ன் அப்பாவிற்கு வயது 75. நீண்ட நாட்களாக சர்க்கரை நோய் உண்டு. சமீபத்தில் திடீரென்று மூச்சு விட சிரமப்பட்டார்.மருத்துவமனையில் சேர்த்தோம்.ஈ.சி.ஜி.எடுத்துப் பார்த்து மாரடைப்பு வந்து உள்ளது என்று சொன்னார்கள்.வலி எதுவும் இல்லை.வலி இல்லாமலே ஹார்ட் அட்டாக் வருமா?

-என்.கந்தன் அருள், தேவகோட்டை.

ஒரு சிலருக்கு மாரடைப்பின் அறிகுறிகள் ஏதுமின்றி மறைந்திருக்கும். இவர்களுக்கு நெஞ்சுவலியோ, மாரடைப்பு சார்ந்த எந்த விதத் தொல்லைகளுமே இருக்காது. ஆனால் ஈ.சி.ஜியில் மாரடைப்பு ஏற்பட்டது தெரிய வரும். இதை வலியின்றி வரும் மாரடைப்பு (Silent heart attack) என்று கூறுவார்கள். வயதானதால் இதெல்லாம் வாயுத் தொல்லை என்று அலட்சியப்படுத்த வேண்டாம். அலட்சியம் மரணத்தில் கூட முடியலாம்.

நெஞ்சு வலி இல்லாமலும் மாரடைப்பு வர பல்வேறு காரணங்கள் உள்ளன.

 முதுமையில் நரம்புகள் தளர்வடைவதால் வலியை உணரும் திறனை அவை இழக்கின்றன. முக்கியமாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நெஞ்சுவலி அதிகமாகத் தெரிவது இல்லை.

வயதாக ஆக மூன்று பெரிய ரத்தக் குழாய்களைத் தவிர, சிறிய ரத்தக் குழாய்கனின்  மூலமும் இதயத்துக்கு ரத்தம் செல்கிறது. அதனால் பெரிய ரத்தக் குழாய்கள் அடைபட்டாலும் சிறிய ரத்தக் குழாய்கள் வாயிலாக ரத்தம் செல்கிறது. ஆகவே நெஞ்சுவலி மிகுதியாக வருவதில்லை.

முதுமையில் சிலருக்கு மறதி நோய் இருக்கும். அதனால் தனக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியைக் கூட சிலர் சொல்ல மறந்துவிடுகிறார்கள்.

பெற்று வளர்த்தவர்களை அன்போடு கவனித்து உதவுங்கள்.