முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D.

உதவிப்பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி), கோயம்புத்தூர்.
மரிக்கொழுந்தின் வாசம் நம் கலாச்சாரத்தில் மிக அதிகமாக அறியப்பட்ட ஒன்றாகும்.மிகப் புனிதமான மூலிகையாக கருதப்படும் இது கோவில்களில் மிக அதிகமான புழக்கத்தில் இருக்கும்.மற்ற பூக்களுடன் சேர்த்து மாலையாக தொடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மரிக்கொழுந்தின் தாவரவியல் பெயர் ஆர்டிமீசியா பேலன்ஸ் (Artemisia pallens) ஆகும்.
பொதுவாக இது தவணம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால்,Origanum majorana என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட மருகு,பல இடங்களிலும் மரிக்கொழுந்து என்றே பிழையாக அறியப்படுவதால் இவை இரண்டும் வெவ்வேறு தாவரங்கள் என்று நாம் அறிந்து கொள்வது மிகவும் அவசியமானதாகும். ஏனெனில்,இவை மருத்துவ குணத்திலும் இரு வேறு குணம் உடைய மூலிகைகளாகும்.

மரிக்கொழுந்தின் இலைகள் மிக மெல்லியனவாகவும், வெள்ளை நிற பட்டுப் போன்ற அதன் கீழ்ப்பகுதி இலைகளுக்கு சாம்பல் அல்லது வெள்ளை(silver)நிற தோற்றத்தை அளிக்கிறது.இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும், இது ஆஸ்ட்ரேசி தாவர குடும்பத்தை சார்ந்ததாகும். ஆனால் மருகு அல்லது மருவா (Hindi) லேமியேசி குடும்பத்தைச் சார்ந்த ஒரு சிறிய கொத்து செடி மூலிகை ஆகும். இதன் இலைகள் சிறிய வட்ட வடிவிலும்,பூக்கள் வெண்மை நிறத்திலும் இருக்கும்.இதன் இலைகள் ஓரிகோனோ என்ற பெயரில் பீட்சா போன்ற மேற்கத்திய உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இத்தாவரம் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் சில ஆசிய நாடுகளில் வளருவதாகும். எனவே தாவரங்களின் வேறுபாட்டை நன்கு அறிந்து பயன்படுத்துதல் முக்கியம்.
மரிக்கொழுந்து தென்னிந்தியாவின் பூர்வீக மூலிகை ஆகும்.இத்தாவரம் நறுமணம் கொண்ட இலைகள் மற்றும் பூக்களுக்கு பெயர் பெற்றது.தவணம் என்றும் அழைக்கப்படும் இத்தாவரம் இந்திய பாரம்பரிய மருத்துவ மற்றும் நாட்டுப்புற கதைகளில் மிகவும் மதிப்பு மிக்க மூலிகையாக அறியப்படுகிறது. இந்திய மற்றும் ஈராக்கிய பாரம்பரிய மருத்துவத்தில் இத்தாவரம் நீரிழிவு எதிர்ப்பு பண்புகளுக்காக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
காயத்தை குணப்படுத்துதலுக்கும்,காயத்தை குணப்படுத்துவதை ஊக்குவிக்கவும், இது பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.நோய் எதிர்ப்பு மண்டலத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இம்யூனோ மாடுலேட்டரில் பண்புகள் உடையதாக கருதப்படுகிறது. இது வயிற்றில் உருவாகும் ஒட்டுண்ணி புழுக்களை அகற்ற, இலைகளின் சாறு உள் மருந்தாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இலைகளின் சாறு காய்ச்சலை குறைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.தவனாவிலிருந்து பெறப்படும் அத்தியாவசிய எண்ணெய் பொருளானது பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு சக்தி கொண்டதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.வாசனை திரவியம் மற்றும் அழகு சாதன பொருட்களில் முக்கிய இடுபொருளாக பல்வேறு தயாரிப்புகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த எண்ணெயானது இனிப்பு மற்றும் பழ வாசனையை கொண்டுள்ளது.
இதன் காரணமாகவே இம்மலர்கள் பல்வேறு வழிபாட்டு தலங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
ஆயுர்வேத மருத்துவத்தில் மரிக்கொழுந்து நரம்பு பிரச்னைகளை சரி செய்யவும்,மனநல கோளாறுகளை சரி செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.வரலாற்று ரீதியாக பார்க்கும்போது இவ்விலைகள் மற்றும் பூக்கள் இருமல் சளி மற்றும் அம்மை நோய் ஆகியவற்றை நிவர்த்தி செய்ய பயன்படுத்தப்பட்டு வந்ததாக அறியப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் ரத்த உயர் அழுத்தத்தை சீராக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மரிக்கொழுந்தின் இலைகள் காய வைக்கப்பட்டு பொடியாக மனச்சோர்விற்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
மரிக்கொழுந்தின் இலைகள் மற்றும் பூக்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயானது நீராவி வடிகட்டுதல் முறைப்படி பிரித்தெடுக்கப்படுகிறது.இதன் தனித்துவமான வாசனை நறுமண சிகிச்சை பண்புகளுக்கு உதவுகிறது.அரோமா தெரபி முறைகளில் மனத்தளர்வை ஊக்குவிக்கவும்,மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கவும், மனநிலையை மேம்படுத்தவும் இந்த எண்ணெயை உபயோகப்படுத்துகிறார்கள். மேல்பூச்சுக்கு அதிகமாக பயன்படும் இந்த எண்ணெய் ஆன்டிசெப்டிக் மற்றும் காயம் குணப்படுத்துதலுக்கு உகந்ததாக உள்ளது. ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து சிறிய வெட்டுக் காயங்களுக்கு மேல் பூச்சாக பயன்படுத்தப்படுகிறது.இதனால் தொற்று நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.வறண்ட சருமத்தை ஹைட்ரேட் செய்யவும் வயதான தோற்றத்துடன் கூடிய கோடுகளைக் கொண்ட தோலை இளமையாக மாற்றவும்,முகப்பரு போன்ற பிரச்னைகளை நிவர்த்தி செய்யவும் லோஷன்களாக அல்லது கிரீம்களாக வணிக ரீதியாக தயாரிக்கப்படுகிறது. மசாஜ் எண்ணெயில் மிக அதிகமான இடத்தை பிடிக்கிறது.
மனதை மயக்கும் நறுமணம் கொண்ட மரிக்கொழுந்து வழிபாட்டுத் தலங்களில் மட்டுமல்ல நம் வாழ்க்கையில் நோயிலிருந்து காப்பாற்றும் அருமருந்தாகவும் பயன்படுகிறது. இவ்வாறான எளிய மூலிகைகளை அதன் உயரிய மருத்துவ பண்புகளை நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி ஆரோக்கியத்துடன் வாழ்வோமாக.

