஷயங்களை இழந்துகொண்டிருக்கிறோம்.அதில் முக்கியமானது நமது தூக்கம்.

இயற்கையோடு இணைந்த ஒரு வாழ்க்கை என்பதில் இருந்து,நாம் கொஞ்சம் கொஞ்சமாய் விடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு, சுருங்கிப்போன இந்த உறக்க நேரமும் ஒரு உதாரணம்.

ஒரு நல்ல உறக்கம்தான், உடலையும், மனதையும் இணைக்கும் விலை மதிப்பில்லாத சங்கிலி என்று சொல்வார்கள்.

ஏனென்றால்,உடலும் மனமும் இணைந்து செயல்படுவதுதான், இரண்டுக்கும் இடையே ஏற்படும் ஒரு ஆக்கப்பூர்வமான பிணைப்பு தான் நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு முதன்மையானது.

ஒரு நல்ல உறக்கம், இதைத் தன்னளவில் மிகச் சுலபமாகச் செய்து விடுகிறது.

ஒரு நல்ல உறக்கத்தை நாம் உதாசீனம் செய்வதின் வலி, அதற்காக ஒரு காலத்தில் நாம் யாசித்து நிற்கும்போது தான் தெரியும்.