– கருவியல் விஞ்ஞானி
டாக்டர்.எஸ்.எஸ்.முத்தையா பேட்டி

கொரோனா என்னும் வைரஸ்  பெருந் தொற்று இந்த உலகத்தில் அத்தனை மூலை முடுக்கெல்லாம் பரவியது. நேரடியாகவோ மறைமுகமாகவோ உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதரும் இந்த காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் .இதுவரை நாம் வாழ்ந்த வாழ்க்கை முறைகள் தலைகீழாக மாறின. நெருங்கிப் பழகுவது தவிர்க்கப்பட்டது.  வீட்டுக்குள்ளேயே முடங்க நேரிட்டது. 

வேலை இல்லை; தொழில் வியாபாரம் இல்லை ;வருமானம் இல்லை ;நோய் பாதிப்பு; தனிமைப்படுத்துதல்; உற்றார் உறவினர் நண்பர்கள் இறப்பு; அத்தனையையும் தாண்டி வந்தாகிவிட்டது.கொரோனா இரண்டாவது அலை முடிந்து ,சகஜ நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரும்பிக் கொண்டிருக்கிறோம்.

கொரோனாவால் எதிர்காலத்தில் என்ன மாதிரியான பாதிப்புகள் வரும் என்று தெரியாது… ஆனால் குழந்தை இல்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு அடுத்த தலைமுறை என்னாகும் என்ற அச்சம் ஏற்படுவதாக கூறுகிறார் கருவியல் விஞ்ஞானி டாக்டர். எஸ். எஸ். முத்தையா.

சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் கண்மணி கருத்தரிப்பு மையத்தின் நிறுவனர், ஆராய்ச்சியாளர்,எம்பிரியாலஜிஸ்ட்,கருவியல் விஞ்ஞானி.நமது இதழ் சார்பாக சந்தித்து பேசினோம்.அவரது பேட்டியிலிருந்து…

கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு குழந்தையின்மைப் பிரச்சனை அதிகரித்துள்ளதா?

கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் மீண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. கருவியல் விஞ்ஞானியாக நான் மகிழ்ச்சியாக இல்லை .கொரோனா பாதிப்பிற்கு முன்பே ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது .மரபு சார்ந்த பிரச்சனை, வாழ்வியல், சுற்றுச்சூழல், உணவு எல்லாம் காரணமாக சுட்டிக்காட்டப்பட்டது.பொன்னுக்கு வீங்கி,சின்னம்மை போன்றவை சிறு வயதில் வந்தால் விந்தணு உற்பத்தியை பாதிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு நிலைமை மிக மோசமாக இருக்கிறது. இதனால் குழந்தை இல்லா தம்பதியர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப் போகிறது.

என்ன மாதிரியான பாதிப்பு?

ஆண்களின் விந்தணு எண்ணிக்கை மிக மோசமாக குறைந்திருக்கிறது.90 மில்லியன் இருந்தவர்களுக்கு ஒரு மில்லியன் இரண்டு மில்லியன் என்கிற கவலைப்படும் அளவுக்கு குறைந்திருக்கிறது. பழைய நிலையை எட்டுவதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. 

எல்லோருக்கும் இந்த நிலையா…கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமா?

வைரஸ் பாதிப்பு என்பது சமூகத்தில் பரவலாக எல்லா மட்டத்திலும் நிகழ்ந்துள்ளது. அவரவர் உடல்வாகு, நோய் எதிர்ப்பு சக்தி, தக்க சமயத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்வது போன்ற காரணங்களால் பாதிப்பின் தன்மை ஏற்ற இறக்கமாக இருக்கலாம்.

விந்தணு குறைவதற்கு என்ன தான் தீர்வு?

சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் ரேடியேஷன் தெரபிக்கு  முன்பு எங்களிடம் வந்தார். திருமணமாகாதவர். புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு விந்தணு உற்பத்தி குறையலாம் அல்லது உற்பத்தியே இல்லாமல் போகலாம் என்பதால் விந்தணுவை சேகரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

கொரோனா காலத்தில் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை இல்லாதவர்கள் தங்கள் விந்தணுவை சேமித்து வைத்துக்கொண்டால் நல்லது.

எப்படி சேமிப்பது?

குழந்தையின்மை சிகிச்சை மையங்களில் சேமிக்கலாம்.  24 மணி நேரமும் உரிய குளிர் நிலையில் வைக்கும் திறனுள்ள நிபுணத்துவம் பெற்ற மையங்களை தேர்ந்தெடுத்து சேமிப்பது முக்கியம்.

பெண்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படுகிறது?

பெண்களுக்கு கொரோனா காலத்தில் கருமுட்டை உற்பத்தி  குறைகிறது.சிலருக்கு உற்பத்தியே இல்லாமல் இருக்கிறது. உற்பத்தி ஆனாலும் தரம் இல்லாமல் இருப்பதை காணமுடிகிறது.மேலும் கரு உருவாவது தள்ளிப்போகிறது. உருவான கரு சரியான வளர்ச்சியில்லாமல் அபார்ஷன் ஆகிறது. குழந்தை இல்லாதவர்கள் சிகிச்சையில் பல்வேறு தடைகளை கடக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றார்கள்.

இதற்கெல்லாம் என்னதான் தீர்வு?

நமது வாழ்வியல் முறையில் மாற்றம் தேவை.நமது நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.அமைதியான  வாழ்க்கை முறை,மகிழ்ச்சியான மன நிலை,சத்தான உணவு,பொருத்தமான உடற் பயிற்சி,இதை எல்லாத்தையும் விட தம்பதியர் மனம் விட்டு நெருங்கிப் பழகி உடல் உறவில் ஈடுபடுவது முக்கியம்.

தாம்பத்ய உறவு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா?

ஆமாம்.தம்பதியர் உற்சாகமாக உடல் உறவில் ஈடுபட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.அன்பு நிறைந்த இல்லறம், ஆத்மார்த்தமான உடல் உறவால் மன அழுத்தம் குறைகிறது.உடல் வலிமை அடைகிறது.வாழ்க்கையில் எல்லையில்லா இன்பத்தை அடைகிறார்கள்.ஆரோக்கியம் பெருகப் பெருக ஆயுள் கூடுகிறது.

குழந்தையில்லா தம்பதியர்களின் தற்போதைய நிலை என்ன?

கொரோனா பாதிப்பால் அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தர மக்களே.வைரஸ் பரவலின்போது இவர்களின் துயரங்களை சொல்லி மாளாது.

குழந்தைக்காக சிகிச்சை எடுக்க முடியாமல் தவித்தார்கள்.வருமானம் குறைந்ததால்  சிகிச்சையை தொடரமுடிய வில்லை.மன அழுத்தத்தால் புழுங்கினார்கள்.கொரோனாவால் ஆண்மைக்குறைவும் அதிகரிக்கிறது.இதனால் சிகிச்சை மேலும் சிக்கலாகிறது.

குழந்தை இல்லா தம்பதியர்களின் சிகிச்சை தள்ளிப்போனது பெரிய சிக்கலா?

கொரோனா அச்சம்,பொருளாதார மந்தம் ஒருபக்கம் என்றால் மறுபக்கம் எமாற்றம் தரும் எதிர்பார்ப்புகள். ஒரு மருத்துவரைப் பார்த்த்து சிகிச்சையை ஆரம்பிப்பார்கள். கர்ப்பம் ஆகாவிட்டால் உடனே மருத்துவரை மாற்றுவார்கள். புதிதாக சிகிச்சை எடுக்கப் போனால் அங்கு முதல்ல இருந்து லேப்டெஸ்ட், ஸ்கேன் என்று  ஆரம்பிப்பார்கள். இதனால் கர்ப்பம் அடைவது தள்ளிப் போகும் .நேரம் வீணாகும் .செலவும் அதிகரிக்கும்.

எப்போதுதான் மருத்துவரை மாற்றலாம்?

 என்னிடம் பத்து பதினைந்து வருடங்கள் கூட தொடர்ந்து சிகிச்சை பெற்று குழந்தை பெற்றவர்கள் இருக்கிறார்கள். நல்ல மருத்துவ மையத்தை தேர்ந்தெடுத்து அவர்களின் சிகிச்சையை தொடர்வது முக்கியம். குறைந்தபட்சம் ஓராண்டாவது ஒரு மருத்துவரை தொடர வேண்டும்.

திருமண வயதை 21 ஆக உயர்த்தி உள்ளது சரிதானா?

நாடெங்கிலும் பதினைந்து பதினாறு வயதில் குழந்தை திருமணங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இருபத்தொரு வயது என்பது மருத்துவரீதியாக சரியானதுதான். இதனால் உடல் குழந்தை பெறுவதற்கு தகுதி அடையும் .பெண்கள் படித்து சுயமாக வாழக்கூடிய நிலைக்கு உயர்வார்கள்.இளம் வயது கர்ப்பம் தவிர்க்கப்படும்.

இன்னொரு பக்கம் தாமதமான திருமணங்களும் நடைபெறுவது வருத்தம் அளிக்கிறது.கல்வி,வருமானம்,குடும்பச் சூழலால் மிகவும் தாமதமாகும் திருமணங்களால் குழந்தைப்பேறு சிக்கலாகிறது.இதுவும் நல்லதல்ல.

கண்மணி கருத்தரிப்பு மையத்தின் சிறப்பு என்ன?

32 வருடங்களாக கருவியல் விஞ்ஞானியாக செயல்பட்டு வருகிறேன் .மற்ற கருத்தரிப்பு மையங்களுக்கு வழிகாட்டும் வகையில் முன்னோடி ஆராச்சி நிறுவனமாக இயங்கி வருகிறது.

எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம்,ராமச்சந்திரா பல்கலைக்கழகம்,சென்னைஐ.ஐ.டி.,மும்பை ஐ.சி.எம்.ஆர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் போன்ற உயர் அமைப்புகளோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு நவீன ஆய்வு மற்றும் குழந்தையின்மை சிகிச்சை மையமாக விளங்கி வருகிறது.மத்திய மாநில அரசுகளின் அனுமதியோடு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

ஸ்டெம்செல் ஆராய்ச்சி,அதிநவீன தொழில் நுட்ப சாதனங்கள்,அனுபவமும் தகுதியும் நிறைந்த மருத்துவர்கள்,நிபுணர்கள் ஒரு குழுவாக சிகிச்சை அளிப்பது வெற்றிக்கு அடிப்படை காரணங்கள் என்றார் டாக்டர் முத்தையா.வாழ்த்து கூறி விடை பெற்றோம்.

சந்திப்பு:பவித்ரன்