
– டாக்டர் ஜி.ராஜமோகன்.
நவீன உலகின் வரமும் இணையம்(Internet )தான்; சாபமும் இணையம் தான்.செல்போன் பயன்பாடுகள் பிரச்னைக்குரிய ஒன்றாக மாறிவிட்டது.
இதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.இதை தடுக்க தடுப்பு ஊசி எதுவும் இல்லை.
பள்ளிக் குழந்தைகள் முதல் பக்கத்து வீட்டு தாத்தா வரை செல்போன் பயன்படுத்தாதவர்கள் எவரும் இல்லை; தவறில்லை.செல்போனும் இணையமும் நம்முடைய பல வேலைகளை மிக எளிதாக முடிக்க வழி வகை செய்கின்றன.அவற்றின் பயன்பாடுகள் அபரிமிதமாக அதிகரிக்கும் போது நம் உடலும் மனமும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன.
கண் பாதிப்பில் தொடங்கி,கழுத்து வலி,தலை வலி,தூக்கம் இன்மை,படிப்பில் ஆர்வம் குறைவது, யாரிடமும் பேசாமல் தவிர்ப்பது,செல்போன் பேசியபடி வண்டி ஓட்டி விபத்தில் சிக்குவது உட்பட ஏராளமான இன்னல்கள்,சிக்கல்கள்.
இன்டர்நெட் அடிக்ஷன் டிஸ்ஆர்டர்(Internet addiction disorder) என்பது இப்போது அங்கீகரிக்கப்பட்ட ஒரு உளவியல் கோளாறாகவே பார்க்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டுக்கு நாடு விகிதாசாரம் சற்று மாறுபட்டிருந்தாலும் உலகம் முழுவதும் இளைய தலைமுறையினர் சந்திக்கின்ற முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றாக இணையமும், அது சார்ந்த பயன்பாடுகளும் மாறிவருவதை எதிர் கொள்ள தயாராக வேண்டும்.
செல்போனுக்கான நேரம் என்பது இவ்வளவுதான் என்று வைத்துக்கொள்ள வேண்டும்.அதன் பின்னர்,பேசுவதற்கு மட்டும்தான் அதைப் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கும் அப்படித்தான். விளையாட்டு முதல் எதுவாக இருப்பினும் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல்’நோ’ சொல்லிவிட வேண்டும். குடும்பத்துக்கு என்று உள்ள பிரத்யேகமான நேரங்களில் செல்போனை அனுமதிக்காதீர்கள். சமையலறை,டைனிங் டேபிள்,படுக்கையறை போன்றவற்றில் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள்.
தேவையற்ற செயலிகளை அழித்துவிடுங்கள்.சமூக வலைத்தளங்கள் மூலம் சஞ்சலம் ஏற்பட்டால் யோசிக்காமல் வெளியே வந்துவிடுங்கள்.உலகம் ஒன்றும் தலைகீழாகிவிடாது. ஒரு ‘பிரேக்’ எடுத்துக்கொண்டு நன்கு ஆசுவாசப்படுத்திக்கொண்டு பிறகு உள்ளே வாருங்கள்.மனமும் உடலும் புத்துணர்வு பெற்று ஆரோக்கியமாக உணர்வீர்கள். மிதமிஞ்சிப் போகும் எந்தப் பழக்கத்தையும் கட்டுக்குள் கொண்டுவர இப்படியான இடைவெளிகள் அவசியம்தான் நண்பர்களே!

