சமீபகாலமாக மன அழுத்தம் பற்றி அதிகம் பேசப்படுகிறது‌.மன அழுத்தம் எப்படி ஒருவருக்கு தீராத பாதிப்புகளை ஏற்படுத்த முடிகிறது. மனம் எங்கே தான் இருக்கிறது? டாக்டர்.

-பா.புகழேந்தி, மந்தைவெளி.சென்னை.

டாக்டர் ஜி.ராஜமோகன் பதில்.

ன அழுத்தம் எப்படி உடல் ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்ற சந்தேகம் எல்லாருக்கும் இருக்கிறது. ஏன் மருத்துவர்களுக்கே கூட அது இருக்கிறது.மனதை உடலின் ஒரு அங்கமாக ஏற்றுக்கொள்வதில் உள்ள தயக்கமே அதற்குக் காரணம். மன அழுத்தம் தொடர்பான அத்தனை அலட்சியத்திற்கும், புரிதலின்மைக்கும் மிக முக்கியமான காரணமாக நான் நினைப்பது மனதின் உருவமற்ற தன்மையையே. மனதிற்கு என்று எந்த உருவமும் இல்லை.

ஒரு இதயத்தைப் போல, ஒரு நுரையீரலைப் போல, ஒரு சிறுநீரகத்தைப் போல நம்மால் மனதைப் பார்க்க முடியாது. ஏனென்றால் மனம் என்பது ஒரு அலகு (functional unit).அதாவது கணினியில் உள்ள மென்பொருள் போல மூளையில் உள்ள மென் பொருள் மனம். ஒரு operating system.இந்த உருவமற்ற தன்மையால் மனதில் வரக்கூடிய பிரச்சினைகளும் வெளிப்படையாகத் தெரியக் கூடியதாக இல்லை.உதாரணத்திற்கு ஒருவருக்குக் கையில் எலும்பு உடைந்துவிட்டால் அது வெளிப்படையாகத் தெரிகிறது.அதனால் அதை நாம் ஏற்றுக்கொள் கிறோம்,அவரின் இயலாமை அப்போது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப் படுகிறது.ஆனால் மனச்சோர்வும் அதே போன்ற இயலாமையை அவருக்குக் கொடுத்தாலும் நாம் அதை ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறோம்.காரணம், மனச்சோர்வு வெளிப்படையாக நமக்குத் தெரியவில்லை. நமக்குத் தெரியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் நாம் மனதின் இருப்பை, அது உடலின் ஒரு அங்கம் என்பதை நாம் நிராகரிக்கிறோம்.

உண்மையில் மனம் என்பது உடலின் ஓர் அங்கம்.அதுவும் மிக முக்கியமான அங்கம். உடலில் என்ன பிரச்சினை என்றாலும் அது மனதையும் பாதிக்கும்.மனச்சோர்வுக்கு சிகிச்சை அவசியம்.