காலம் தாழ்த்தாதீர்கள்: காலை எழுந்தவுடன் தவளை?

பா. மகிழ்மதி
அதென்ன தவளை? அவசரப்படவேண்டாம். காலம் தாழ்த்துவதை விட்டொழித்து குறைவான நேரத்தில் அதிகமான செயல்களைச் சாதிப்பதற்கான 21 வழிகளைச் சொல்கிறார் பிரையன் டிரேசி. காலை எழுந்தவுடன் தவளை என்ற நூலில் அவர் தவளை என்று குறிப்பிடுவது நீங்கள் நிறைவேற்ற வேண்டிய கடுமையான வேலையைத்தான். நாம் இந்தக் கட்டுரையில் கிடைக்கிற நேரத்திற்குள் செய்யவேண்டிய பெரும் பணிகளை எப்படி முடிப்பது என்று பார்க்கப்போகிறோம்.
நீங்கள் செய்யவேண்டிய எல்லாவற்றையும் செய்வதற்குப் போதுமான நேரம் ஒருபோதும் இருப்பதில்லை. வேலைக்கான பொறுப்புகள், தனிப்பட்டப் பொறுப்புகள், வற்றாத மின்னஞ்சல்கள். சமூக வலைத்தளங்கள், பணித் திட்டங்கள், படிக்கப்பட வேண்டிய பத்திரிகைகள் மற்றும் நூல்கள் என்று அனைத்தும் சேர்ந்து உங்களை திணறடிக்கக் காத்திருக்கின்றன.
உண்மையில் எல்லாவற்றையும் செய்து முடிக்க உங்களுக்கு ஒருபோதும் போதிய நேரம் இருக்கப்போவதில்லை. உங்களால் ஒருபோதும் எல்லா வேலைகளையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது என்கிறார் டிரேசி. உங்கள் நேரத்தையும் உங்கள் வாழ்க்கையையும் உங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. சில விஷயங்கள் செய்வதை நீங்கள் நிறுத்தவேண்டியிருக்கும். அதுதான் அந்த ஒரே வழி.
ஒருவனுக்கு உங்களால் எதையும் கற்றுக்கொடுக்க முடியாது. அவன் தானாகவே தனக்குள் அதைக் கண்டுபிடிக்க அவனுக்கு உங்களால் உதவ மட்டுமே முடியும் என்று சொல்லியுள்ளார் கலிலியோ. தன் தொழில் வாழ்க்கை நெடுகிலும் தான் ஓர் எளிய உண்மையை கண்டறிந்ததாகக் குறிப்பிடுகிறார் டிரேசி. உங்களுடைய மிக முக்கியமான வேலையின் மீது ஒருமித்த கவனம் செலுத்தி, அதைச் சிறப்பாகவும் முழுமையாகவும் செய்து முடிப்பதற்கான திறன்தான் வாழ்வின் மகத்தான வெற்றிக்கும் சாதனைக்கும் மதிப்பிற்கும் அந்தஸ்திற்கும் மகிழ்ச்சிக்குமான திறவுகோல் என்கிறார்.
நம்முடைய தொழில் வாழ்க்கையில் விரைவாக முன்னேறிச் செல்வதோடு கூடவே, உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் எவ்வாறு வளப்படுத்துவது என்பதை நமக்கு எடுத்துரைக்கவே ‘காலை எழுந்தவுடன் தவளை ‘ என்ற நூல் எழுதப்பட்டிருக்கிறது.
ஏன் காலை எழுந்தவுடன் தவளை
தினமும் காலையில் முதல் வேலையாக, உயிருள்ள ஒரு தவளையை நீங்கள் விழுங்கிவிட்டால், அன்று முழுவதும் அதைவிட மோசமான ஒரு விஷயம் இனி உங்களுக்கு நிகழாது என்ற திருப்தி ஏற்படும். அன்றைய நாளில் நிம்மதியாக மற்ற வேலைகளை உங்களால் செய்யமுடியும்.
உங்களுடைய மிகப்பெரிய மிக முக்கியமான வேலைதான் தவளை. அதை நிறைவேற்றுவது குறித்து நீங்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாவிட்டால், அதைத் தொடங்குவதற்கு நீங்கள் காலம் தாழ்த்துவீர்கள் என்பது உறுதி. உங்களிடம் இரண்டு தவளைகள் இருந்தால், அவற்றில் எது அதிக அழகற்றதாக இருக்கிறதோ அதை முதலில் சாப்பிடுங்கள். இங்கு அழகற்ற தவளை என்பது மிக மிக கடினமான ஆனால் மிக முக்கியமான வேலையாகும்.
உயிருள்ள ஒரு தவளையை நீங்கள் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்றால், அதன் எதிரே அமர்ந்துகொண்டு கண்ணிமைக்காமல் நெடுநேரம், அதைப் பார்த்துக்கொண்டிருப்பது எந்த விதத்திலும் பலனளிக்காது. நீங்கள் உங்கள் செயற்திறனையும் உற்பத்தித் திறனையும் மிக உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்ல விரும்பினால், தினமும காலையில் முதல் வேலையாக உங்களுடைய மிக முக்கியமான வேலையைச் செய்துமுடிக்கின்ற பழக்கத்தை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
அதாவது அதிகமான ஊதியத்தையும் வேகமான பதவி உயர்வுகளையும் பெறுகின்ற மக்கள், செயலில் இறங்குதல் என்ற பண்புநலனைக் கொண்டவர்களாக இருக்கின்றனர் என்று சுட்டிக்காட்டுகிறார் பிரையன் டிரேசி. காலப்போக்கில் நீங்கள் உங்களிடம் வளர்த்துக்கொள்கின்ற பழக்கங்கள்தான் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய வெற்றிகளைத் தீர்மானிக்கின்றன.
முக்கியமான வேலைகளைத் தொடங்கி அவற்றை நிறைவேற்றும் பழக்கம் ஓர் உடனடியான மற்றும் தொடர்ச்சியான வெகுமதியைக் கொடுக்கிறது. நீங்கள் ஒரு வேலையை முழுமையாக நிறைவேற்றி முடிப்பது நேர்மறையான உணர்வைத் தரும்.
நீங்கள் ஓர் அற்புதமான வாழ்க்கையை வாழ்வதற்கும் ஒரு வெற்றிகரமான தொழில் வாழ்க்கையைப் பெற்றிருப்பதற்கும் உங்களைப் பற்றி மிகவும் நேர்மறையான உணர்வைப் பெறுவதற்கான முக்கியமான காரணி, முக்கியமான வேலையை நிறைவேற்றும் பழக்கம்.
நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்களோ, அப்படி உங்களை உங்கள் மனத்தில் காட்சிப்படுத்திக்கொள்ளுங்கள். உங்களைப் பற்றிய அந்த மனக்காட்சி உங்கள் நடத்தையின்மீது ஒரு சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. “வெற்றி பெறுவதற்கு ஒருவரிடம் இருக்கவேண்டிய திட்டவட்டமான குறிக்கோளும், அதாவது தனக்கு என்ன வேண்டும் என்பது பற்றிய அறிவும், அதை அடைவதற்கான தணியாத ஆழ் விருப்பமும்தான் அது” என்று சொல்கிறார் நெப்போலியின் ஹில்.
உங்களுடைய தவளை எது என்பதைக் கண்டறிந்து, அதை சாப்பிடத் தொடங்குவதற்கான செயலில் இறங்குவதற்கு முன்பாக உங்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்று நீங்கள் தீர்மானித்தாக வேண்டும். காலம் தாழ்த்துவதற்கும் ஊக்கமின்மைக்குமான ஒரு முக்கிய காரணம், நீங்கள் எவற்றை எந்த வரிசைப்படி எதற்காக செய்ய முயற்சி செய்கிறீர்கள் என்பது பற்றிய ஒரு தெளிவு உங்களுக்கு இல்லாததுதான் என்று அறிவுறுத்துகிறார் டிரேசி.
உங்களுடைய இலக்குகளைப் பற்றி தினமும் சிந்தியுங்கள். தினமும் அவற்றைப் பரிசீலனை செய்யுங்கள். தினமும் நீங்கள் உங்கள் நாளை தொடங்கும்போது, அக்கணத்தில் எது உங்களுடைய மிக முக்கியமான இலக்காக இருக்கிறதோ, அதை அடைவதற்கு நீங்கள் மேற்கொள்ளக்கூடிய மிக முக்கியமான செயலின மீது நடவடிக்கை எடுங்கள்.
நீங்கள் முன்னேறிக்கொண்டிருப்பது போன்ற உணர்வு, உங்களுக்கு அதிக ஆற்றலைக் கொடுத்து, நீங்கள் நாள் முழுவதும் உற்சாகமாக வேலை செய்வதைச் சாத்தியமாக்குகிறது என்பது மறந்துவிடவேண்டாம் நண்பர்களே…

