ஆயுளை நீட்டிக்கும் அற்புத மூலிகை சீந்தில். இதன் கிழங்கை நெய் வடிவில் காய்ச்சி, உணவு வகைகளில் சேர்த்துவர, பசித்தீ அதிகரித்து வயிற்று மந்தம் நீங்கும். தகிக்கும் தாகத்தையும் கொதிக்கும் உடல் வெப்பத்தையும் குறைக்க, நெற்பொரியோடு சம அளவு சீந்தில் சேர்த்து, தண்ணீரி லிட்டுக் கொதிக்கவைத்த இதமான பானத்தைப் பருகலாம்.

இதன் கிழங்குக் குடிநீர், சுரத்தைக் குறைக்கும் நேரடி மருந்து. செரிமானக் கருவிகள் சோர்வடைந்து, பசியும் ருசியும் இல்லாமல் அவதியுறும் போது, காய்ந்த சீந்தில் கொடி, லவங்கப்பட்டையை மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி, ‘ஊறல்-பானத்தை’த் தயாரித்து, செரிமானத்துக்கு உற்சாகமூட்டலாம்.

நீரிழிவு நோயில் உண்டாகும் அதிதாகத்தைக் குறைக்க சீந்தில் உதவுகிறது. இன்சுலின் சுரப்பை அதிகரித்து, அளவுக்கு அதிகமாக குளுக்கோஸ் உற்பத்தியாகும் காரணிகளைத் தடுத்து, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க சீந்தில் உதவும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எலும்புகளுக்கு ஊட்டத்தைக் கொடுப்பதோடு, எலும்புகளின் திண்மையை அதிகரித்து முதிர்ந்த வயதிலும் வீறுநடை போட சீந்தில் துணை நிற்கிறது. புற்று செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு, புற்று நோயின் அதிகாரத்தைக் குறைக்கும். தனது எதிர்-ஆக்ஸிகரணி செயல்பாடு மூலம், நமது உடல் உறுப்புகளின் செயல்திறனைப் பன்மடங்கு அதிகரிக்கிறது.

உள்ளங்கை, பாதங் களில் தோன்றும் எரிச்சலுக்கு, சீந்தில் சூரணத்தைத் தண்ணீரிலிட்டுப் பருக, எரிச்சலுக்கு நிவாரணம் கிடைக்கும். தலைபாரம், மூக்கில் நீர்வடிதல், அடுக்குத் தும்மல் போன்ற பீனச (சைனசைடிஸ்) குறிகுணங்களுக்குச் சீந்தில் சிறப்பான பலன் அளிக்கும். சீந்தில் துணைகொண்டு தயாரிக்கப்படும் ‘சீந்தில்-சுக்கு பால் கஷாயம்’, வாத நோய்களுக்கான மருத்துவப் பொக்கிஷம். சீந்தில், இஞ்சியின் நுண்கூறுகள், சித்த மருத்துவத்தின் கூட்டு மருத்துவத் தத்துவத்துக்கு ஆதாரம். மெலிந்த உடலுக்கு வலுவைக் கொடுக்க, சீந்தில் சூரணத்தோடு பூனைக்காலிச் சூரணத்தைச் சிறிதளவு சேர்த்துப் பாலில் கலந்து சாப்பிடலாம்.

சீந்தில் கொடியிலிருந்து நுணுக்கமாக உருவாக்கப்படும் ‘சீந்தில் சர்க்கரை’ எனும் சித்த மருந்து, தோல் நோய் முதல் நீரிழிவு நோய்வரை கட்டுப்படுத்தும் திறமை வாய்ந்தது. தோல் நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் சித்த மருந்துகளில், சீந்தில் சர்க்கரையின் சேர்மானம் மருந்தை மேலும் வீரியமாக்கும். இளம் சீந்தில் தண்டைவிட, கசப்பு ஊறிய முற்றிய சீந்தில் கொடிக்கே மருத்துவக் குணங்கள் அதிகம். முதிர்ந்த சீந்தில் கொடியைக் காயவைத்துப் பொடித்து, கற்கண்டுத் தூள் சேர்த்து, பாலில் கலந்து பருகுவது உடலை உரமாக்கி, ஆயுளை அதிகரிப்பதற்கான டானிக் ஆகும்.