முகத்தின் அழகுக்கு மேலும் அழகூட்டுவதில் உதடுகளின் பங்கு மிக முக்கியமானது. வாயைத் திறக்கவும் மூடவும்,பேசவும், விசில் அடிக்கவும், ஊதவும்,உறிஞ்சவும், பாப்பாவுக்கு(நமக்கு பிடித்தவர்களுக்கு… உதடுகள் உதவியில்லாமல் காதலை வளர்க்க முடியுமா…?) முத்தம் கொடுக்கவும் உதடுகள் உதவுகின்றன.

மூளையின் செயல்பாட்டில், கட்டை விரல் இயக்கத்துக்கு அடுத்தபடியாக அதிக இடத்தைப் பிடித்திருப்பது உதடுகள்தான். உதடுகளில் வியர்வைச் சுரப்பிகள் கிடையாது.உடலில் முடி முளைக்காத பகுதிகளில் உதடுகளும் ஒன்று. உதடுகள் அதிக அளவில் நரம்புகளைக் கொண்டிருப்பதால் தொடு உணர்ச்சி அதிகம்.காயமானால் வலியும் அதிகமாகவே இருக்கும்.ரத்த ஓட்டம் அதிகம் உள்ள பகுதியாதலால் அடிபட்டால் ரத்தம் அதிகம் வரும்.

உதடுகளின் நிறம் நீலமாக இருந்தால் இதய நோயாக இருக்கலாம் என மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்ப்பார்கள். வெள்ளை நிற உதடுகள் ரத்த சோகையைக் குறிக்கும்.உதட்டில் இயற்கையிலேயே மெலனின் என்ற நிறமியின் குறைபாட்டால் சிலருக்கு வெண்புள்ளிகள் ஏற்படலாம்.இது பிறருக்குப் பரவும் நோய் அல்ல.

உதடுகள் வறண்டு காணப்பட்டால் நாவறட்சி,நீர் இழப்பு, காய்ச்சல், வயிற்றுப்போக்கு அல்லது வெயில் காரணமாக இருக்கலாம். உதட்டின் இரண்டு ஓரங்களிலும் மைனா வாய் எனப்படும் வெளிர்நிறப் புண், வைட்டமின் ‘பி’ குறைபாட்டினால் ஏற்படும். பட்டை தீட்டாத அரிசி, பச்சைக் காய்கறிகள், கீரைகள்,பருப்பு வகைகள் தொடர்ந்து சாப்பிட்டால் இவை குணமாகும்.தினசரி இரண்டு லிட்டர் குடிநீரை அருந்தினால் உதடு காய்வது குறையும்.

உதட்டை நாவால் வருடுவதோ, கடிப்பதோ,உதட்டுத் தோலை உரிப்பதோ நல்ல பழக்கம் அல்ல. இவற்றின் மூலம் உதட்டில் புண் ஏற்பட வாய்ப்பு அதிகம். தேங்காய் எண்ணெய்,ஆலிவ் எண்ணெய், வெண்ணெய்,நெய் போன்ற இயற்கைப் பொருட்களை உதட்டில் தடவினால் வெடிப்புகள் குணமாகும். உதடுகள் பளிச்சென்று இருக்கும்.

உதட்டுச் சாயம் உதட்டைப் பளபளப்பாக்கும். சிலருக்கு ஒத்துக் கொள்ளாமல் போகவும் வாய்ப்பு உண்டு.மலிவாகக் கிடைக்கும் சீனச் சாயங்கள் உடலுக்குக் கேடு விளைவிக்கலாம். இயற்கையான உதட்டுச்சாயங்கள் இருக்கிறதா? ஏன் இல்லாமல்… நாவல் பழம்,பீட்ரூட், கள்ளிப்பழம், வெற்றிலை பாக்கு இதெல்லாம் இயற்கை உதட்டுச் சாயங்கள்தானே!