பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் முடிந்த அளவு நேரம் செலவிட வேண்டும். குழந்தைகளோடு உட்கார்ந்து பேச வேண்டும். விளையாட வேண்டும். குடும்பத்தோடு உட்கார்ந்து பேச வேண்டும். குழந்தைகள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும். குழந்தைகளோடு நேரம் செலவிட்டால்தான் அதன் பிரச்னைகள் தெரியவரும். பெற்றோர்கள் பிஸியாகி விடுவதால் நிறைய குழந்தைகள் கெட்ட நண்பர்களுடன் சேர்ந்து சிகரெட், பாக்கு போன்ற போதை வஸ்துகளுக்கு ஆளாகிறார்கள். மனதில் உள்ள பிரச்னையை வெளியில் சொல்ல முடியாமல் மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள்.

தூக்கம்

குழந்தைகள் கட்டாயம் நன்கு தூங்க வேண்டும். பள்ளிக்கூடம் போகிற குழந்தைகள் சுமார் 8 மணி முதல் 9 மணி நேரம் ஒருநாளைக்கு தூங்க  வேண்டும். நன்கு தூங்கினால்தான் குழந்தை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். நன்கு தூங்காத குழந்தைகளிடம் அதிக கோபம், டென்ஷன், சுறுசுறுப்பின்மை போன்ற அறிகுறிகள் காணப்படும். இரவு 9 மணி ஆகிவிட்டால் பெற்றோர்கள் குழந்தைகளைப் பல் துலக்கி விட்டு, பாத்ரூம் போகச் சொல்லிட்டு படுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல் குழந்தைகளைக் காலையில் சரியான நேரத்தில் எழுந்திருக்கச் சொல்ல வேண்டும்.

தொ(ல்)லைக்காட்சி

தற்போது குழந்தைகள் விடுமுறை நாட்களிலும், இரவுப் பொழுதிலும் தொலைக்காட்சி பார்ப்பது மிக அதிகமாகி விட்டது. குழந்தை ஒருநாளைக்க ஒரு மணி நேரத்திற்கு மேல் தொலைக்காட்சி பார்க்கக் கூடாது. அவ்வாறு அதிக நேரம் டிவி பார்க்கும் குழந்தைகள் படிப்பில் மந்தமாகவும், ஞாபக சக்தி குறைந்தும், கலகலப்பின்றி இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்போது ஸ்மார்ட் போன், ஆன்டிராய்டு போன் போன்றவற்றை குழந்தைகளிடம் விளையாடக் கொடுத்து விடுகின்றனர். இது டிவி பார்ப்பதைவிட அதிக ஆபத்தானது.

விளையாட்டு

குழந்தைகளுக்கு படிப்பைப் போல் விளையாட்டும் ரொம்ப அவசியம். விடுமுறை நாட்களிலும், பள்ளிவிட்டு வீடு வந்தவுடனும் குழந்தைகளைப் பெற்றோர்கள் விளையாட அனுமதிக்க வேண்டும். விளையாட்டால் குழந்தையின் மன இறுக்கம் மற்றும் உடல் இறுக்கம் குறையும். குழந்தை புத்துணர்ச்சி பெறும். பிற குழந்தைகளுடன் விளையாட அனுமதிக்கும்போது பழகும் தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறமை போன்றவை ஏற்படும்.

கல்வி

ஆங்கில கல்வி மோகம் பெற்றோர்களை ஆட்டிப் படைக்கிறது. இங்கிலீஷ் மீடியத்தில் சேர்த்தாலே தங்கள் குழந்தைகள் பெரிய ஆளாக வந்து விடுவார்கள் என்ற மூடநம்பிக்கை சமூகத்தில் நீக்கமற நிறைந்திருக்கிறது. ஆங்கிலம் ஒருமொழிதான். அது அறிவல்ல என்பது நிறைய பெற்றோர்களின் மண்டையில் இன்னமும் ஏறாமல் இருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் திறமை அறிந்து அதை தமிழ் மீடியத்திலோ அல்லது ஆங்கில மீடியத்திலோ சேர்க்க வேண்டும். படிப்பில் மந்தமாக உள்ள குழந்தைகளை ஆங்கில மீடியத்தில் இருந்து தமிழ் மீடியத்திற்கு மாற்றுவதுதான் நல்லது. படிப்பில் மந்தமாக உள்ள குழந்தைகள் பொதுவாக தன்னம்பிக்கை இழந்து தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பார்கள். அவர்களை அந்நிய மொழியான ஆங்கில மீடியத்தில் சேர்த்துவிட்டு, ஒழுங்காப்படி என்று நச்சரிப்பதாலேயோ, தண்டிப்பதாலேயோ ஒன்றும் நடந்து விடப் போவதில்லை. ஆனால் அந்தக் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு படிப்பின் திறமை மேலும் குறைய வாய்ப்புள்ளது. எனவே படிப்பில் மந்தமாக உள்ள குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவதோ, கேலி பேசுவதோ கூடாது.  உன்னால் முடியும், நீ நன்றாகப் படித்து முன்னுக்கு வந்துவிடுவாய் என்று உற்சாகப்படுத்த வேண்டும். அவர்களிடம் நேர்மறையாகத்தான் எப்போதும் பேச வேண்டும். எதிர்மறை பேச்சு என்பது கூடவே கூடாது.