
தினசரிச் செயல்பாடு பழக்கமாக மாற வேண்டும். அதுவே தொடர்ந்தால் வழக்கமாகிவிடும்.
எதுவும் பழக்கமாகி வழக்கமாக 48 நாள்கள், அதாவது ஒரு மண்டலம் அந்தச் செயல் தொடர வேண்டும் என்பார்கள்.
எப்போதும் மனம் சொல்வதைக் கேட்காமல், புத்தி சொல்வதை அதாவது நம் அறிவு சொல்வதைக் கேட்க வேண்டும்.
மனம் ஊசலாடும் தன்மை கொண்டது . புத்தி கறாரானது.
மனம் நழுவி ஓடும், புத்தி இழுத்துப் பிடித்து எச்சரிக்கும். எப்படி?
“இன்னும் நாலு நாள் இருக்கு மெதுவா கரண்ட் பில் கட்டிக்கலாம் “என்று மனம் ஒத்தி வைக்கும். நாள் நெருங்கும் போது, “நாளைக்கு பணம் கட்டா விட்டால் ஃப்யூஸைப் பிடுங்கிடுவான் ”என்று புத்தி எச்சரிக்கும்.
அப்படித்தான் ‘காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின், காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே ‘என்று நடைப்பயிற்சியின் நன்மை பற்றிச் சின்ன வயதில் பாடல் படித்ததும் நினைவில் இருக்கிறது.
நடைப்பயிற்சி உடல் நலத்திற்கு நல்லது என்று நாலா பக்கமிருந்தும் அறிவுரைகள் வந்தாலும், அதைத் தொடங்கித் தொடர்வது என்பது சாதாரணமாகத் தெரியவில்லை .ஒவ்வொரு நாளும் ஒத்தி வைத்துக் காரணங்கள் கற்பித்து, அவ்வப்போது எழுந்து நிற்கும் மனத்தடைகளை உடைத்து வெளியேறுவது என்பது சாதாரணம் அல்ல.அதுவும் பழக்கமாக்குவது என்பது பெரிய சவால்.
“சுகர் அதிகமாக இருக்கு சுகர கண்ட்ரோல் பண்ண வாக்கிங் போய் ஆகணும் “என்றுபெரிய தொப்பை கொண்ட டாக்டர் எச்சரித்ததும் மூளையில் அலாரம் அடித்தது.
ஒரு வழியாக நடைப் பயிற்சி தொடங்கி விட்டேன்.
சாலைகளில் நீண்ட தூரம் நடக்கலாமா?காலை நேரங்களில் கூட்டம் அதிகம் இல்லை என்று தாறுமாறாகப் பைக்கர்ஸ் பறப்பார்கள்.காலையிலேயே புல்லிங்கோ அட்டகாசம்.வண்டி முழுக்க மூட்டைகள் நிறைத்து,காய்கறி வண்டிகள் பறக்கும். சாலை வேண்டாம் குறுக்கீடுகள்,கவனம் சிதறிவிடும், ரிஸ்க் எடுக்க வேண்டாம்.
வேக வாகனங்களை ஓட்டுபவர்கள் தொல்லையில் இருந்து விடுபட பூங்காக்கள் தான் நல்ல தெரிவு.
சென்னை நகரில் உள்ள பூங்காக்கள் ஒரே டெம்ப்ளேட் ரகமாக இருக்கும்.அடுத்தடுத்த பூங்கா சென்றாலும் அதே மாதிரி தோற்றம் அதே மனிதர்கள் .
சரி என்று,பூங்காவில் நடக்க ஆரம்பித்தால்,அங்கேயும் கூட்டம்தான். ஒரு 50 பேராவது நடப்பார்கள்.நடப்பவர்கள் எல்லாம் நடப்பவர்களா ?
நடையாளர்களிடம்தான் எத்தனை எத்தனை மனிதர்கள்.நடப்பவர்கள் எல்லாம் நடப்பவர்களா ?எதிரே கடப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் ?
பேசிக் கொண்டே நடப்பவர்கள் ,வேகமாகக் கைவீசிக்கொண்டே நடப்பவர்கள், தரைக்கே வலிக்காமல் நடப்பவர்கள்,அலைபேசியும் கையுமாக அலைபவர்கள்,ஹெட் போனில் பாட்டு கேட்டுக்கொண்டு,இணையாக நண்பர்களுடன் ,முன்பின் பேசிக்கொண்டு ,
தும்மலை இருமலை காற்றில் சிதற விட்டுக் கொண்டு, யானை போல அசைந்து அசைந்து,பல்வேறு வகை வியர்வை வாடைகள், செண்ட் மணங்களைக் காற்றில் பரப்பிக் கொண்டு,
நண்பர்கள் புடை சூழ ,அசையும் பின்புறங்களுடன் , சுற்றிலும் தொண்டர்கள் நடுவே தலைவர் தோரணையில்,தணிந்த குரலில் கடலை போட்டுக்கொண்டு, வெறுங்காலுடன், காலணி சத்தத்தோடு, ஷூவோடு சரக் சரக் ஒலியோடு, எடை கூடி ஒரு பக்கம் குடைசாய்ந்து என்று
அந்த நடைகளில் பல நடைகள்.கம்பீரநடை என்று எதுவும் இல்லை. எல்லாமே உடல் நலம் பற்றிய பயத்துடனான பதற்றம் கவலை கலந்த நடைகள்.
நடப்பவர்களின் தோற்றத்தைப் பார்த்தபோது ஆண் பெண் பலரும் தொப்பை சுமந்தவர்களாக இருந்தார்கள். எல்லாரும் மடிப்பண்டம் வைத்துக் கட்டிக் கொண்டது போல் தோன்றியது.
உடல் உழைப்பு குறைந்த வாழ்க்கை முறையால்
கணினி, கைப் பேசி ஆதிக்கத்தால்
கிடைத்த பலன் இது.சொகுசு வாழ்க்கையில் கிடைத்த சோகம் இது.
நடப்பதற்குத் தாமதமாக செல்லும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் காட்சிகள் மாறித்தோற்றம் காட்டும்.ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒவ்வொரு வகை அடுக்குகளில் மனிதர்கள் வருவார்கள். அதிகாலையில் வருபவர்கள் வேலைக்குச் செல்பவர்கள் .அவர்கள் நடையில் பரபரப்பு தோன்றும். காலை 8 மணிக்கு மேல் வருபவர்கள் வீட்டில் இருப்பவர்கள் ,அல்லது ஓய்வர்கள்.சாவகாசமாக நடப்பார்கள்.
மாலை வேளை வேறு மாதிரியாக இருக்கும். குழந்தைகளை, சிறுவர்களைச் சில பெரியோர்கள் அழைத்து வருவார்கள் . அங்கே பிள்ளைகளை விளையாட வைப்பார்கள்.முதுமையிலும் அவர்களுக்கான அசைன்மெண்ட் அது.பிள்ளைகள் தாத்தா பாட்டிகளுக்குப் போக்கு காட்டுவார்கள்.சொன்ன பேச்சு கேட்காமல் அட்டகாசம் செய்வார்கள். பேரப் பிள்ளைகளிடம் கெஞ்சிக் கொஞ்சுவது போல் நடித்தாலும் அது வீட்டின் நிர்பந்தம் என்பதை முதியவர்களின் ஆயாச முகங்கள் காட்டிவிடும்.
எங்கள் பகுதி சினிமாக்காரர்கள் அதிகம் இருப்பதால் காலை வேளைகளில் அங்குள்ள உடற்பயிற்சி சாதனங்களை வைத்து தண்டால், பஸ்கி எடுப்பவர்களையும், குரங்கு போல் தாவிக்கொண்டு, வவ்வால் போல் தொங்கிக்கொண்டு உடற்பயிற்சி செய்பவர்களையும் பார்க்கலாம்.
ஒவ்வொரு பூங்காவிலும் ஒரு சிறிய மேல்கூரை கொண்ட மேடை உண்டு. அங்கே யாராவது யோகாசனம் கற்றுக் கொடுப்பார்கள்.பத்து பேர் செய்து கொண்டிருப்பார்கள். அவர்களது மூச்சுப் பயிற்சி, ஹா ஹா என்று சிரிப்பது, கை தட்டுவது போன்றவை மற்றவர்களுக்கு வேடிக்கையாக இருக்கும்.அங்கிருக்கும் சிறிய மைதானத்தில் சிலர் ஷட்டில் விளையாடுவார்கள்.ஒரே கூச்சலும் கும்மாளமுமாக இருக்கும்.அவர்களின் தோற்றத்தில் சிறிது மேட்டிமைத்தனம் தென்படும்.
நடைப்பயிற்சி முடித்த முதியவர்கள் இருவர் ஒரு கல் பெஞ்ச்சில் உட்கார்ந்து கொண்டு கையில் தினத்தந்தி, தினமணி வைத்துக்கொண்டு செய்தி விமர்சனம் செய்து கொண்டிருப்பார்கள்.
பூங்கா நடைப்பயிற்சி நேரம் ஒரு தொழிற்சாலை போல் இயங்கிக் கொண்டிருக்க, இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று பூங்கா தோட்டக்காரர் மிருதுவாக இலை, தழைகளைப் பெருக்கிக் கொண்டு இருப்பார். அவர் ஒரு நாளும் நடப்பதில்லை.
கண்ணும் கருத்துமாக இருப்பது போல் நடையில் நாமும் கவனமாகக் கடந்து மிதமான நடையில் நடக்கும் போது காதில் வந்து உரசிவிழும் உரையாடல்கள்தான் எத்தனை விதங்கள் .
இந்த எலக்சன் முன்னாடி மாதிரி இருக்காது பாரு. டோட்டலா எல்லாம் மாறிடும்.(அரசியல்)
கனடாவில் ரூல்செல்லாம் இப்ப மாத்திட்டாங்க.போன மாதிரி இப்ப இல்ல. (வெளிநாடு சென்ற அனுபவம்)
சூரியகுமார் யாதவ் நாலே பந்துல சுருண்டுட்டானே அவனை நம்பக் கூடாது. ( கிரிக்கெட்)
பக்கா பேப்பர். எந்தக் கவலையும் படாதீங்க.முடிச்சிடலாம். (தரகு)
உன் மருமக எவ்ளவோ மேலு. என் வீட்டுல வந்து பாரு (குடும்ப விவகாரம்)
பார்ட்டிய வுட்றாத பல நாளா சொல்லிட்டே இருக்கேன் ஓகேன்னா சொல்லுங்க ஒரு வாரத்துல ரிஜிஸ்ட்ரேஷன். (புரோக்கர்)
டெய்லி ஆபீஸ் லேட்டா வரான்.
அவன் சரிப்பட்டு வர மாட்டான் போல இருக்கு. இந்த வாரத்தில சொல்லிடு.வேற ஆளைப் பார்த்துக்கலாம். (அலுவலக நிர்வாகம்)
எனக்காக வெயிட் பண்ண வேண்டாம்.பேங்க் போய் அமௌன்ட் கட்டிடு நான் வந்துடறேன். (பிஸினஸ்)
சிரிச்சி பேசுறான்னு அவள நம்பாதே உஷாரா இரு. (கோள் மூட்டும் அறிவுரை)
இப்பல்லாம் என்ன பாட்டு போடுறான்? நான் சொல்றேன் ஒரு பாட்டு அதைக் கேளுங்க. அதுல அடடா!
(நாஸ்ட்டால்ஜியர்கள்)
இந்த சிஸ்டமே அப்படித்தான்.தப்பு பண்ண,கரப்ஷனுக்கு எல்லா லூப் கோலும் இருக்கும். (நாட்டு நடப்பு )
நல்ல மேட்டர் வச்சிருக்கேன்.
அடுத்த மாதம் ஓகே ஆய்டும்னு நினைக்கிறேன்.
நீயும் பல வருஷமா இதைத்தான் சொல்றே?நமக்குன்னு டைம் வர வேண்டாமா? (சினிமாக்காரர்)
நேத்து எங்க ஆளயே காணோம் ? ஹேங்கோவரா?
அப்டி எல்லாம் ஒன்னும் இல்ல.கொஞ்சம் அதிகமாயிடுச்சு. ( வீக் எண்ட் வீக்னஸ்)
அப்பப்பா காதில் விழும் உரையாடலிலிருந்து நாட்டு நடப்பு, மனித இயல்பு ,குடும்ப விவகாரம் அனைத்தும் தெறித்து விழுகிறதே.வேற்றுமைகள் நிறைந்ததல்லவா நம் நாடு?
நம் மனக்குரலையும் கட்டுப்படுத்த முடியாதே.ஒவ்வொருவரிடமும் ஒன்று சொல்லத் தோன்றியது.
பேசிக் கொண்டே நடப்பவர்களிடம் (கொஞ்சம் நடக்கவும் செய்யுங்கப்பா)
கடந்த காலப் பெருமை பேசுபவரிடம் (இந்தக் காலத்துக்கு வாங்கப்பா)
ஆக்கிரமித்துக் கொண்டு நடப்பவர்களிடம் (இங்க நீங்க மட்டும் நடக்கல , பார்த்து நடங்க)
வீட்டு விவகாரத்தை பிரஸ்தாபிப்பவர்களிடம் (எங்க வீட்லயும் பிரச்சினை இருக்கும்மா )
வெடிச்சிரிப்புடன் அரட்டையுடன் மெல்ல நடப்பவர்களிடம் (இப்படி பேசிச் சிரிச்சா நடக்க சக்தி வேண்டாமா? )
மருமகள் பற்றிப் புகார் பட்டியல் வாசிப்பவரிடம் (இங்கேயே இப்படிப் பேசுறீங்களே , வீட்ல நீங்க தான் பிரச்சினையோ ?)
இதையெல்லாம் கேட்பதா? காதைப் பொத்திக் கொள்வதா ? கண்டுகொள்ளாமல் கடந்து போவதா?
புலம்பல்களும் அறிவுரைகளும் கடந்த கால ஏக்கங்களும் நடைப்பயிற்சியில் நிரம்பி வழிகின்றன.நாமும் காதில் ஹெட் போன் மாட்டிக்கொண்டு எப்.எம் கேட்டுக்கொண்டு நடக்கலாமா ?என்று தோன்றியது.
ஒருமுறை காதில் விழுந்தது ஒன்று.
நானும் ரொம்ப நாளா நடக்கிறேன் தொப்பை குறைய மாட்டேங்குதே, ஏன்?
இந்த தொப்பை கொஞ்ச நாள்ல வந்ததில்ல . உண்டியல்ல காசு சேர்க்கிற மாதிரி பல வருஷம் சேர்த்து வச்ச கொழுப்பு தான் இப்படி தொப்பையா மாறி இருக்கு.
எத்தனை நாள்ல சேத்தியோ அத்தனை நாள் ஆகும் குறைக்கிறதுக்கு.
அப்படீன்னா?
காசு சேர்த்த உண்டியலுக்கும் கொழுப்பு சேர்ந்த தொப்பைக்கும் என்ன தெரியுமா வித்தியாசம்?
காசு கொஞ்சம் கொஞ்சமா சேர்த்தாலும் ,சீக்கிரமா செலவு ஆய்டும் .தொப்பைய கொஞ்சம் கொஞ்சமா சேர்த்தாலும் மிகவும் கொஞ்சம் கொஞ்சமாத்தான் கரைக்க முடியும்.
எவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு எளிமையாக சொல்லி விட்டாரே!
இது மாதிரி உருப்படியாக எப்போதாவதுதான் காதில் விழும்.சரி காதைத் திறந்து வைத்துக் கொண்டே நடக்கலாம் என்று தோன்றியது.
– அபூர்வன், சென்னை.

