
டாக்டர்.எஸ்.அமுதகுமார்,
பொது மற்றும் குடும்ப நல மருத்துவர்.
வயிறு கபகபன்னு பசிக்குதே…சோர்வா இருக்குதே …காதெல்லாம் அடைச்சுக்கிட்டுபோகுதே.கண்ணு மங்கலா தெரியுதே… என்ன செய்வது?
பசி என்ற ஒன்று ஏற்படும்போதுதான் மேற்கூறிய அறிகுறிகள் எல்லாம் ஒருவருக்கு நேரிடும். பசி வந்துவிட்டால் சிந்தனை வேறு எதிலும் பதியாது. ஒரு வேளை, இரண்டு வேளை அல்லது ஓரிரு நாட்கள் சாப்பிடவில்லை
என்றாலே பசி பாடாய்ப்படுத்திவிடும்.
உடலில் ஏற்படும் இயற்கையான தூண்டுதலினால், உடலிலுள்ள உணவுக்கிடங்குகளை மறுபடியும் நிரப்புவதற்காக காட்டப்படும் ஒரு உடல் உணர்வே ‘பசி’ எனப்படுகிறது.
பசியின் உச்சகட்ட, கடைசி வேதனை நிலை தான் ‘பட்டினி’, ஒரு மனிதன் தனது உடலுக்குத் தேவையான, போதுமான சத்து ணவுகளை நீண்ட நாட்களுக்கு கொடுக்க முடியாமற் போவதே பட்டினி.
பசி என்பது உடலை, அந்த நேரத்தில் மட்டும் பாதிக்க செய்யும். ஆனால் பட்டினி அப்படியல்ல. நீண்ட நாட்களுக்கு போதிய உணவு இல்லாமற் போவதால் உடலையும், மனதையும் பாதித்து, உடலில் ஏகப்பட்ட பக்கவிளைவுகளையும் உண்டுபண்ணி விடும்.
உணவு கிடைக்காமல் சாப்பிட வழியில்லாததால் உருவாவதும் பட்டினிதான்.உணவு இருந்தும், உடல் நோயினால் பாதிக்கப் பட்டு சாப்பிட முடியாமல் போவதும் பட்டினி தான். சந்தர்ப்ப சூழ்நிலையால் சாப்பிட முடியாமல் அவதிப்படுவதும் ஒருவகை பட்டினிதான்.
பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் மக்கள் பிரச்சினைகளுக்காக உண்ணாவிரதம் இருப்பதுண்டு. உடல் எடையைக் குறைக்க பட்டினி இருப்பவர்களும் உண்டு. பசியில்லாததனால்
சாப்பிடாமல் பட்டினியாய் இருப்பவர்களும் உண்டு. வளர்ச்சியடையாத பல நாடுகளில் இன்றும் ஏழ்மையால் பட்டினி இருந் து கொண்டுதான் இருக்கிறது.
பட்டினி மோசமானது. ஆளையே கொன்றுவிடக் கூடியது. முதலில் உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்புக் கிடங்குகளிலுள்ள கொழுப்பை எரிக்கும். அடுத்து உடலிலுள்ள பெரிய தசைகள், அப்புறம் சிறிய தசைகளை பாதிக்கும். உடல் எடையை வேகமாக குறைக்கும்.
பட்டினியால் கஷ்டப்படும் சிலருக்கு, முதலில் கொழுப்பைக் காட்டிலும் தசையில் தான் அதிக பாதிப்பு ஏற்படும். இதற்கு பெயர் ‘Catabolism’. கொழுப்பில் இருக்கும் சக்தியை விட தசையில் இருக்கும் சக்தி சற்று அதிகம்.
ஆகவே உடல் இந்த தசைகளிலுள்ள சக்தியை முதலில் பயன்படுத்தி, உடலைக் காப்பாற்ற முயற்சி செய்யும். இப்படிச் செய்யும் போது கொழுப்பு,தசைகள் மட்டுமல்லாது, ‘எலெக்ட்ரோலைட்ஸ்’ என்று சொல்லக்கூடிய கால்சியம், மக்னீசியம், சோடியம் இவைகளையும் கரைத்துவிடும். எலெக்ட்ரோலைட்ஸ் உடலில் இல்லாவிட்டால், உடலிலுள்ள நரம்புகள் செயல் இழந்துவிடும். கடைசியில் அவ்வளவுதான், வாழ்க்கை முடிந்துவிடும். எனவே பட்டினி என்பது விளையாட்டான காரியம் அல்ல.
பட்டினி தவிர்க்கப்படவேண்டும். அதிலும் சர்க்கரை வியாதி போன்ற நாள்பட்ட நோயுள்ளவர்கள் ஒருவேளை இருவேளை பட்டினியாய் இருப்பதுகூட நல்லது கிடையாது. ஒரு வேளை தானே, ஒன்றும் செய்யாது. ஒரு நாள்தானே சமாளி துக்கொள்ளலாம் என்று நாம் நினைக்கலாம்.
ஆனால் வெளியே தெரியாமல் உடலுக்குள் பயங்கர பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். உறுப்புகளை செயலிழக்கச் செய்யும். பட்டினியாய் கிடக்கும்போது கல்லீரல், உணவுக் குடல்கள் போன்றவை எடை குறைய ஆரம்பித்துவிடும். எடை குறைந்து கொண்டே போனால், அந்தந்த உறுப்புகள் செயல் இழந்து நிரந்தரமாக பாதிக்கப்பட்டு விடும்.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், பட்டினியால் இருதயம் பாதிக்கப்பட்டால், இருதயத்தின் எடை குறைந்து போகும். இருதயத்தின் எடை குறைந்து போனால், இருதயத்தின் அளவு குறைந்து போகும். இதனால் ரத்த அழுத்தம் குறைந்துவிடும். அதைத்தான் குறைந்த ரத்த அழுத்தம் என்கிறோம். அதை தொடர்ந்து இருதய துடிப்பும் குறைந்துவிடும். இவைகள் எல்லாம் இருதயத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டுபண்ணிவிடும்.
இதே மாதிரிதான் பட்டினியாய் பல நாட்கள் இருந்தால், இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு ஒழுங்காக வேலை செய்ய முடியாமற்போய், கடைசியில் சுமார் எட்டிலிருந்து 12 வாரத்திற்குள் ஆளையே காலி பண்ணிவிடும். இதனால் தான் பல வாரங்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கும் சிலர், இந்த பட்டினிக் கொடுமைகளை அனுபவித்து இறந்து போகிறார்கள். எனவேதான் அவர்களை அதிக நாட்கள் உண்ணாவிரதம் இருக்க விடுவதில்லை.
செல்களும், திசுக்களும் ஆரோக்கியமாக இருக்க உடலிலுள்ள தண்ணீரைத்தான் நம்பியிருக்கின்றன. உப்பும், தாதுப்பொருட்களும் உடலில் குறிப்பிட்ட அளவில் சீராக இருக்க வேண்டும். பட்டினி கிடந்தால் முதலில் உப்பும், தண்ணீரும் குறைந்துவிடும். உடலில் அதிக அளவில் உப்பும் தண்ணீரும் குறைந்து போனால், சிறுநீரகம் வேலை செய்யாது.
இதன் விளைவாக தசைகளும், தசை நார்களும் பலம் இழந்து விடும். எலும்புகளும் சக்தி குறைந்து எளிதாக உடையும் நிலைக்கு சென்றுவிடும். வளரும் பருவத்தினரான சிறுவர்கள் பட்டினியாய் கிடந்தால் எலும்புகள் நீளமாகவும், கனமாகவும் வளர்வது தடைபட்டு, உயரம் குறைவானவர்களாக ஆகிவிடுவார்கள்.
பட்டினியாய் கிடக்கும்போது உடலில் போதுமான அளவு
கொழுப்புச்சத்து இல்லாததால், பெண்களுக்கான ஹார்மோனாகிய ‘ஈஸ்ட்ரோஜன்’ உற்பத்தி தானாகவே குறைந்துவிடும். இதனால் மாதவிலக்கு நின்று போய் விடும். கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு குறைந்துவிடும். இதே மாதிரிதான், ஆண்களுக்கான ஹார்மோனாகிய ‘டெஸ்டோஸ்டிரோன்’ உற்பத்தியும் குறையும்.
பட்டினியாய் இருப்பவரது உடலில் சத்துக்களெல்லாம் கொஞ் சம் கொஞ்சமாக கரைந்துபோய், குறைந்து போய், உடல் செயலை இழந்து, சக்தியை இழந்து, கடைசியில் உயிரையே இழக்கும் நிலைக்கு ஆக்கிவிடும்.
சாப்பிடாமல் வயிறு நீண்ட நாட்கள் காலியாகவே இருப்பதால், இரைப்பையில் அமிலம் சேர்ந்து பல பிரச்சினைகளை உண்டு பண்ணும். இரைப்பையிலுள்ள அமிலம் தொண்டை வரை வந்து தொண்டை, உணவுக்குழாய் முதலியவற்றை எரிச்சல்படுத்தும்.
இரைப்பையிலுள்ள அமிலம் வாய் வரைக்கும் வருவதால், பற்களில் எனாமல் பாதிக்கப்பட்டு கறைகள் படிந்து, பற்சொத்தை தோன்றும். ரத்த வாந்தி வரலாம். சிறுகுடல் பெருங்குடலின் அசைவு குறைந்துவிடுவதால் மலச்சிக்கல் ஏற்படும். தண்ணீர் குறைந்து விடு வதால், வயிறு ஊதிவிடும். பொட்டாசியம் குறைந்து போவதால் இருதய பாதிப்பு ஏற்படும்.
வயிற்றுக்கோளாறு, அதிக குளிர் தாங்கமுடியாமற்போவது, வெளிச்சம் மற்றும் சப்தத்துக்கு பயப்படுவது, ஈறுகள் வீங்கிப்போவது, பல்லில் இருந்து ரத்தம் கசிவது, உடல் எடை குறைவது ஆகியவை பட்டினியாய் இருப்பதால் ஏற்படும் கூடுதல் பாதிப்பு களாகும்.
முதலில் கொழுப்பு கரையும். அப்புறம் தசைகள் கரைந்து, எலும்புகள் தெரியும். முடியும் கொட்டிவிடும். இருதயத் தசைகள் பலவீனமாகிவிடும். கடைசியில் உடலின் மொத்த உறுப்புகளும் செயலிழந்து, முடிவில் மரணம்தான் மிஞ்சும். இது தான் பட்டினியின் பரிதாப நிலை.
எனவே தேவையில்லாமல் பட்டினி இருக்க வேண்டாம். ஒரு வேளைதானே, ஒரு நாள் தானே என்று நினைக்காமல், முடிந்த வரை அந்தந்த வேளை உணவை முறையாக சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ முன்வாருங்கள்.

