டாக்டர் கு.கணேசன்,
பொது நல மருத்துவர்.

முகத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான பற்கள் பாதிக்கப்பட்டால் பல்வேறு நோய்கள் நம்மைத் தாக்க தொடங்கும். ‘பல் போனால் சொல் போகும்’என்பார்கள் பெரியோர்கள்.பற்களின் ஆரோக்கியத்தை காத்தால், உடலின் ஆரோக்கியத்தையே பாதுகாக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

பல்பாதிப்புகளில் முதன்மையானது, பல் சொத்தை (Tooth Decay). குழந்தைகள், இளம் வயதினர்,முதியோர் என எல்லோரையும் இது பாதிக்கிறது.இது ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடுவதுதான். குறிப்பாக, பற்களில் ஒட்டக்கூடிய இனிப்பு மாவு, பிஸ்கட், மிட்டாய், சாக்லேட், ஐஸ்கிரீம், குக்கீஸ், கேக், பேக்கரிப் பண்டங்கள் போன்றவற்றில் உள்ள சக்கரை பொருள் பல் இடுக்குகளில் ஒட்டிக் கொள்ளும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இவற்றுடன் வினைபுரிந்து லேக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றன.இந்த அமிலம் எனாமலை அழித்து பற்களை சிதைக்கிறது.இதன் விளைவால் பற்கள் சொத்தை ஆகின்றன.

அறிகுறிகள் என்னென்ன?

சொத்தைப் பல்லின் ஆரம்ப அறிகுறி, பற்கூச்சம்.முக்கியமாக இனிப்பு சாப்பிடும்போது, குளிர்ச்சியான அல்லது சூடான பானங்களை அருந்தும்போது பற்களில் கூச்சம் ஏற்படும்.பிறகு பல்லில் வலி ஏற்படும். உணவை மெல்லும்போது பல் வலி அதிகரிக்கும். சொத்தைப் பல்லை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால், எனாமலை அடுத்துள்ள டென்டைன் பகுதிக்கும் சொத்தை பரவிவிடும். அப்போது பற்களில் கறுப்புப்புள்ளி அல்லது கோடு தெரியும்.அங்குக் குழிவிழும்.காய்ச்சல், கழுத்தில் நெறி கட்டுதல்,கழுத்து வலி, காது வலி போன்றவையும் தொல்லை தரும். இந்த நிலைமையிலும் சிகிச்சை பெறாவிட்டால், பல் கூழ் மற்றும் வேர்களில் சீழ் பிடித்து பழுதாகிவிடும் .நாளடைவில் இந்த வேர்கள் வலுவிழந்து போகும் போது பற்கள் ஆட்டம் கண்டு தாமாகவே விழுந்துவிடும்.

சொத்தையைத் தடுக்க வழி

1.காலை, இரவு என இரண்டு வேளை பல் துலக்க வேண்டும். மேல்தாடைப் பற்களைக் கீழ்நோக்கிச் சுழற்றியும், கீழ்த் தாடைப் பற்களை மேல் நோக்கிச் சுழற்றியும் துலக்க வேண்டும். கடிக்கும் பகுதியை முன் பின்னாகத் துலக்க
வேண்டும். நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும்.

2.ஃபுளூரைடு கலந்த அனைத்து வகைப் பற்பசைகளுமே உகந்தவைதான். பல்லில் தேய்மானம் இருந்து, பல்லில் கூச்சம் ஏற்பட்டால், அப்போது மட்டும் ‘டிசென்சடைசிங்’ பற்பசையைப் பயன்படுத்தலாம்.

3.பட்டாணி அளவிலான பற்பசை போதுமானது.

4.கரி, உப்பு, மண், செங்கல்பொடி, சாம்பல், நெல் உமி போன்றவற்றால் பல் துலக்கக் கூடாது.

5.பல் துலக்கியைப் பொறுத்தவரையில், மிருதுவான அல்லது நடுத்தர வகை பல்துலக்கியைப் பயன்படுத்துவது பற்களின் பாதுகாப்புக்கு நல்லது.

6.ஆரோக்கியமான நிலைப்பற்களுக்குப் பால்பற்கள்தான் அஸ்திவாரம்.
ஆகவே, கைவிரலில் பொருத்திக்கொள்ளும் மிருதுவான விரல் பல்துலக்கியைப்
பயன்படுத்தி, ஐந்து வயதுவரையிலும் குழந்தைகளுக்குப் பெற்றோரே பல்
துலக்கிவிட வேண்டும்.

7.குழந்தைக்குப் பாட்டிலில் பால் கொடுத்தவுடன், ஈறுப் பகுதியைத் தண்ணீரால் நன்றாகத் துடைத்துவிட வேண்டும்.

8.தினமும் ஒரு கேரட், ஒரு வெள்ளரிக்காயைச் சாப்பிட்டு வந்தால், பல் சுத்தமடையும்.

9.வைட்டமின் – சி, வைட்டமின் டி, கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் மிகுந்த மீன் எண்ணெய், திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, எலுமிச்சை, நெல்லிக்காய், பச்சையிலைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் முதலியவற்றையும், புரதச்சத்து மிகுந்த பால், முட்டை, இறைச்சி, பயறு, பருப்பு முதலியவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், பல் ஈறுகளும் எனாமலும் நல்ல வளர்ச்சி பெறும்.

10.பற்களில் ஒட்டிக்கொள்ளக் கூடிய இனிப்பு மாவு, சாக்லேட், மிட்டாய், ஐஸ்கிரீம் போன்றவற்றைச் சாப்பிட்டால் உடனே வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

11.காபி தேநீர் உள்ளிட்ட அதிகச் சூடான உணவு வகைகளையும், ஐஸ்கிரீம் உள்ளிட்ட அதிகக்குளிர்ச்சியுள்ள உணவு வகைகளையும், குளிர் பானங்களையும் அடிக்கடி சாப்பிடக்கூடாது.

12.வெற்றிலைப் பாக்கு போடுவது, புகைபிடிப்பது, பான்மசாலா பயன்படுத்துவது, மது அருந்துவது போன்றவற்றைத் தவிர்த்தால், பல்லுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.

13.குண்டூசி, குச்சி போன்றவற்றால் பல் ஈறுகளைக் குத்தி அழுக்கு எடுக்கக்கூடாது.

14.குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொள்வது பற்களுக்கு நல்லது. காரணம், அவற்றில் உள்ள அமிலங்கள் எனாமலை தாக்கிப் பற்களையும் சிதைக்கின்றன.

15.குழந்தைகளுக்கு விரல் சூப்பும் பழக்கம் இருந்தால்,சிறு வயதிலேயே அதைத் தடுத்து விட வேண்டும். தவறினால், சொத்தைப் பற்கள் மட்டுமல்ல தெற்றுப் பற்களும் தோன்றக்கூடும்.

16.தினமும் பால் அருந்துங்கள்.அதிலுள்ள கால்சியம் பல்லுக்குப் பாதுகாப்பு தரும்.

17.நகம் கடிக்கக் கூடாது. காரணம், அதன் மூலம் கிருமிகள் வாய்க்குள் சென்று நோய்களை உண்டுபண்ணும்.

18.ஆறுமாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறும் பழக்கத்தைப் பின்பற்றினால், பற்சொத்தை உள்ளிட்ட பல்வேறு பல் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே தவிர்த்துவிடலாம்.