
– டாக்டர் டி.காமராஜ்,MD,Ph.D. பாலியல் நிபுணர்
பசியில் ஏங்கித் தவிப்பவர்களை பவிட,பாராட்டுக்கு ஏங்கித் தவிக் கிறவர்களே உலகில் அதிகம்…
உண்மைதான்… யார் வேண்டுமானாலும் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யலாம். அன்புக்கும்,பாராட்டு தலுக்கும் ஏங்கித் தவிக்கிறவர்களுக்கு அதைக்கொடுக்க மிகப் பெரிய மனது வேண்டும்!
பார்வையில் அன்பைத் தேக்கி, வார்த்தைகளில் பாராட்டைக் கோர்த்து, சுலபமாக ஒருவர் இதயத்தில் இடம் பிடித்துவிட முடியும். ஆனாலும்,’ஈகோ’ என்கிற மாயப் பிசாசு, அதை அனுமதிப்ப தில்லை.முன்பின் தெரியாதவர்களிடம் மட்டுமின்றி,பெட்டர் ஹாஃப்’ என அழைக்கப்படுகிற வாழ்க்கைத்
துணையிடம் பாராட்டுதலையும் கூட அன்பையும் பகிர விடாமல் தடுக்கிறது அந்த பிசாசு!
எப்பேர்பட்ட விரோதத்தையும் ஒரே ஒரு பாராட்டு நட்பாக்கிவிடும். பாராட்டுக்கு மயங்காத மனிதர்கள் இந்த உலகில் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள். எப்போதும் ஏதேனும் ஒரு நபரிடமிருந்து ஏதோ ஒரு விஷயத்துக்கான பாராட்டுக்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிற மனதுக்கு,அதே பாராட்டை மற்றவரிடம் வெளிப்படுத்தத் தெரிவதில்லை.
வெளிநாட்டில் ஒரு வித்தியாசமான ஆய்வை நிகழ்த்தியிருக்கிறார்கள்.முன்பின் அறிமுகமில்லாத நபர்களை திடீரென சந்திக்க வைத்து, இருவரையும் மாறி மாறி பாராட்டிக்கொள்ளச்
செய்திருக்கிறார்கள். இடைவெளி விட்டுத் தொடர்ந்த இந்த பரஸ்பர பாராட்டுப் படலத்தின் இறுதியில், பெரும்பாலான ஜோடிகள் ஒருவரின் பால் இன்னொருவர் ஈர்க்கப்பட்டு, வாழ்க்கையில் இணைகிற அளவுக்கு நெருங்கியதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அறிமுகமில்லாதவர்களையே அன்யோன்யப் படுத்தக்கூடிய அற்புத சக்தி பாராட்டுதலுக்கு உண்டு என்றால், அறிமுகமானவர்களை அது எந்த அளவுக்கு இணைக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
யதார்த்த வாழ்க்கையில் நம்மில் பலருக்கும் பாராட்ட மட்டும் ஏனோ மனம் வருவதில்லை. கிடைக்கிற தருணங்களில் எல்லாம் குற்றம்,குறை சொல்வதை மறக்காமல் செய்கிற பலரும்,அவசியமான நேரங்களில் கூட, பாராட்டை வெளிப்படுத்துவதில்லை.
கணவனுக்காக ஆசை ஆசையாய் மெனக்கெட்டு வகை வகையாய் சமத்து பரிமாறும்போது…ஆஹா அருமை…சூப்பரா இருக்கு.மிக நல்லா செய்திருக்கிறாய்…என்னவளே… ரொம்ப மகிழ்ச்சி… என்று சொன்னால் எப்படி இருக்கும் தெரியுமா…
அடுத்த முறை இன்னும் சுவையாய் சூப்பராய் சமைக்க ஆர்வம் பிறக்கும்.நெஞ்சில் காதல் வளரும்.
காதலிக்கிற காலத்திலும், திருமணமான புதிதிலும் துணை என்ன சொன்னாலும் இனிக்கும். நிமிடங்கள் ஓடும்.. வருடங்கள் கரையும்.
‘காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம்கூட தங்கம் தானே…
காதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே
கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே…” என பாட்டுப்பாடத் தோன்றும்.ஆசையும் மோகமும் மங்கும் வரை துணை என்ன செய்தாலும் பாராட்டு… என்ன சொன்னாலும் பாராட்டு… பிறகு? ஆசையோடும் மோகத்தோடும் காணாமல் போவது காதல் மட்டுமல்ல… பாராட்டும்தான்.
உங்கள் துணை செய்கிற விஷயம் சிறியதோ, பெரியதோ… தயங்காமல்
பாராட்டிப்பாருங்கள். சிறுக சிறுகத் தொலைந்து கொண்டிருந்த சுவாரஸ்யம்,மீண்டும் உங்கள் வாழ்க்கையில் வந்து ஒட்டிக்கொள்ளும்.
சரி… இந்த பாராட்டும் மனப்பான்மையை எப்படி வளர்த்துக் கொள்வது? இந்தப்பாடம் கணவன்,மனைவி இருவருக்கும்தான்.
உங்கள் கணவருக்கு கிரிக்கெட் பிடிக்கிறது. உங்களுக்கு கிரிக்கெட் மட்டுமல்ல… அதை ரசிப்பவர்களையுமே பிடிக்காது.அவர் எப்போது மேட்ச் பார்க்க உட்கார்ந்தாலும், உங்கள் இருவருக்கும் சண்டைதான்… வைத்துக்கொள்வோம்.
‘என்னைவிட கிரிக்கெட்தான் முக்கியமாப் போச்சா…’ என நீங்கள் கேட்க, பதிலுக்கு அவர், ‘எத்தனை காலம் பார்த்தாலும் போரடிக்காத ஒரே விஷயம் கிரிக்கெட்தானே… நான் என்ன செய்ய’ எனக் கிண்டலடிக்க, அப்படியே வாக்குவாதம் முற்றி, அடுத்த சில மணிநேரங்களில் எங்கேயோ போய் நிற்கும்.அதற்குப் பதில், ‘அப்படி இந்த கிரிக்கெட்ல என்னதான் இருக்கு… உங்க அளவுக்கு எனக்கு ரசிக்கத் தெரியுமான்னு தெரியலை… எனக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடுங்களேன்…’ என கணவரிடம் அதைக் கற்றுக் கொண்டு ரசிக்க முயற்சி செய்து பார்க்கலாம்.
யார் கண்டது? கிரிக்கெட் என்ற வார்த்தையே பிடிக்காத நீங்கள் பெண்கள் கிரிக்கெட் அணியில் சேர்கிற அளவுக்கு அதில் ஆர்வமானாலும் ஆச்சரியமில்லை!

