
டாக்டர் சிவபாலன் இளங்கோவன்,MD(Psychiatrist)
சகமனிதர்களின் மீதும், தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் மீதும் முற்றிலும் நம்பிக்கையிழந்த தருணத்திலேயே ஒருவர் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவை எடுக்கிறார். பெரும்பாலான நேரங்களில் தற்கொலை எண்ணங்கள் வந்தவுடனே யாரும் தற்கொலை முயற்சியை எடுப்பதில்லை. அப்படி எண்ணங்கள் வரும்போது வாழ்வதற்கான காரணங்களைப் பற்றியும்,சக மனிதர்களின் மீது இருக்கக்கூடிய பொறுப்புகளை நினைத்துக்கொண்டும் தற்கொலை எண்ணத்தை நிராகரித்துவிடுவோம்.ஆனால், சகமனிதர்களும், சமூகமும் நம்பிக்கையளிக்கத் தவறும்போது தற்கொலை எண்ணத்திற்குச் செவிசாய்க்கும் கட்டாயத்திற்கு ஒருவர் ஆளாக நேரிடுகிறது.
தற்கொலை என்பது கோழை செயலா?
நிச்சயமாக இல்லை. அது ஒரு உதவிக்கான அழைப்பு. தற்கொலை செய்துகொண்ட பெரும்பாலானவர்கள் அதற்கு முன்பு ஏதேனும் ஒரு முறையாவது தற்கொலைக்கான முயற்சி செய்துகொண்டிருப்பார்கள் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன.ஒரு பெரும் நெருக்கடியில் வெளியேறும் வழி தெரியாமல் ஒருவர் தவிக்கும்போது அதற்கான உதவியை நாடியோ அல்லது நிபந்தனையற்ற ஓர் அரவணைப்பை நாடியோ பலமுறை அவர் சக மனிதர்களிடமும், சமூகத்திடமும் கோரிக்கை விடுக்கிறார்.அந்தக் கோரிக்கை முற்றிலுமாக நிராகரிக்கப்படும் போது,அதிலிருந்து விடுபட எந்த வழியும் தெரியாத ஓர் இருண்ட தருணத்திலேயே அவர் தற்கொலை செய்துகொள்வது என்ற விபரீத முடிவை எடுக்கிறார்.
தற்கொலை எண்ணங்கள் இருப்பவரை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்கமுடியுமா?
நிச்சயமாக முடியும். தற்கொலை எண்ணமிருக்கும் ஒருவர் அந்த எண்ணத்தைத் தன்னுடைய நடவடிக்கைகள் மூலமாகப் பல வகைகளில் சுற்றியுள்ளவர்களிடம் உணர்த்திக்கொண்டே வருவார். நாம்தான் அதைக் கவனிக்க தவறிவிடுவோம் அல்லது அலட்சியப் படுத்தி விடுவோம்.உறவினர்கள்,நண்பர்கள் அக்கறையோடு கவனித்து உரையாடினால், ஆற்றல் சொல்லி உதவினால் நிச்சயமாக தற்கொலைகளை தடுக்க முடியும்.
தற்கொலை எண்ணங்கள் மனநோயின் வெளிப்பாடா?
தற்கொலை செய்துகொள்பவர்களில் மூன்றில் ஒருவருக்கு ஏதேனும் சிகிச்சை செய்யவேண்டிய மனநலப் பிரச்னைகள் இருக்கின்றன
என்கின்றன ஆராய்ச்சிகள். அதனால்தான் தற்கொலைக்கு முயற்சி செய்பவர்களை உடனடியாக மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்துகிறோம். இந்த மனநலப் பிரச்னைகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சையளிக்கும்போது மூன்றில் ஒரு தற்கொலையை நம்மால் தடுக்க முடியும்.ஆனால், தற்கொலை செய்துகொள்ளும் எல்லோருக்கும் மனநலப் பிரச்னைகள் இருப்பதில்லை. சமூகவியல் சார்ந்த, உளவியல் சார்ந்த, உயிரியல் சார்ந்த பல காரணங்கள் தற்கொலைகளுக்கு இருக்கின்றன.என்ன காரணம் என்று கண்டறிந்து அதைச் சரிசெய்வதன் வழியாகவே ஒட்டு மொத்த தற்கொலைகளைத் தடுக்க முடியும்.
மனநல ஆலோசனை வழியாகத் தற்கொலைகளைத் தடுத்துவிட முடியுமா?
மனநல ஆலோசனை தருவது என்பது தற்கொலைகளைத் தடுப்பதில் ஒரு திட்டம் மட்டுமே,அது மட்டுமே முழுமையான தீர்வு கிடையாது.பெருகி வரும் தற்கொலைகளுக்கான சமூகவியல், உளவியல் காரணங்களைப் புரிந்து கொண்டு அதைத் தடுப்பதற்கான முயற்சிகளை சமூகம் முன்னெடுக்கவேண்டும்.பொருளாதார நெருக்கடிகள், வேலை வாய்ப்பின்மை, சம்பளம் குறைப்பு போன்றவை தனி நபர்கள் மீதும் அவர்கள் வழியாகக் குடும்பத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. அதேபோல, கடினமான கல்வித் திட்டங்கள், பாரபட்சமான தேர்வு முறைகள், மதிப்பெண்களைப் பிரதானமாகக் கொண்ட கல்விக்கொள்கைகள் போன்றவை மாணவர்களின் மீது தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவை.
இந்த அதீத சுமைகளைச் சுமக்க முடியாமல் ஒருவர் திணறும்போது அவருடைய புறச்சூழலை சரி செய்யாமல் எப்படி அகச்சூழலை மட்டும் சரி செய்ய முடியும்?
ஒரு சமூகமாக தனி நபரின் மனநலத்தை உறுதி செய்வதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்த பிறகு தனி நபரின் மனநலத்தை மேம்படுத்தும் ஆலோசனைகள் கொடுப்பது பயனுள்ளதாக இருக்குமே தவிர. வெறும் மனநல ஆலோசனை மட்டுமே தற்கொலைகளைத் தடுப்பதில் முழுத் தீர்வு ஆகிவிடாது.

