கலைமாமணி டாக்டர்.எஸ்.அமுதகுமார். எம்.டி.

சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட்டால் அந்த சாப்பாட்டு ருசியே தனி.அதிலும் குறிப்பாக சாதம்,பருப்பு,நெய் கூட்டணி இருக்கிறதே! அது ஒரு மகா கூட்டணி. அந்த ருசி அமோக ருசி என்று சொல்லலாம்.

பொன் மஞ்சள் நிறத்திலிருக்கும் நெய், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் அதிகமாக உபயோ கப்படுத்தப்பட்டிருக்கிறது. உடலுக்கும், மனதுக்கும் தெம்பையும், உற்சாகத்தையும் கொடுக்கும் ஒரு அற்புதப் பொருள், நெய்,பால், தயிர், மோர், வெண்ணெய்… இந்த வரிசையில்தான் நெய் உருவாகிறது. சுத்தமான நெய் தயாரிப்பது மிக கடினம்.

அதனால் நெய்யின் விலையும் அதிகம். எனவேதான் நெய் ‘திரவத் தங்கம்’ (Liquid Gold) என்று அழைக்கப்படுகிறது. வெண்ணெயின் வாசம், நெய்யில் இருக்கும். ஆனால் பால் மற்றும் பால் பொருட்களின் ஒருவித வாடை, நெய்யில் இருக்காது. திருமண விசேஷங்களிலும், முக்கிய விருந்துகளிலும் நெய் அதிகமாக உப யோகிக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே, நெய் என்றாலே கொழுப்பு என்ற பயமும் இருந்திருக்கிறது.

சருமம் ஆரோக்கியமாக, பளபளப்பாக இருக்கவும், ஜீரணம் நல்லமுறை நடைபெறவும், ஞாபகசக்தி அதிகமாகவும், மூளையின் செயல்பா டுகள் சுறுசுறுப்பாக நடக்கவும், கண்கள் ஆரோக்கியமாக இருக்கவும், உடலில் ஏற்படும் புண், காயம் போன்றவை விரைவில் குணமாவதற்கும் நெய் உபயோகமாக இருக்கின்றது.

பள்ளிக்குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை உணவில் நெய் சேர்த் துக்கொடுப்பது, மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவும்.

நெய், இரைப்பையில் உள்ள அமிலங்களை அதிகமாக சுரக்கச் செய்கிறது. இதன் மூலம் ஜீரணம் நல்லபடியாக, எளிதாக நடக்க மிகவும் உதவியாக இருக்கிறது. மூலிகை மருந்துகள், சூரணம், லேகியம், நாட்டு மருந்து, பாட்டி மருந்து, கை மருந்து முதலிய எல்லாமே நெய் சேர்த்துத்தான் தயாரிக்கப்படுகின்றன.

இந்த மருந்துகள் அனைத்துமே நெய் மூலமாகத்தான் உடலில் அனைத்து பாகங்களுக்கும் போய்ச் சேருகிறது. நெய்யில் கரையக்கூடிய கொழுப்பு அதிகமாக இருப்பதால் அது உடலுக்கு நல்லதல்ல என்று சொல்வதுண்டு.

ஆனால்,சமையலறையில் இருக்க வேண்டிய ஏழு முக்கியமான நல்ல கொழுப்புள்ள உணவுகளில் நெய்யும் ஒன்று என்கிறது நெய் தொடர்பான ஆராய்ச்சி. இந்தியாவில் நெய் அதிகமாக சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது.

வெண்ணெயை அதிக நாள் வைக்க முடியாது. நெய்யை நீண்ட நாட்கள் பாதுகாக்க முடியும்.

 பொரித்தல், வறுத்தல் போன்றவைகளுக்கும் உபயோகப்படுத்தலாம். ஆயுர்வேத மருந்துகளில் நெய் தான் முக்கியமானது. நெய் கலக்காத ஆயுர்வேத மருந்துகளே இல்லையென சொல்லலாம். மலச்சிக்கல் சரியாவதற்கும், வயிற்றுப்புண் ஆறுவதற்கும் நெய் மிகவும் உபயோகமாக இருக்கிறது.

நெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்கள் உடம்பில் சேர்ந்துள்ள மற்ற கொழுப்புகளை எரித்து கரைத்து சக்தியாக்கி உபயோகப்படுத்த உதவுகிறது. உடம்பில் ஏற்கனவே சேர்த்துள்ள கொழுப்பை கொஞ்சம், கொஞ்சமாக கரைப்பதற்கு, நெய் உதவு வதால் உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாக குறைய வாய்ப்புள்ளது.

ஆனால் எல்லோருக்குமே நெய் சாப்பிட்டால் உடல் குண்டாகும் என்ற பயம்தான் அதிகமாக இருக்கிறது. நெய் முழுக்க முழுக்க கொழுப்பு என்பதால், இஷ்டத்திற்கு அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல.

குறைவான அளவில் நெய் உபயோகிப்பது குடலுக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது, எனவே, தினமும் முடிந்தவரை உணவில் நெய்யை குறைவான அளவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

நெய் கொழுப்பை அதிகரித்து விடும், நெய் ரத்தக்குழாயை அடைத்துவிடும், என்றெல்லாம் பயப்படாமல் குறைவான அளவு நெய்யை உணவில் வாரத்திற்கு ஒரு முறை சேர்த்துக்கொள்வது நல்லது. அளவான நெய்யும் ஆரோக்கியம் தகும்.