டாக்டர்.பா.பாசுமணி,
குடல் மற்றும் இரைப்பை நிபுணர்

 
இன்றைய நவீன வாழ்க்கையில் பிறந்த குழந்தை முதல்  முதியோர் வரை அனைவருக்கும் வயிற்று தொந்தரவுகள் இருக்கின்றன பச்சிளம் குழந்தைக்கு தாய் பாலூட்டிய உடன், குழந்தைக்கு ஏப்பம் வரும்வரை  முதுகில் லேசாக தட்டிக் கொடுப்பார் அப்போதுதான் குழந்தைக்கு தொந்தரவு இல்லாமல் இருக்கும்.  பிறந்த உடனே ஆரம்பிக்கும் எதுக்களித்தல் என்னும் சீரணப் பிரச்சினை பின்னர் நாம் வளர வளர ஏப்பம், நெஞ்செரிச்சல், பசிக்குறைவு அல்லது அதிகப் பசி, வயிற்றில் வேதைனை, வயிறு உப்பி இறுக்கமாதல், மலச்சிக்கல் ,வாயுத் தொல்லை என ஏதாவது ஒரு வடிவத்தில் கூடவே வரும்..
 
இன்றைய காலகட்ட்த்தில் மக்களிடம்  உடல்நலம் குறித்து நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஏதாவது சந்தேகம் என்றால் இணையத்தில் சட்டென தேடிப் பார்க்கிறார்கள். தேவையான.. தேவை இல்லாத எல்லா தகவல்களையும் வரம்பு இல்லாமல் கொட்டுவதால்  இணையத்தேடல் பல நேரங்களில் தேவையில்ல மனச் சஞ்சலங்களை உண்டாக்கலாம். நல்ல மருத்துவரின் ஆலோசனை முக்கியம் என்பதை புரிந்துகொண்டவர்கள் மருத்துவரை நாடி வந்து தெளிவு பெறுகிறார்கள்.
 
சட்டென நெஞ்சு வலி ஒருவருக்கு வந்தால் அது இதயக்கோளாறான மாரடைப்பா அல்லது அசீரணக் கோளாறான  வாய்வு வலியா என்று தெரியாமல் நாம் தவித்துப் போவோம்..
 
நெஞ்சு வலி வந்தவுடன் பதறிப்போய் இசிஜி, ரத்தப் பரிசோதனை செய்து மாரடைப்பு இல்லை என நாம் அப்போதைக்கு  ஆசுவாசப் படுத்திக் கொள்வோம். மறுபடியும்  அதே போல் வலி வந்து மீண்டும் அதேபோல் பதற்றம், அவசர சிகிச்சைப் பிரிவுக்கு ஓடுவ்து என இது மீண்டும் மீண்டும் நம்மை தொல்லைப்படுத்தலாம்.
 
சிக்கலே – ஏதாவது ஒரு முறை இது நிஜமாகவே மாரடைப்பின் அறிகுறியாய் இருந்துவிட்டால் –
புலி வருது புலி வருதுன்னு சொன்ன கதை மாதிரி.. – என்ற அந்த பயம்தான்!
 
நெஞ்சுவலியின் காரணம் மாரடைப்பா அல்லது சீரணக் கோளாறா ?  எப்படி பிரித்துப் பார்ப்பது சிக்கலான கேள்விகளுக்கு விடை காண்பது தான் சிறந்த  மருத்துவ நிபுணரின் கடமை.
 
மாரடைப்பு வலி வாய்வு தொந்தரவு இரண்டுமே ஒரே மாதிரியான வலியாக இருக்கலாம்.இதயம், உணவுக்குழாய்/இரைப்பை இவற்றின் வலி உணர்வை மூளைக்கு எடுத்துச் செல்லும் நரம்பு மண்டலம் இரண்டுக்கும் பொதுவானதுதான். மார்பில் படபடப்பு, வயிறு புரட்டுவது, வாந்தி வருவது, போன்ற உணர்வு கழுத்து ,நெஞ்சு , தோள் பட்டை, கை  ,வலி வருவது போன்ற எல்லாமே ஒரே மாதிரியாக இருக்கும். உள் உறுப்புகளில் இருந்து வரும் வலியை பிரித்துப் பார்ப்பது சற்று கடினம் தான். எந்த வலியாக இருந்தாலும் தாமதமில்லாமல் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். மருத்துவர் பரிசோதனைகளை செய்யும்போது குடும்ப பாரம்பரியம், வயது, தொழில், வாழ்க்கை முறை ( புகையிலை,மதுப் பழக்கம்), உணவு முறை, உடல் எடை, சர்க்கரை நோய், இரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் அதிகம் போன்ற எல்லாவற்றையும் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்.
 
வலி என்பது ஆதிகாலத்திலிருந்து நம்மோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. வலி என்ற ஒன்று வருவதால்தான் உடல் உறுப்புகளின் இயக்கத்தில்.. செயல்பாடுகளில்.. பிரச்சனை உள்ளது என்பதை அடையாளம் கண்டு தக்க சிகிச்சை எடுத்துக் கொள்கிறோம்.
 
எந்த  வலியாக இருந்தாலும் சந்தேகத்தின் பலனை ஆபத்தான நோய் தாக்குதலுக்கு அளித்து டயக்னோஸ் செய்வது அவசியம்.மாரடைப்புக்கான காரணங்களை கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பது போலவே வாயுத் தொல்லையால்தான் வலி என்றால் அதற்கும் தவறாமல் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
 பொதுவாக நமது ஆரோக்கியத்தின் முதல் எதிரி நமது வீட்டில் இருக்கும் குளிர்சாதனப்பெட்டி தான்(பிரிட்ஜ்). மிஞ்சிய உணவை உள்ளே வைத்து மறுபடியும் மறுபடியும் சூடு பண்ணி சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது.
 
பசித்து சாப்பிடுவதான் ஆரோக்கியமானது. பசிக்காமல் மூன்று வேளையும் கடிகாரம் பார்த்து சாப்பிடப் பழகிவிட்டோம். காலை மாலை பஜ்ஜி பலகாரம் எதையும் விட்டு வைப்பதில்லை. இப்படி அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் வயிற்றை மட்டும் அல்ல உடல் ஆரோக்கியத்தையும் மொத்தமாக கெடுத்துக் கொள்கிறோம். உடலில் சேரும் சக்தியை செலவு செய்யாமலே திரும்பத் திரும்ப சாப்பிட்டுக்கொண்டே இருந்தால் உடல் பருமன் ,மூட்டு வலி, மூச்சு விட சிரமம், கல்லீரல் கொழுப்பு நோய், சர்க்கரை நோய் ..என எல்லாமும் வரிசையாய் வந்துகொண்டே இருக்கும்.
 
நவீன வாழ்க்கை முறையில் வேறு என்னதான் செய்ய முடியும் என்ற கேள்வி எழலாம் ?இதற்கும் நிச்சயமாக ஒரு மாற்று வழிமுறை உண்டு. குறைந்தபட்சம் நமது வாழ்க்கை முறையை மாற்றியமைக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.
 
காலையில் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடல் இயக்கம் சீராகி ஜீரண சக்தி மேம்படும் . அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்த்து.. தேவைக்கு ஏற்ற அளவு சாப்பிட வேண்டும். கொழுப்பு உணவைக் குறைக்க வேண்டும். செயற்கைக் குளிர்பானங்களை தவிர்க்கலாம். செயற்கை வண்ணங்கள் சேர்த்த ஓட்டல் உணவுகளை அடிக்கடி சாப்பிடாமல் எப்போதாவது ஆசைக்கு சாப்பிடுவது என்ற அளவில் குறைத்துக்கொள்ளலாம்.
 
வீட்டிலேயே சமையல் செய்து, ஃப்ரஷ்ஷாய் சாப்பிடுவது தான் நல்லது. ஆடாமல் அசையாமல் அமர்ந்தபடியே ஆர்டர் செய்து இஷ்டம் போல் சாப்பிட்டு ஓய்வெடுத்தால் அழையா விருந்தாளியாக அத்தனை தொந்தரவுகளும் தவறாமல் வந்து சேரும்.
 
சாப்பிட்டவுடன் தூங்க வேண்டாம். இதனால் செரிமான பிரச்சனை வரும் .நெஞ்சு எரிச்சலும் வரும். தூங்குவதற்கு முன் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே சாப்பிட வேண்டும். இரவு 2,3 மணி வரை கண்விழித்து அலைபேசியில்/ கணினியில் காலம் கழிப்பது,.. கேம் விளையாடுவது.. சினிமா பார்ப்பது என தூக்கம் கெட்டு அல்லல் படக் கூடாது.
பகல் பணிக்கு.. இரவு உறக்கத்திற்கு.. இதுதான் நமது ஆரோக்கியத்திற்கான ஆணிவேர். சூரியன் உதிப்பது, மறைவது என நமக்குக் கொடுக்கும் கால அட்டவணை நம் உடல் நலத்துக்கு இயற்கை அளித்த அருமையான வழிகாட்டி!
 
வயிற்றுக்கும் மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு .வயிற்றை இரண்டாவது மூளை என்று மருத்துவத்தில் சொல்கிறார்கள் அது பற்றி அடுத்த முறை விரிவாக பதிவு செய்கிறேன்.