
சமீப காலமாக புற்றுநோய் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.இளம் வயதிலேயே வரலாம்.புற்று நோய் வராமல் நம்மால் தடுக்க முடியுமா? முடியும்…நமது உணவு மூலமாகவே தடுக்கலாம்.
காய்கறிகளைப் பச்சையாகவோ சமைத்தோ மேசை மேல் வைக்கும்போது நிச்சயமாகக் கண்களுக்குக் குளிர்ச்சியாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும். கொழுப்புச்சத்து மிக மிகக் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துகள் நிறைந்ததாகவும் உள்ள காய்கறிகளை அதிக அளவில் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் காய்கறிகளில் நீர் அதிக அளவில் இருப்பதால் பசியை விரைவாக அடக்குகின்ற தன்மை இதற்கு உண்டு. கலோரிகளின் அளவும் இவற்றில் குறைவாக இருப்பதால் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்களுக்கு மிகவும் ஏற்றது.
உடல் எடையை குறைக்க குறைக்க புற்றுநோய் பாதிப்பை ஓரளவுக்கு தடுக்க முடியும்.
காய்கறிகளை அதிகப்படியான எண்ணெயில் பொரித்தோ, நிறைய எண்ணெய் சேர்த்துத் தாளித்தோ நிறைய பட்டர் அல்லது மார்ஜரீன் சேர்த்துத் தயார் செய்தோ உண்பதில் பலனில்லை.
பச்சைக் காய்கறிகளில் செய்யும் சாலட் வகைகள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் பயன் தருபவை. இரவு உணவாகப் பச்சைக் காய்கறிகளால் ஆன சாலட் வகைகள் அல்லது அரைவாசி வேக வைத்த காய்கறிகளை உண்பது ஜீரணத்துக்குத் துணைபுரியும்.
பல காய்கறிகளை உபயோகித்துச் சுவையான சூப் வகைகள் தயார் செய்யலாம். பல பச்சைக் காய்கறிகளில் நோய் எதிர்ப்பும் சக்திகளான Anti Oxidents இயற்கையாகவே அமைத்துள்ளன.
அதிகப்படியான காய்கறிகளை, சரியான முறையிலே சமைத்து உண்பவர்கள் வாழும் நாடுகளில் புற்றுநோயின் தாக்கம் அதிகம் இல்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.’கரோட்டீன்'(Carotene) சத்து அதிகமாக உள்ள மஞ்சள், செம்மஞ்சள், பச்சை நிறக் காய்கறிகளையும், புரொக்கோலி, காலிஃப்ளவர், பிரசன் ஸ்பிரௌட்ஸ் (Brussel Sprouts) போன்ற காய்கறிகளையும் அதிகமாக உட்கொள்வதுகூட இதற்குக் காரணமாக இருக்கலாம். என்கிறார்கள். அஸ்பாரகஸ் (Asparagas) என்று அழைக்கப்படுகின்ற முருங்கைக்காய் போன்றதோர் காய்கறியும் புற்றுநோய் வராமல் தடை செய்கிறது. அத்துடன் காய்கறிகளிலுள்ள நார்ச்சத்து, வைட்டமின் -சிஆகியவையும் புற்றுநோயைத் தடை செய்கின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இது தவிர ஃபோலேட்(Folate) எனப்படுகின்ற ஊட்டச்சத்தும் வைட்டமின் சி-யும் நமது சருமத்தைப் பாதுகாக்கும். வைட்டமின் ஈ-யும் பல காய்கறிகளில் செறிந்திருக்கின்றன.
நிலத்துக்கு மேல் வினையும் காய்கள், நிலத்துக்குக் கீழ் விளையும் காய்கள் என இவற்றை இரு பிரிவுகளாக்கலாம். நிலத்தின் கீழ் விளையும் உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, கேரட், முள்ளங்கி போன்றவற்றில் மாவுச்சத்து அதிகம். நிலத்தின்மேல் விளையும் கோஸ், செலரி, பீன்ஸ், கீரை வகைகள் போன்றவற்றில் நமது ஆரோக்கியத்துக்குத் தேவையான பல ஊட்டச்சத்துகளும் வைட்டமின்களும் அடங்கியுள்ளன.
காய்கறிகளை அளவுக்கு அதிகமாக வேகவைப்பதனால் அவற்றில் வைட்டமின்கள், ஊட்டச்சத்துகள் அழித்துபோக வாய்ப்புண்டு. பச்சையாகவோ அரை அவியலாகவோ உண்பது ஆரோக்கியமானது. காய்கள், கீரை போன்றவற்றை நன்கு அலசிய பின்னர் சிறிதாக வெட்ட வேண்டும். வெட்டிய பின்னர் அலசுவது தவறு.
வெளிநாடுகளில். எல்லாக் காய்கறிகளும் எல்லாக் காலகட்டங்களிலும் கிடைக்காததால் பதப்படுத்திய நிலையில் டின்களிலும் ஃப்ரீசரிலும் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. சரியான முறையிலே பதப்படுத்தும்போது அனேகமாக எல்லா ஊட்டச்சத்துகளும் பாதுகாக்கப்படுகின்றன. சில சமயங்களில் வைட்டமின்-சி அழிந்துபோக வாய்ப்பு உள்ளது. எனவே முடிந்தவரை புதிய காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து வாங்கி உபயோகித்தால் உடல் ஆரோக்கியத்தையும் நம் உடல் அழகையும் பாதுகாக்கலாம்.
சமைத்த காய்கறிகளைத் திரும்பத் திரும்ப சூடேற்றி உபயோகிக்கக் கூடாது. காய்கறிகளை சமைத்து குளிர்சாதனப் பெட்டியில் 24 மணி நேரத்துக்கு மேல் வைத்தால் அதிலிருக்கும் வைட்டமின் சி-யின் அளவு 25 சதவீதம் குறைந்துவிடும்.
காய்கறிகளை போதுமான அளவிற்கு பக்குவமாக சேர்த்து வந்தால் நோய் பாதிப்பு எதுவும் இல்லாமல் நலமுடன் வாழலாம்.

