– டாக்டர் ரமேஷ் சதாசிவம்,MD.

நிறைய தண்ணீர் குடியுங்கள்.அது உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றிவிடும் என்று சிலர் கூறுவதைக் கேட்டிருக்கலாம். தற்போது யூடியூப் சேனல்களில் நிறைய பேர் இது போன்ற தவறான,மருத்துவ அறிவியலுக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்கிறார்கள். இவர்களது நோக்கம் ஆபத்தானது.
மக்களை பயமுறுத்தி தங்களிடம் வரவழைத்து ஏமாற்றி பணத்தை பிடுங்குகிறார்கள்.

இவர்களது பேச்சை நம்பி,சிலர் தினமும் 5-6 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.தண்ணீர் நச்சுப்பொருளை வெளியேற்றும் என்பது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட கான்செப்ட். நச்சுப்பொருளை வெளியேற்றுவதற்கென்று நம் உடல் சில வழிமுறைகளைக் கொண்டிருக்கிறது. அதில் நம் கல்லீரல் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.நம் சிறுநீரகமும் இப்பணியை மேற்கொள்கிறது.

சிங்க் தொட்டியில் அடைப்பு இருந்தால் அதை நீக்குவதற்கு நிறைய தண்ணீரை ஊற்றிக் கழுவுவோம். அதுபோல நிறைய தண்ணீர் குடித்தால் உடலில் இருக்கும் கழிவுகள் அடித்துக்கொண்டு போய்விடும் என்பது மக்களின் எண்ணமாக இருக்கிறது.ஆனால், இந்தக் கழிவை நீக்குதல் என்பது Molecular லெவலில் நடக்கக்கூடிய ஒரு காம்ப்ளெக்ஸ் வேலை.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் சிறுநீரகம் பாதிப்படைந்த ஒருவரால் அதிக அளவிலான தண்ணீரை பிராசஸ் செய்ய இயலாது.அவர் அதிக தண்ணீரைக் குடித்தால் அவருக்குப் பிரச்னைகள்தான் அதிகமாகும்.இந்தப் பிரச்னைகள் இருப்பவர்கள் குறைவான தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்று சொல்வதற்குக் காரணம் இதுதான். எனவே,தண்ணீரை அதிகமாகக் குடித்தால் நம் உடலிலிருந்து நச்சுப்பொருள் வெளியேறிவிடும் என்று நினைப்பது தவறு.

சில விஷயங்களுக்கு வேண்டுமானால் இக்கூற்று சரியானதாக இருக்கும். உதாரணத்துக்கு, சிறுநீரகக் கற்கள் இருப்பவர்களுக்கு Oxalate,கால்சியம் முதலிய உப்புகள் சிறுநீரில் இயற்கையாய் வெளியேறும். அதனால் கற்கள் உருவாகும். அவர்களுக்கு அந்த உப்பு படியாமல் இருக்க கூடுதலாகத் தண்ணீர் குடிக்கச் சொல்வோம். இதுபோன்ற ஒரு சில விஷயங்களில் மட்டும் தண்ணீர் அதிகமாகக் குடிப்பது நச்சுப்பொருள்களின் வெளியேற்றத்திற்கு உதவியாக இருக்குமே தவிர, இக்கூற்று எல்லோருக்கும் பொருந்தாது.எனவே, கஷ்டப்பட்டு இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. தோராயமாக 2-3 லிட்டர்,அதையும் கணக்குப் பார்க்காமல் குடித்தாலே போதுமானது.

அதேபோல, நார்மலாக இருப்பவர்கள் 7-8 லிட்டர் தண்ணீர் குடிப்பதைப் பார்க்க முடிகிறது.இது Dilutional Hyponatremia என்ற பிரச்னைக்கு வித்திடும்.அதாவது நிறைய தண்ணீர் குடிக்கையில் நம் உடலில் உள்ள உப்புச்சத்து குறையத் தொடங்கிவிடும். அதனால்,நமக்குக் குழப்பமான மனநிலை தொடங்கி வலிப்பு வரைகூட ஏற்படலாம். அதேபோல நிறைய தண்ணீர் குடித்தால் முகம் பொலிவடையும் என்றும் மக்கள் நம்புகிறார்கள்.நம் தோலின் ஆரோக்கியம், தோலில் சுரக்கக்கூடிய சுரப்பிகளின் செயல்பாடு,நாம் உட்கொள்ளும் நுண்சத்துகள், கிருமிகள் வராமல் தடுப்பது என முகப்பொலிவுக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. தண்ணீரால் பெரிய மாற்றம் ஏதும் நிகழாது.ஒருவேளை வெயில் காலங்களில் நீர்ச்சத்து குறைந்தால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தண்ணீர் தடுக்குமே தவிர மற்றபடி வேறெதுவும் கிடையாது.

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது நல்லது அல்ல. தண்ணீர் அதிகம் குடித்தால் கழிவுகள் வெளியேறும் என்று, மருத்துவ அறிவியல் தெரியாமல் ஒரு சிலர் தவறாக பரப்பி வருகிறார்கள். அவர்கள் பேச்சை நம்ப வேண்டாம்.

ஹெல்த் அண்ட் பியூட்டி (Health and beauty)