தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த புத்தாண்டு (2019) சுற்றுச் சூழலுக்கும், உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கும் பொருட்களுக்கு தடை விதித்த புத்தாண்டாக மலர்ந்தது நல்ல விஷயம்தான். பிளாஸ்டிக் கேரி பேக், உணவகங்களில் வாழை இலைக்குப் பதிலாக பயன்படுத்திய பிளாஸ்டிக் அயிட்டங்களுக்கு தடை விதித்து விட்டார்கள். டாஸ்மாக் குடிமகன்களுக்கு சரக்கு, கண்ணாடி டம்ளரில்தான் ஊற்ற வேண்டும். நாலணா பெறாத ‘யூஸ் அண்ட் த்ரோ’ டம்ளர்களை 5 ரூபாய்க்கு விற்று குடிமகன்கள் வயிற்றில் அடித்த பார் முதலாளிகளுக்கு ஆப்புதான். 50 காசு பெறாத வாட்டர் பாக்கெட்டுகளை 6 ரூபாய் என அநியாய விலைக்கு விற்றவர்களுக்கு வயிறு எரியத்தான் செய்யும்.

ஓட்டல்களில் வாழை இலை பயன்பாடு குறைந்து, ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் உணவு பரிமாறினார்கள். பார்சல் என்றால் கண்டிப்பாக பிளாஸ்டிக் பேப்பர்தான். வீடுகளிலேயே கம்ப்யூட்டர் இலை பயன்பாடு கணிசமாகி விட்டது. தற்போது நிலைமை மாறி வாழை இலை பயன்பாடு அதிகரித்து வருகிறது. எந்த சிறப்பு நிகழ்வாக இருந்தாலும் ‘தலைவாழை விருந்து’ வைப்பது நம்மவர்களின் பழக்கம். வாழை இலையில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிக மிக அவசியம் என்று ஆயுர்வேத, சித்த மருத்துவர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.
வாழை இலையை வெறுமனே உணவு பரிமாறுவதற்கான பொருளாக மட்டுமே பார்க்க முடியாது. வாழை இலைக்கென்று சிறப்பான மருத்துவ குணங்கள் உண்டு. வாழை இலையில் வைத்து எந்த உணவை சாப்பிட்டாலும் சாப்பிடுவதற்கான ஆர்வத்தை தூண்டுவதோடு, ருசியையும் அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. வாழை இலையின் மேல் உள்ள பச்சையம் உணவை எளிதில் ஜீரணமாகச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டதாக இருக்கிறது. நன்கு பசியை தூண்டுகிறது.
சூடான உணவுகள் வாழை இலையில் பரிமாறப்படும்போது அதில் இருக்கும் பல்வேறு விதமான ஊட்டச் சத்துக்கள் உணவோடு கலந்து நம் உடலுக்குள் சென்று சேர்கிறது. பரிமாறப்படும் உணவில் ஏதேனும் கிருமிகள் இருந்தாலும் அவற்றை அழிக்கும் திறன் வாழை இலைக்கு உண்டு. அதனால்தான் ‘ஆன்டிபாக்டீரியல்’ என்கிறார்கள்.
வாழை இலை சரும நோய்களை தடுப்பதுடன் சருமம் பொலிவு பெறவும் உதவுகிறது. இன்னும் நிறைய நன்மைகள் உண்டு. நான் எப்படிப் போனேனோ.. அப்படியே மீண்டும் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என்கிறது வாழை இலை.
– சேகர்

