
மன நலம் காக்க உதவுவது நகைச்சுவை உணர்வு. நகைச்சுவை என்பது வெறும் உணர்ச்சி மட்டுமல்ல.அது அறிவுபூர்வமானது. நகைச்சுவை ஒரு வேடிக்கை மனப்பான்மை என்பதைத் தாண்டி, அது ஒரு மனிதனுக்கு பலத்தைத் தருகிறது. மிகக் கடினமான சூழ்நிலையில் இருந்து ஒருவர் தன்னை விடுவித்துக்கொள்ள, அந்த கடினமான சூழ்நிலையை எதிர்த்துப் போராட இந்த நகைச்சுவை உணர்வு முக்கியமானது.
ஒரு சூழலை நகைச்சுவையாக மாற்றுவது என்பது அத்தனை கடினமான ஒன்று.அதை மட்டும் செய்துவிட்டால் எத்தகைய கடினமான சூழலில் இருந்தும் நாம் தப்பித்து வந்துவிடலாம்.
நகைச்சுவை என்பது ஒரு சூழலின் இறுக்கத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல்,அது நமது உடலில் சில வேதியியல் மாற்றங்களையும் செய்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.மேலும் அப்படி ஏற்படும் மாற்றமானது நமது மன இறுக்கத்தையும் வெகுவாகக் குறைக்கிறது என்று சொல்கின்றனர்.
எந்த ஒரு பிரச்னையையும் மிக விரைவாக சரி செய்ய வேண்டுமானால், அந்தப் பிரச்னையில் உள்ள நகைச்சுவை அம்சத்தை நாம் முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.
“நகைச்சுவை உணர்வுதான் மனித குலத்திற்குக் கிடைத்த ஆகச்சிறந்த வரப்பிரசாதம்” என்கிறார் மார்க் ட்வையின் என்ற அறிஞர்.
“நகைச்சுவை உணர்வு என்ற ஒன்று எனக்கு இல்லையென்றால் நான் எப்போதோ தற்கொலை செய்து கொண்டிருப்பேன்.” இதைச் சொன்னது நமது மகாத்மா காந்தி.
உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃபிராய்ட், ஒரு வளர்ச்சி யடைந்த, முதிர்ச்சியடைந்த மற்றும் பக்குவப்பட்ட மனநிலைதான் நகைச்சுவை என்கிறார்.நிறைய உளவியல் சிக்கல்களை,மனம் இந்த நகைச்சுவை உணர்வைக் கொண்டுதான் சரி செய்கிறது. என்கிறார்.
நாம் ஒரு சூழலை நகைச்சுவை மனப்பான்மையால் இலகுவாக மாற்றுவதன் மூலம், அதில் உள்ள பிரச்னைகளின் வேர்களை எந்தப் பதட்டமும் இன்றி தெரிந்துகொள்ளலாம்.பிறகு அந்தப் பிரச்னையை நாம் நிதானமாகக் கையாளலாம்.
எந்த ஒரு பதட்டமும் இன்றி தெளிவாகவும், நிதானமாகவும், அறிவுப்பூர்வமாகவும் ஒரு பிரச்னையை அணுகும்போது நாம் அந்தப் பிரச்னையில் இருந்து விரைவாக மீண்டு வருவது மட்டு மல்லாமல்,அந்தப் பிரச்னையின் பாதிப்பில் இருந்தும் நமது மனதையும் உடலையும் பாதுகாத்துக்கொள்ளலாம்.
நகைச்சுவை என்பது ஒரு ஸ்பிரிங்போல, வாழ்க்கையின் அத்தனை மேடு பள்ளங்களில் இருந்து நமது உடலையும் மனதையும் காப்பாற்றுகிறது. அந்த ஸ்பிரிங் இல்லையென்றால் நாம் ஒவ்வொரு பிரச்னையிலும் விழுந்து,எழுந்து அடிபட்டு போய்க்கொண்டிருப்போம்.
நகைச்சுவையின் நோக்கம் என்னவென்றால், நாம் நமது சூழ்நிலையின் இறுக்கத்தைத் தளர்த்த வேண்டும். ஒரு கடினமான சூழலை இலகுவாக மாற்ற வேண்டும். அப்படி செய்ய வேண்டும் என்றால் முதலில் அந்தச் சூழலை நாம் முழுமையாக அறிவுப்பூர்வமாக
புரிந்துகொள்ள வேண்டும்.அந்தச் சூழலில் உள்ள நகைச்சுவை அம்சத்தை நமது நுண்ணறிவால் உணர்ந்து கொள்ள வேண்டும்.அப்படிச் செய்யும்போது அந்த நகைச்சுவை உணர்வு இயல்பாகவே எந்த முனைப்பும் இன்றி நமது மன இறுக்கத்தைக் குறைக்கும்.
இறுக்கமான சூழ்நிலையும், இறுக்கமான மனமும்தான் ஒரு பிரச்னையை எதிர்கொள்வதில் நமக்குச் சிக்கல்களைத் தரும். அந்தச் சிக்கலில் இருந்து நம்மை முழுமையாக மீட்டுக்கொண்டு வரவேண்டுமானால், நிச்சயம் நாம் நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும்

