டாக்டர்.ஜி.ராஜமோகன்.
 
டல்நல குறைவு என்பது வாழ்வின் இருண்ட பகுதி. இருண்டு பகுதியை யாருக்கும் பார்க்க விருப்பம் இருக்காது; இருக்கவும் முடியாது.சிறந்த உடல்நலம் என்பது நாமே எடுத்துக் கொள்ளும் அக்கறையை பொறுத்துதான் அமையும்.
 
யார் நோய்வாய்ப்பட்டாலும், மருத்துவரிடமிருந்து தனக்கு மிகச் சிறந்த சிகிச்சை கிடைக்கும் என்றே நம்புவார்கள். பரந்து விரிந்த இந்த உலகத்தில் உங்களுக்கும் குறையற்ற மருத்துவர் கிடைப்பார்; கிடைக்க வேண்டும்.அதாவது உங்களுக்காக நிறைய நேரம் ஒதுக்கக்கூடிய, அளவற்ற மருத்துவ அறிவு நிரம்பிய, உங்களிடம் மிகக்குறைவான கட்டணமே பெற்றுக்கொள்ளும் மருத்துவர் கிடைக்க வேண்டும்!
 
 ஆனால், அப்படி ஒரு மருத்துவரை இன்று காண்பது மிகவும் அரிது என்பதால் உங்கள் உடலின் மீது அக்கறை எடுத்துக்கொள்வதில் நீங்கள்தான் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.
 
மருத்துவரை முழுமையாக நம்பி போகிறோம்.அவர் எப்படி இயங்குகிறார்…
 
நோயாளியிடம் பேசுவது என்பதே அரிதாகி விட்டது. பெரும்பாலான பெரிய டாக்டர்கள் இப்பொழுதெல்லாம் சும்மா சுற்றிவருகிறார்கள். ஸ்கேன், எக்ஸ்ரே, ரத்தப்பரிசோதனைகள் எல்லாவற்றையும் வாசித்து மருத்துவம் முடிவு செய்யப்படுகிறது. 
 
நோயாளி சொல்வதை கவனித்து கேட்டால் போதும்.அவரே தனக்கு என்ன நோய் என்பதை சொல்லிவிடுவார்.அவரது பேச்சு தான் மிகவும் முக்கியம்.
 
பெரும்பாலான நோய்கள் மனதில் தோன்றி மனதில் முடிவனவே. நோயாளியின் கவலை, மன அழுத்தம், பயம், இவற்றை அறிந்து மருத்துவம் தந்தால்,சிகிச்சை அளித்தால் குணமாக்குதல் எளிதாகும்.பாதிக்கப்பட்டவரின்  குடும்பம், சூழல், தொழில், நம்பிக்கை ஆகியன அறிவது நோய் தீர்ப்பின் அவசியத் தேவைகள்.
நோயாளிகளுடன் பேசுவது (Talking to Patients) எனும்  கலையை மருத்துவ மாணவர்கள் கற்பது பயனுள்ளது.
 
சென்ற தலைமுறை, நோயாளிகள் சொல்வதைக் கேட்டு
மருத்துவத்தை முடிவு செய்த மருத்துவப் பேராசிரியர்களைப் பார்த்து உருவானது. இன்று அந்தச் சூழலே இல்லாமல் போய்விட்டது. அத்தகைய பயிற்றுவிப்பு நோயாளிகள் படுக்கையருகே நடக்கும்போது கூட புள்ளிவிபர அறிவிப்புகளே பெரும் பாலும் நடக்கிறது. அத்தகைய பயிற்சி என்பது நோயாளி பேசுவதை கவனமாகக் கேட்டு, நோயாளியைக் கவனித்து, கையால் பரிசோதித்து நடப்பதே. அவர் முகம் கூட உடலினுள் நடக்கும் போராட்டத்தை உணர்த்துவதாக இருக்கக்கூடும். அதுகூட இறுதியான நோய் கண்டுபிடிப்புக்கு உதவக் கூடும்.
 
நோயாளியின் படுக்கை என்பது மருத்துவத்தின் துறைமுகம். நமது அறிவுக்கப்பல் அங்கிருந்துதான் புறப்படும். அங்குதான் வந்தடையும். டாக்டர்களைக் கடவுளாக மக்கள் நம்பிய காலத்தில் அவர்களின் அன்பான கைகளும், கருணைமிக்க பார்வையுமே அவர்களின் கருவிகளாக இருந்தன. மனிதத் தொடுகையின் அன்புக்காக அதிவேக உலகின் மனிதன் ஏங்கும் காலம் இது. 
 
அந்த அன்பான கரங்களின் தழுவலும், கனிவான பார்வையின் இதமும் இன்றும் நாளையும் மனிதரை குணமாக்கும் உன்னதமான அருமருந்து. இந்த உண்மையை உணர்ந்து கற்று, செயலாக்குவதே நல்ல மருத்துவர்களின் கடமை.
 
நோயில் விழும்போது மட்டுமே நமக்கு மருத்துவர் ஞாபகம் வரும். அவருக்கு நீங்கள் நன்றி சொன்னால், இன்னொரு நோயாளியாக உங்களை நினைக்காமல், சிறந்த நல்ல மனிதர் என்று மருத்துவர் எண்ணுவார். இவ்வாறு அவருக்கு நீங்கள் நன்றி கூறும்பட்சத்தில், அடுத்த முறை அவரை சந்திக்கச் செல்லும்போது, உங்களுக்கு வி.ஐ.பி. அந்தஸ்திலான சிகிச்சை கிடைக்கும். உங்களின் பிரச்னைக்குத் தீர்வும் சரியானபடி கிடைக்கும். மருத்துவருக்கும், நோயாளிக்கும் இடையேயான உறவு, திருமண உறவு போன்றதே. பரஸ்பர நம்பிக்கை, உண்மை பேசுதல், நல்ல தகவல் தொடர்பு போன்றவை இருந்தால் மட்டுமே, இருவருக்கும் இடையே யான உறவு சிறப்பானதாக அமையும்.
 
மக்களுக்கு சேவைகள் செய்யும் மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்!