நோய் எதிர்ப்பாற்றல் தரும் எலுமிச்சை!

டாக்டர்.கு.சிவராமன், சித்த மருத்துவர்
இறைவழிபாடாக இருந்தாலும் சரி, பெரியோரை வணங்கும் விருந்தோம்பலாக இருந்தாலும் சரி, எலுமிச்சைக்கு தமிழர் அளித்திருக்கும் இடம் பெரிது. மஞ்சள், வேம்பு போல எலுமிச்சைக்கும் நம் மருத்துவ மரபில் பெரும் பயன் இருந்திருக்கிறது. நோய் எதிர்ப்பாற்றலுக்கு மிக அத்தியாவசியமான வைட்டமின் சி சத்து எலுமிச்சையில் இருப்பது நமக்குத் தெரியும். ஆனால், வாந்தி, தலைசுற்றல், ரத்தக்கொதிப்பு காரணமாக வரும் தலைவலி, மயக்கம் போன்ற பல பிரச்னைகளுக்கும் அது மருந்து என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.
ஈராக் நாட்டின் எலுமிச்சையைக் காட்டிலும், நம் ஊர் எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம். ‘சீமை கமலா ஆரஞ்சு’ எனச் சொல்லி, விலை அதிகமாக விற்கப்படும் “மான்ட்ரேய்ன் + பொமெல்லா’ ஒட்டு ரகக் கலவைப் பழத்துக்கு இணையான வைட்டமின் சி சத்து, அதைவிடப் பெரிதும் விலை குறைவான நம் நாட்டு எலுமிச்சையில் உண்டு. புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் உணவு வகைகளில், சீனத்து பிரக்கோலி போல், காபூல் மாதுளை போல், தென் அமெரிக்க நாட்டின் கிராவியாலா போல், எலுமிச்சையின் பயனும் மிகவும் பேசப்பட்டு வருகிறது.
எலுமிச்சையின் தோலில், பழத்தில் உள்ள eriocitrin, hesperidin, naringin முதலான flavone glycosides உடல் எடை குறைப்பில், சர்க்கரை நோய் வராது தடுக்க, ரத்தக் கொழுப்பு குறைக்க எனப் பல தொற்றா வாழ்வியல் நோய்களில் பயனாவதை நவீன உணவு அறிவியல் உறுதிப்படுத்தியுள்ளது.
எலுமிச்சை கேன்சர் செல் வளர்ச்சியை தடுப்பதை பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
மன அழுத்தம், மனச் சோர்வு, மனப் பிறழ்வு முதலான பல மன நோய்களுக்கு நெடுங்காலமாகப் பயனளித்த மருத்துவ மூலிகை, எலுமிச்சை. மனச் சோர்வு,மன நோயாவது ஒருசிலருக்கு மட்டுமே. சர்க்கரை நோயாக, ரத்தக்கொதிப்பாக, புற்றாக இன்னும் பல வாழ்வியல் நோயாக உருமாறுவதே அதிகம். எலுமிச்சம்பழச் சாற்றில் லேசான அமிலம் இருந்தால்கூட, அது எளிதில் சீரணித்து, உடலின் காரத்தன்மையை அதிகரிப்பதால், இந்த நோய்களைத் தவிர்க்க உதவிடும்.
ஆகவே, எலுமிச்சை மீது இச்சை கொள்வோம்!

