உங்களுக்கு கோபம் வந்தால், அதனால் பாதிக்கப்படுவது உங்கள் எதிரில் இருப்பவர்களை விட அல்லது கோபத்துக் காரணமானவர்களைவிட நீங்கள்தான். உங்கள் உடல் நலமும், மனநலமும்தான் பாதிக்கப்படும்.

கோபம் மாரடைப்பு முதலான இதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்துவிடும் என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள். 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் அதிகம் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு அதிகம். இதுவே 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக அமைகிறது.

கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள்தான்.

கோபத்தைப் பற்றிய சில தவறான நம்பிக்கைகளும் இருக்கின்றன. கோபத்தை உள்ளுக்குள் போட்டு அடக்காதே. அதை கொட்டிவிடுவதுதான் நல்லது என்பார்கள். ஆனால், கோபத்தை உள்ளே அடக்குவது, வெளியே கொட்டுவது இரண்டுமே ஆபத்தானது. கோபப்படாமலேயே உணர்ச்சிகளைத் வெளிப்படுத்த பழகிக் கொள்ள வேண்டும்.

சிலரின் கோபம் நியாயமானதாக இருக்கலாம். ஆனால், எந்தக் கோபமாக இருந்தாலும், அது உறவுகளை சேதப்படுத்துகிறது. மற்றவர்களிடம் எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்துகிறது. கோபத்தை நிர்வகிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு முதலில் நீங்கள்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். ‘அவன்தான் என்னை கோபப்படுத்தி விட்டான்’ என்று சொல்லி கோபத்தை நியாயப்படுத்துவதை விட, ‘‘நான்தான் கோபப்பட்டு விட்டேன். இதற்கு நான் மட்டும்தான் காரணம்’’ என்று பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொண்டால் சூழலைக் கட்டுப்படுத்தலாம்.

உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் சூழல் எது? அப்போது என்ன நடந்தது? கோபம் வரும்போது எப்படி நடந்துகொண்டீர்கள்? எப்படி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்? இவற்றையெல்லாம் ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டால், அடுத்த முறை அதேபோன்ற சூழல் வரும்போது அதை எதிர்கொள்ள வசதியாக இருக்கும்.

யாராவது உங்களை கோபப்படுத்தினால் சட்டென்று யோசிக்காமல் எதையும் பேசாதீர்கள். நிதானமாக யோசித்துப் பிறகு பேசுங்கள். மூச்சை நன்றாக இழுத்துவிட்டோ அல்லது ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டோ பிறகு பேசலாம். அப்போது கோபம் அடங்கி நிதானமாக பேச முடியும்.
எதிரில் இருப்பவர் என்ன பேசினால் நமக்கு கோபம் வரும்? எந்தச் சூழலில் எனக்கு கோபம் தலைக்கேற வாய்ப்புள்ளது? என்பதை முன்கூட்டி கணித்து விட்டால் அதற்கு எப்படி நாம் எதிர்வினையாற்றுவது என்பதை தீர்மானித்து வைத்துக் கொண்டால் பிரச்னையை எளிதில் சமாளித்துவிடலாம் அல்லது அந்த சூழல் வரும்போது, அங்கிருந்து நகர்ந்து விடலாம். அது சூழலின் தீவிரத்தன்மையை குறைத்துவிடும்.

கோபத்தை குறைக்க சில எளிய வழிகளைப் பார்ப்போம்..

மூச்சை நன்கு இழுத்து விட்டு, 10 லிருந்து 1 வரை தலைகீழாக எண்ண ஆரம்பியுங்கள். ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். மனதிற்குப் பிடித்த இசையை கேளுங்கள். ரிலாக்ஸாக கொஞ்ச நேரம் நடந்துவிட்டு வரலாம். கண்களை மூடி கவனத்தை வேறு ஒரு செயலில் திருப்புங்கள். உங்களை கோபப்படுத்துபவர் உங்களுக்கு செய்த நல்லதை எண்ணிப் பாருங்கள். எல்லாவற்றிலும் முக்கியம் கோபம் இல்லாத நேரங்களில் நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதுதான். அடிக்கடி கோபப்படுபவர்கள் ஆபத்தை நோக்கித்தான் அடியெடுத்து வைக்கிறார்கள் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.