முத்தம் என்ற சொல், ஒவ்வொரு பருவத்திலும் வெவ்வேறு வகையான உணர்வுகளை நமக்குள் உண்டாக்குவது இயல்பு.அன்பின் பரிமாணங்களான காதல்,காமம், அரவணைப்பு,பாசம், நேசம் போன்ற அனைத்து உணர்வுகளையும் ஆழமாக வெளிப்படுத்துவதற்கான ஆயுதம் தான் முத்தம்.அனைத்து வகையான முத்தங்களும், மருத்துவ ரீதியில் மற்றும் உணர்வு ரீதியில் உடலுக்கும் மனதிற்கும் உற்சாகத்தை அள்ளிக் கொடுப்பவை தான். மருத்துவப் பலன்கள் நிறைந்த முத்தங்கள் இன்று பரிமாறப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியே. முத்தம் என்றவுடனே அதை காமத்தின் குறியீடாக பார்ப்பதே பெரும்பாலோரின் வழக்கம்.ஆனால் காமத்தைத் தாண்டி, பல உண்மைகளை முத்தங்கள் தன்னகத்தே ஒளித்து வைத்திருக்கின்றன!

மருத்துவ முத்தம்:

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பிக்-பாஸ்’ நிகழ்ச்சியில் மருத்துவ முத்தம் என்ற புதிய சொல்லாட்சியை கமல் அவர்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தினாலும்,காதல் தொடங்கிய ஆதிகாலத்திலிருந்தே முத்தங்கள் அனைத்திற்கும் மனஅழுத்தத்தைப் போக்கும் மருத்துவ குணம் உண்டு. அவ்வகையில் முத்தங்கள் எப்போதிருந்தே மருத்துவ முத்தங்கள்தான்.

குழந்தை பிறந்தவுடன் தாயால் தன் குழந்தைக்கு கொடுக்கப்படும் முதல் முத்தம், தாய்-சேய் பாசப்பிணைப்பை உறுதி செய்யும். பிள்ளைகள் தந்தைக்கு வழங்கும் முத்தம்,தந்தையின் சாட்சியை சொல்லும். காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தம்… மனைவி கணவனுக்கு வழங்கும் முத்தம்… அனைத்துமே காதல் ஹார்மோனை சுரக்கச் செய்து உறவுகளை பலப்படுத்தக்கூடியவை.உதடுகள் நடுங்க வயதான பாட்டி, ஆசைத் தாத்தாவிற்கு பரிமாறும் நடுக்கமுத்தம், முதிர்ந்த வயதில் உருவாகும் நடுக்கங்களையும் போக்கும் மருத்துவ குணம் மிக்கது. இப்படி எத்தனையோ நன்மைகளை செய்யும் பல்வேறு வகையான முத்தங்கள் போதுமான அளவிற்கு அனைவருக்கும் கிடைக்கின்றனவா?  சந்தேகம் தான்.

மருத்துவ உண்மைகள்:

காதல் ஹார்மோன் என்று செல்லமாக அழைக்கப்படும் ஆக்ஸிடோசின் (Oxytocin) ஹார்மோன் சுரப்பினைத்தூண்டி அன்புணர்வை முத்தங்கள் அதிகரிக்கும்.இரத்த அழுத்தம்,தலைவலி, உடல் அசதி,சில வகையான இதய நோய்கள், மனஅழுத்தம் போன்ற நோய்களைக் குறைக்கும் தன்மையும் முத்தங்களுக்கு உண்டு. முகப்பொலிவினை உண்டாகுக்வதற்கும் முத்தங்கள் உதவும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வல்லமை முத்தங்களுக்கு இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அன்பை வெளிப்படுத்தும் முத்தத்தை மருந்தாக பயன்படுத்தலாம்.விலை இல்லை; கொடுப்பதிலும் சிரமம் இல்லை;தாராள மனசும்,அன்பான இதயமும் முக்கியம்.

– டாக்டர்.வி.விக்ரம்குமார்.அரசு சித்த மருத்துவர்