
டாக்டர்.சிவபாலன் இளங்கோவன்
மன நல மருத்துவர்
இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான பிரச்சனையாக ஆன்லைன் விளையாட்டுகளூம் சூதாட்டங்களும் மாறிக்கொண்டிருக்கின்றன.
இந்தியா முழுவதும் பலர் இந்த விளையாட்டுகளுக்கு அடிமையாகி தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துவருகிறது.இது ஆரம்ப நிலைதான்.உண்மையான தீவிரத்தை அதன் ஆபத்தை நாம் இன்னும் முழுமையாக உணரவில்லை.
எப்படி தொடங்குகிறார்கள்?
இணையத்தின் வழியாக எந்த ஒரு விளையாட்டும் முதலில் ஒரு கேளிக்கைகாகவே விளையாடப்படுகிறது. விளையாட்டுக்கள் மட்டுமல்ல, ரம்மி, ட்ரீம் 11 போன்ற சூதாட்டங்களுமே கூட முதலில் ஒரு ஆர்வத்தில் தான் தொடங்கப்படுகிறது. இதை விளையாடும் சிலரிடம் நான் பேசிய போது “ஒரு சாகஸ மனநிலையோடு தான் தொடங்கியதாக சொன்னார்கள். குறிப்பாக இளைஞர்களிடம் இருக்கும் அந்த சாகஸ மனநிலையும் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற குறுகுறுப்பும் தான் இதை நோக்கி அவர்களை பார்க்க உந்துகின்றன. அப்போது அவர்களிடம் இதில் வெற்றி பெற வேண்டும் என்ற துடிப்போ,பணம் ஜெயிக்க வேண்டும் என்ற உத்வேகமோ எதுவும் இருக்காது. தோல்விகளையும், இழப்புகளையும் கூட அவர்கள் மிக சகஜமான மனநிலையோடு கடந்து சென்று விடுவார்கள். ஆனால் இதில் திரும்பத், திரும்ப ஈடுபடுவதற்கு சக நண்பர்களின் அழுத்தமும், தனிமையும் தான் காரணமாக இருக்கின்றன. “நேரம் கிடைக்கும் போதெல்லாம் விளையாட தொடங்குனேன் சார், ஒரு கட்டத்தில் விளையாடுவதற்காகவே நேரத்தை ஒதுக்க தொடங்கினேன்” என்று என்னிடம் நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே மற்ற போதை பழக்கத்தை போலவே, தொடக்கத்தில் இந்த ஆன்லைன் விளையாட்டுக்களும், சூதாட்டங்களும் ஒரு கேளிக்கைக்காகவே தொடங்கப்பட்டாலும், போகப் போக இந்த கேளிக்கை மனப்பான்மையும், ஆர்வமும் கொஞ்சம் கொஞ்சமாக குறையத்தொடங்கி ஒரு கட்டத்தில் விளையாடியே ஆக வேண்டிய ஒரு கட்டாயத்தை ஏற்படுத்துகின்றன.
மதுபழக்கத்திற்கு அடிமையாகியிருக்கும் ஒருவரை போய் “ஏன் குடிக்கிறீர்கள்?” என்று கேட்டால் அவர் என்ன சொல்வார் “விட முடியவில்லை, அது தான் குடிக்கிறேன்” என்று சொல்வார்; அந்த நிலைக்குத்தான் இந்த ஆன்லைன் விளையாட்டுகள் இதன் பங்கேற்பாளர்களை அழைத்து செல்கின்றன. ஆனால் மற்ற போதைகளை போலில்லாமல் இந்த ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் மிக வேகமாக இந்த நிலையை வந்தடைகின்றனர்; அதற்கு காரணம் இதில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலான நேரங்களில் மிக இள வயதினராக இருப்பது தான். மாணவர்களும், இளைஞர்களும் பெரும்பாலான எண்ணிக்கைகளில் இதில் விளையாடும்போது அவர்கள் மிக சுலபமாக இதற்கு அடிமையாகி விடுகின்றனர் என்கின்றன ஆய்வுகள்.
உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் முழுமையான வளர்ச்சியை இன்னமும் அடைந்திராத பருவத்தில் இப்படிப்பட்ட விளையாட்டுக்களை விளையாடும்போது இயல்பாக இருக்க வேண்டிய பாதுகாப்புணர்வும், குற்றவுணர்ச்சியும் இல்லாத காரணத்தால் அவர்கள் மிக விரைவாக இந்த விளையாட்டுகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடுகிறார்கள். அதாவது எந்த நேரமும் அவர்களின் முழு கவனமும், ஈடுபாடும், சிந்தனைகளும் இந்த விளையாட்டை நோக்கியே இருக்கின்றன. அதனால் அன்றாட வாழ்வில் எதன் மீதும் ஈடுபாடுகளற்றும், பொறுப்புணர்ச்சியற்றும், கவனமற்றும் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையில் பிரதானமான ஒன்றாக இந்த விளையாட்டுக்கள் ஒரு கட்டத்தில் மாறிப்போகும் போது அவர்களை அவர்களின் சக வயதினரிடம் இருந்தும், குடும்பத்தினரிடம் இருந்தும், சமூகத்தில் இருந்தும் இந்த விளையாட்டுக்கள் துண்டிக்கின்றன. இந்த விளையாட்டு கொடுக்கும் நிச்சயமின்மை, அழுத்தம், அன்றாட வாழ்க்கையில் இருந்து தனிமைப்படுத்திக்கொண்டது,சக மனிதர்களிடமிருந்து முழுமையாக விலகியிருப்பது என அத்தனையும் சேர்ந்து இதில் விளையாடுபவர்களுக்கு ஒரு மன உளைச்சலை கொடுக்க தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் இதன்மீது இருக்கும் அதீத ஈடுபாட்டை உணர்ந்து கொண்டாலும் அதிலிருந்து மீளமுடியாமல்
தவிப்பதும் அந்தத் தவிப்பையும், புரிந்து கொள்ளாமல் புறந்தள்ளும் நெருங்கியவர்கள் இன்னும் நம்பிக்கையின்மையைக் கொடுப்பதாலும், அது வரை இல்லாத குற்றவுணர்ச்சி திடீரென உடைத்து பெருகுவதாலும் சில நேரங்களில் தற்கொலைகள் வரை செல்கிறார்கள். “தற்கொலை கோழைத்தனம் என நாம் அவர்களுக்குப் பாடம் எடுக்கலாம். ஆனால் அவர்களை பொறுத்தவரை அது மட்டுமே இந்த அடிமை நிலையில் இருந்து மீள்வதற்கான வழியாக அவர்கள் நினைக்கிறார்கள்.
ஆன்லைன் சூதாட்டங்கள்:
ஆன்லைன் விளையாட்டுகளைப் போல் ஆன்லைன் சூதாட்டங்களும் சமீப காலங்களில் பெருகி வருகின்றன. ஆன்லைன் ரம்மி, ட்ரீம் 11 போன்ற விளையாட்டுகள் எல்லாம் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகளாய் நம்மை துரத்துகின்றன. தொலைக்காட்சி விளைம்பரங்களில் பெரும்பாலானவை இது போன்ற ஏதேனும் இணைய சூதாட்டங்களாக தான் இருக்கின்றன. போதை பொருட்களை விளம்பரப்படுத்தக்கூடாது என்று இங்கு சட்டம் இருக்கிறது ஆனால் இந்த இணைய சூதாட்டங்களைத்தான் இன்னும் நாம் போதையாக கருதவில்லை, உண்மையில் போதையை விட மோசமான விளைவுகளை இந்த சூதாட்டங்கள் ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது.
எப்படி முறைப்படுத்தலாம்?
முதலில் இதுபோன்ற சூதாட்டங்களில் ஒருவர் மூழ்கி அடிமை நிலைக்கு செல்லும் போது நாம் அந்த தனிநபரை மட்டுமே அதற்கு காரணமாய் காட்டுவதை நிறுத்த வேண்டும். ஏனென்றால் ஒரு பெரும் வர்த்தக சந்தை எளியவர்களை நோக்கி வலை விரிக்கும் போது அதில் சிக்கிக்கொண்டவர்களை மட்டும் குற்றம் சுமத்துவது நியாயமற்றது.
சினிமா நடிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் அம்பாசிடர்களாக எந்த நேரமும் தொலைகாட்சி முன் தோன்றிஇந்த விளளையாட்டுகளின் ஆபத்துகளைப் பற்றி கவலைப் படாமல் இதை விளம்பரப்படுத்தும் போது அவர்களை ஆதர்சனமாக நினைக்கும் இளைஞர்களுக்கு இதை விளையாடி பார்க்க வேண்டும் என எண்ணம் தோன்றுவது இயல்பு தானே? அதற்கு எப்படி அந்த இளைஞர்களை மட்டும் பொறுப்பாக்க முடியும்?. அப்படி செய்வது நியாயமற்றது தானே!
உலக மனநல அமைப்புகள் இளைஞர்களிடம் உருவாகி வரும் இந்த புதுவித அடிமை நிலையை ‘ஒரு நோய்’ என வரையறை செய்திருக்கிறது. அப்படியென்றால் ஒரு நோயை உருவாக்கும் நிலையை இப்படி பிரமாண்டமாக விளம்பரம் செய்வதோ சந்தைப்படுத்துவதோ தவறு தானே!. அதை அரசாங்கம் முதலில் உணர வேண்டும், அதன் பிறகு தானே இதை முறைப்படுத்த முடியும். அரசாங்கம் இன்னமும் ‘game of skill? ‘game of chance?” என்ற வரையறையின் படி பெருநிறுவனங்களுக்கு சாதகமாக முடிவெடுத்துக்கொண்டிருந்தால் எப்படி முறைப்படுத்த முடியும்?.
முதலில் அரசாங்கம் ஒரு தெளிவான வரையறையை கொண்டு வரவேண்டும், ஒரு விளையாட்டு அடிப்படையில் என்னவாக இருக்கிறது என்பதை விட, அது சமூகத்தில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை கணித்து விளையாட்டுகளை முறைப்படுத்த வேண்டும். ஏராளமான நேரத்தையும், சிந்தனை திறனையும், மனித வளத்தையும் ஒரு விளையாட்டு விரயம் செய்யுமானால் இளைஞர்களின் வளர்ச்சிக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து அது போன்ற விளையாட்டுக்களை தடை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் முறைப்படுத்த வேண்டும்.
அதுபோலவே இது போன்ற விளையாட்டுக்களை உருவாக்கும் நிறுவனங்களும் சமூக பொறுப்புடன் இருப்பதும் அவசியமானது. இணைய உலகில் பல்வேறு செயலிகளை உருவாக்குவதும் அதை நடைமுறைப்படுத்துவதும் சவாலானது தான் ஆனால் அப்படி உருவாக்கும் செயலிகளை யாருக்காக உருவாக்குகிறோம், யாரை அதன் பயனாளர்களாக கருதுகிறோம் என்பதை வரையறை செய்வதும் முக்கியமானது.
அதே போல அந்த செயலி இணைய உலகில் வந்ததற்கு பிறகும் அதன் தாக்கத்தை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை திறந்த மனதுடன் அணுகி, அதை எப்படி குறைப்பது, அது உருவாக்கும் சீர்கேடுகளை எப்படி சரி செய்வது என்பதை பல்வேறு சமூக ஆர்வலர்களுடன் உரையாடி முறைபடுத்திட வேண்டும். இணைய உலகில் வெறும் பொருளாதார நோக்கங்களுடன் மட்டுமே இயங்க முடியாது. குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரும் உலவும் இடம் என்பதால் சமூக பொறுப்புடனும், மனித நேயத்துடன் இருக்க வேண்டியது அவசியமானது.
தனி நபர்களும் கூட இதே பாதுகாப்பும், எச்சரிக்கையுடனும் இந்த விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும். இணைய உலகம் என்பது மிக பிரமாண்டமானது. அதன் வாடிக்கையாளராகிய நம்மை பற்றி இங்கு யாருக்கும் எந்த கவலையும் கிடையாது. நமது மனநிலையைப் பற்றியோ, நமது பொருளாதார பாதிப்புகளைப் பற்றியோ அங்கு யாருக்கும் கவலை கிடையாது, எனவே நாம் தான் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். இணைய வழி விளையாட்டுக்களும், சூதாட்டங்களும் ஒரு கட்டத்தை தாண்டி நம்மை அதற்குள் இழுத்துக்கொள்ளும் தன்மை கொண்டது ஏனென்ன்றால் அவை அப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
””The social dilemma” என்று நெட்பிளிக்ஸில் ஓர் சீரியல் இருக்கிறது. அதில் புகழ்பெற்ற நிறுவனங்களின் மென்பொருள் வடிவமைப்பாளர்கள் பேசியிருக்கிறார்கள். அவர்கள் ஒரு விஷயத்தை மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள் .அனைத்து நிறுவனங்களுக்கும் இருக்கும் முதன்மையான நோக்கம் “எவ்வளவு நேரம் உபயோகிப்பாளர்களை தங்களுடைய இணைப்பில் நீடித்திருக்க வைப்பது” என்பது மட்டும் தான். அதற்காக ஏராளமான உளவியல் நிபுணர்களை கொண்டு பல செயலிகளை வடிவமைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு மக்களை பற்றி, குழந்தைகளை பற்றி, இளைஞர்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை, அவர்களின் எதிர்காலம் தொடர்பான எந்த கரிசனங்களும் இல்லை. அவர்களை பொறுத்த வரை அனைவரும் அவர்களின் வாடிக்கையாளர்கள் தான்.
இணையம் நமது உலகில் நம்மை முழுமையாக புரிந்து கொண்டு, உளவியலை தெரிந்து கொண்டு, நமது பலவீனங்களை மூலப்பொருளாக்கி அவர்கள் தங்களது சந்தையை விரிவடைய செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் நாம் தான் இதில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நமது இணைய பயன்பாட்டை நாம் எப்போதும் திறந்த கண்களுடன் கண்காணிக்க வேண்டும், இணைய விளையாட்டோ அல்லது சூதாட்டமோ நமது கட்டுப்பாட்டில் இருக்கிறதா அல்லது நாம் அதன் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்டோமா என்பதை உணர வேண்டும்.ஒரு வேளை நாம் நமது கட்டுப்பாட்டை இழந்துகொண்டிருக்கிறோம் என்றால் உடனடியாக அந்த செயலியை செல்போனிலிருந்து நீக்கவேண்டும்.
நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளவது முக்கியம்.நம்மை நாமே தொடர்ந்து கண்கானித்து வருவது ஒன்றே நம்மை பாதுகாக்கும்.

