– சுஜாதா வேலவன்
மணம் தரும் சம்பங்கிப் பூவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. சீக்கிரத்தில் வாடாத இதன் தடிமனான இதழ்களும், வாசனையும் அழகுக்கு அழகு சேர்க்கும். இதன் விதை, இலை என அனைத்துப் பாகங்களும் மருத்துவ குணம் மிக்கவை.
கோடை வெயிலால் சொறி, படை வேர்க்குரு என சருமம் படாதபாடுபடும். இதிலிருந்தெல்லாம் சருமத்தைப் பாதுகாக்கிறது சம்பங்கி பூ தைலம்.
அரை கிலோ தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி, அதில் 50 கிராம் சம்பங்கி பூவைப் போட்டு இறக்குங்கள். இந்த தைலத்தை உச்சி முதல் பாதம் வரை தடவி, நன்றாகத் தேய்த்து, சம்பங்கி பூ குளியல் பவுடர் பயன்படுத்திக் குளியுங்கள். வேர்க்குரு விரட்டப்படுவதுடன், குளிர்ச்சியுடனும் வாசனையாகவும் உடல் இருக்கும்.
சம்பங்கி பூ குளியல் பவுடர் தயாரிக்க, சம்பங்கி – 100 கிராம், வெள்ளரி விதை – 20 கிராம், பயத்தம்பருப்பு -200 கிராம் எடுத்துக் கொள்ளவும். இவற்றைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தைலம் தேய்த்து குளிக்கும்போது இந்தப் பவுடரைப் பயன்படுத்தி வந்தால், தோல் மினுமினுப்பாக இருக்கும்.
உடம்பில் உள்ள தேவையற்ற முடியை நீக்கும் குணம் சம்பங்கி விதைக்கு உண்டு. சம்பங்கி விதை – 100 கிராம், கோரைக்கிழங்கு – 200 கிராம், பூலாங்கிழங்கு -100 கிராம் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை ஒருநாள் விட்டு ஒருநாள் பூசி வர, தேவையற்ற முடி வலுவிழந்து உதிரத் தொடங்கும்.
முகத்துக்கு வசீகர அழகைக் கொடுக்கிறது சம்பங்கி ஃபேஸ் பேக். சம்பங்கி பூ – 2, தேங்காய்ப்பால் – 2 டீஸ்பூன் இரண்டையும் கலந்து அரைத்து, முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். முகம் புத்துணர்ச்சியுடன் பிரகாசமாக ஜொலிக்கும்.
சிலருக்கு முகத்தில் பருக்கள் தோன்றி, முக அழகையே கெடுத்துவிடும். இதற்கு சம்பங்கி விதை – 50 கிராம், சம்பங்கி பூக்கள் – 50 கிராம், துளசி – 10 கிராம், லவங்கம் – 5 கிராம், வேப்பிலை-10 கிராம் இவற்றை அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வெந்நீரில் குழைத்து பருக்கள் மீது தடவி வர, பருக்கள் குறையும்.
ஒரு கைப்பிடி சம்பங்கி பூக்களை, கொதிக்கும் தண்ணீரில் போட்டு வாரம் இருமுறை ஆவி பிடித்து வர, முகத்தில் பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
தலை பொடுகை போக்கி, தலைக்கு பாதுகாப்பை கொடுக்கிறது சம்பங்கி இலை. வெந்தயத்தூள் – 2 டீஸ்பூன், சம்பங்கி இலை -3 எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் சேர்த்து அம்மியில் அரைத்துக் கொள்ளுங்கள். இதில் 2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறை கலந்து தலைக்கு பேக் போடுங்கள். அரிப்பு, பொடுகு அத்தனையும் நீங்கி, கூந்தல் வாசம் வீசும்.
4 சம்பங்கி பூவுடன், ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை சூடு பறக்க நெற்றிப் பகுதியில் தடவினால்.. தாங்க முடியாத தலைவலியும் சட்டென குணமாகும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் 5 சம்பங்கிப் பூவைப் போட்டு காய்ச்சி, பாதியாக சுண்ட வைக்கவும். இந்த தண்ணீரை காலை, மாலை குடித்து வர மலச்சிக்கல் தீரும். நல்ல ஜீரண சக்தியை கொடுக்கும்.

