
– டாக்டர் சு.முத்து செல்லக்குமார்.,எம்.டி.
சர்க்கரையை வெள்ளை விஷம் என்று சொல்வார்கள். ஏனென்றால், சர்க்கரை நோயாளிகளுக்கு, சர்க்கரை ஆபத்தானது. அதைப் பயன்படுத்துவது அபத்த மானது. இதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். நோய்க்காக மருந்துகளையும், இன்சுலினையும் பயன்படுத்தினால் கூட நோய் கட்டுப் படாது. ஏனென்றால், உணவுக் கட்டுப்பாடு இல்லாததுதான் இதற்குக் காரணம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த மருந்தோடு சேர்ந்து, உணவுக் கட்டுப் பாடும், உடற்பயிற்சியும் மிகவும் முக்கியமானது.
நீரிழிவு நோயாளிகளுக்குச் சர்க்கரை என்றால், இதய நோயாளிகளுக்கு விஷமாகக் கருதப்படுவது, மற்றொரு வெள்ளை விஷமான உப்பு.
இதயநோயாளிகள், பொதுவாக உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். இதய நோய் இல்லாதவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு உப்பும், இதய நோய் உள்ளவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு உப்பும் தினமும் தேவைப்படும். அந்த அளவுகள் என்னவென்று பார்க்கலாம்.
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்று நமது நாட்டில் ஒரு பழமொழி இருக்கிறது. உணவில் இருந்து நம்மால் உப்பை முழுமையாக ஒதுக்க முடியாது என்பதுதான் இதன் பொருள். உப்பு இல்லாமல் எந்த உணவும் சுவைக்காது. எனவே, உணவில் உப்பு அவசியம். அதே நேரம், உப்பை போதுமான அளவில் மட்டும் சேர்த்து சமைக்க வேண்டும்.
நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்புக்கு சோடியம் குளோரைடு என்ற வேதியியல் பெயரும் உண்டு.
சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுப்படி, உலகம் முழுவதும் சராசரியாக ஒவ்வொரு மனிதனும் சுமார் 9 முதல் 12 கிராம் உப்பை, தினமும் தனது உணவின் மூலம் பெறுகிறான். 3 வயது வரை உள்ள குழந்தைகள், சுமார் 1 முதல் 12 கிராம் வரையான உப்பை தினமும் தங்களது உணவின் மூலம் பெறுகிறார்கள். ஆனால், இந்த அளவுகள் உடல் நலத்துக்கும் இதய நலத்துக்கும் உகந்தது அல்ல. ஏனெனில், நாம் அளவுக்கு அதிகமான உப்பை சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறோம்.
சரி, எந்த அளவு உப்பை நாம் எடுத்துக்கொண்டால், அது உடல் நலத்துக்கும், இதய நலத்துக்கும் ஏற்றது?
உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரைப்படி, ஒவ்வொரு மனிதனும் தினமும் ஒரு டீஸ்பூன் அளவு உப்பைப் பயன்படுத்தலாம். அதாவது, 5 முதல் 6 கிராம் உப்பு போதும்.
ஆனால், மிகச் சமீபத்திய ஆய்வு, அந்த அளவுகூட அதிகம்தான் என்கிறது. ஒவ்வொரு மனிதனும் தினமும் 2 அல்லது 3 கிராம் வரை உப்பைப் பயன்படுத்தினாலே போதுமானது என்கிறது இந்த ஆய்வு. இந்த அளவே போதும். அதற்கு மேல் பயன்படுத்த வேண்டாம் என்று மருத்துவ நிபுணர்களும் தற்போது அறிவுறுத்துகிறார்கள். அதாவது, பெரியவர்களுக்குத் தினமும் அரை டீஸ்பூன் உப்பு போதுமானது. சிறுவர்களுக்கும், அதிலும் பாதி, அதாவது கால் டீஸ்பூன் உப்பே போதுமானது. குழந்தைகளுக்கும் அவர்கள் தினமும், உணவில் 1 முதல் 1.5 கிராம் வரை உப்பை சேர்த்துக் கொள்ளலாம்.
உணவில் உப்பு அதிகரிக்க, அதிகரிக்க, ரத்தத்தில் சோடியம் அயனியின் அளவும் அதிகரிக்கும். ரத்தத்தில் சோடியம் அயனியின் அளவு, அதிகரிக்க, அதிகரிக்க, உடல் செல்களில் நீர் அதிகமாகத் தேங்க ஆரம்பிக்கும். அத்துடன் ரத்த அழுத்தமும் அதிகரிக்கும். அதிக ரத்த அழுத்தத்தால், ரத்தக் குழாய்கள் பாதிக்கப்படும். இதன் காரணமாக, ரத்தக் குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு, மூளையில் ரத்த கசிவுகள் ஏற்படலாம். ரத்த நாள அடைப்புகள் ஏற்படலாம். இதைத் தொடர்ந்து நோயாளிக்கு மூளைத் தாக்கம், மூளை நலிவு, பக்கவாதம் போன்ற பெரும் பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.
அதிக ரத்த அழுத்தத்தை மீறி, இதயம் துடித்து ரத்த ஓட்டத்தைச் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தால், இதயம் வலுவிழந்து இதயப் பாதிப்பு, இதயச் செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதய ரத்த நாளக் குழாய்களும் பாதிக்கப்படுவதால், நோயாளிக்கு மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகமாகின்றன. அளவுக்கு அதிகமான நீர் தேங்குதல், ரத்த நீர் அளவு அதிகரிப்பால், சிறுநீரகம் பாதிப் படைந்து சிறுநீரகச் செயலிழப்பும் ஏற்படும்.
சுருக்கமாகச் சொன்னால், உப்பின் அளவை அதிகரிப்பதால், இதயம், சிறுநீரகம், ரத்தக் குழாய்கள் ஆகியவை பெரிதும் பாதிக்கப்படும். எனவேதான், உப்பின் அளவில் மிகவும் எச்சரிக்கையாக நாம் இருக்கவேண்டி இருக்கிறது.
சமைக்கும்போது குறைவான உப்பைப் பயன்படுத்துவதன் மூலம், உணவில் உப்பின் அளவைக் கட்டுப்படுத்தினால் மட்டும் போதாது. சில வகை உணவுகள், இயல்பாகவே அதிக உப்பு உள்ளவையாக தயாரிக்கப்படுகின்றன. அவற்றை அடையாளம் கண்டு தவிர்க்கவும் வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை
உப்பு அதிகம் சேர்த்து தயாரிக்கப்படும் உருளைக் கிழங்கு சிப்ஸ் போன்ற பல்வேறு சிப்ஸ் வகைகள், ஊறுகாய் வகைகள், உப்பு போட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்படும் மீன்கள், டின்களில் அடைத்து விற்கப்படும் உணவு கள், குறிப்பாக மாமிச உணவுகள், சாக்லேட் வகைகள், பட்டர்ஸ்காட்ச் போன்ற அதிக கிரீம் வகைகள், உப்பு சேர்த்து வறுக்கப்படும் வேர்க்கடலை, உப்புக்கடலை, ஆம்லெட், வெண்ணெய், ஆட்டுக்கால் சூப், காய்கறி சூப் வகைகள், புகையில் வேகவைக்கப்பட்டு தயாரிக்கப்படும் மாமிச் உணவுகள் (தந்தூரி வகைகள்), நூடுல்ஸ் வகை உணவுகள், கருவாடு உணவுகள், வற்றல், வடகம், அப்பளம் போன்ற வற்றைத் தவிர்த்துவிடுவது நல்லது. உப்பு சேர்த்த முந்திரி, பாதாம் பருப்பு ஆகியவற்றிலும், உப்பு சேர்த்த வெண்ணெய் ஆகியவற்றிலும் உப்பு அதிகம்.
இவற்றில், பெரும்பாலும் சுவைக்காகவும், உணவு கெடாமல் இருக்கவும் உப்பு அதிகமாகச் சேர்க்கப்படுகிறது. எனவே, ரத்த அழுத்தத்தில் இருந்தும், இதய நோய்களில் இருந்தும் தப்பிக்க விரும்புபவர்கள், இவ்வகை உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
குக்கீஸ்,பர்கர்,கேக் வகைகள், பிஸ்ஸா, வறுக்கப்பட்ட மாமிச உணவுகள், மீன், முட்டை உணவுகள், சான்ட்விச் உணவு வகைகளிலும்கூட உப்பு அதிகம்தான். எனவே, இவற்றையும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தவிர்ப்பது உடலுக்கு நல்லது.
சரி, இவர்கள் எந்தவித உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்?
உப்பிடாமல் தயாரிக்கப்படும் சாதம், குறைந்த அளவு உப்பு சேர்த்து தயாரிக்கப்படும் கூட்டு, குழம்பு ஆகியவற்றைம் பயன்படுத்தலாம். மேலும், காய்கறி, கீரைகள், பழவகைகள்,உப்பு சேர்க்காத கொட்டை, பீன்ஸ், ஆரஞ்சுப் பழம் ,எலுமிச்சை, கொய்யா ஆகியவற்றை அதிக அளவு பயன்படுத்தலாம்.
பொதுவாக, பதப்படுத்தப்பட்ட, பக்குவப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள், துரித உணவுகள் ஆகியவற்றில் உப்பு அதிகமாக இருக்கும். இவற்றைத் தவிர்த்துவிட வேண்டும்.
உருளைக் கிழங்கு சிப்ஸ், பாப்கார்ன் ஆகியவற்றிலும் உப்பு அதிகமாக இருக்கும். இவற்றையும் தவிர்க்க வேண்டும். இதை வேறு வகையில் சொல்வதென்றால், வெளியில் இருந்து எந்த உணவையும் வாங்காமல் தேவையான உப்பு சேர்த்து வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடுவது சிறந்தது. இதன்மூலம், நாம் பயன்படுத்தும் உப்பின் அளவைக் குறைத்து, உடல் பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்.

