-டாக்டர் கு.கணேசன், MBBS, குடும்ப நல மருத்துவர்.

பால் மிகச் சிறந்த பரிபூரண உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவைப்படும் ஒரு முக்கிய உணவாக இதை கருதுகிறோம். பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள் சிலருக்கு அலர்ஜியாகலாம்.அலர்ஜியால் ஏகப்பட்ட தொந்தரவுகள் வரும்.

காரணம் என்ன?

பாலில் லேக்டோஸ் எனும் சர்க்கரை இருக்கிறது.இதை செரிப்பதற்கு சிறுகுடலில் லேக்டேஸ் எனும் என்சைம் சுரக்கிறது. குடித்த பால் சிறுகுடலுக்கு வந்ததும்,இது லேக்டோஸை குளுக்கோஸாகவும் கேலக்டேஸாகவும் உடைக்கிறது. இதனால்,குடல் உறிஞ்சிகள் இந்தச் சத்துகளை எளிதாக உறிஞ்சி ரத்தத்துக்கு அனுப்புகின்றன.

சிலருக்குக் குடலில் லேக்டேஸ் என்சைம் குறைந்த அளவில் உற்பத்தியாகும். இன்னும் சிலருக்குக் கொஞ்சம்கூட உற்பத்தியாவது இல்லை.அப்போது பாலில் உள்ள லேக்டோஸ் செரிக்கப்படாமல்,
பெருங்குடலுக்குச் சென்றுவிடும்.அங்கு இயல்பாக உள்ள பாக்டீரியாக்கள் செரிக்கப்படாத லேக்டோஸூடன் வினைபுரியும்.இதன் விளைவால்,பல செரிமானப் பிரச்னைகள் உருவாகும்.இந்த நிலைமையைப் பொதுமக்கள் பரவலாக ‘பால் ஒவ்வாமை'(Milk Allergy) என்கிறார்கள். மருத்துவர்கள் இதை ‘பால் ஒத்தியலாமை ‘ (Lactose Intolerance) என்கிறார்கள்.

அறிகுறிகள் என்ன?

பால் அல்லது பாலில் தயாரிக்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட அரை மணிநேரத்திலிருந்து இரண்டு மணி நேரத்துக்குள் வயிற்றைக் கலக்குவதுபோலிருக்கும்.இதைத் தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்படும்.குமட்டலும் வாந்தியும் வரும். வயிற்றில் வாயு சுற்றுவது போல் இருக்கும்.வயிற்று உப்புசம்,வயிற்றைப் பிசைகிற மாதிரி வயிற்று வலி போன்றவை ஏற்படும்.

என்ன சிகிச்சை?

இந்த நோய்க்குத் தனிப்பட்ட சிகிச்சை எதுவும் இதுவரை இல்லை‌.பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடாமல் இருப்பது ஒன்றுதான் இந்த நோயைத் தடுக்கும் ஒரே வழி. முற்றிலும் இந்த உணவுகளைத் தவிர்க்க இயலாதவர்கள், குறைந்த அளவில் இவற்றை எடுத்துக்கொள்ளலாம்.இதைக்கூட ஒரே நேரத்தில் சாப்பிடாமல்,சிறிய இடைவெளியில் அடிக்கடி சாப்பிடுவது இன்னும் நல்லது.

ஒருவருக்கு எந்த உணவு ஒத்துக்கொள்வது இல்லை என்பதை அறிய,ஒரு வாரத்துக்கு தினமும் சாப்பிடும் உணவை ஒரு டைரியில் எழுதி வைத்துக்கொண்டு, அதிகம் தொல்லை தரும் உணவு எது,குறைந்த அளவில் தொல்லை தரும் உணவு எது என்பதைக் குறித்துக்கொள்ள வேண்டும்.அதிகம் தொல்லை தரும் உணவுகளை முழுவதுமாகத் தவிர்க்கவேண்டும். குறைந்த தொல்லை தருவதை சிறிது சிறிதாகச் சாப்பிடலாம். லேக்டோஸ் குறைவாக உள்ள உணவுகளைத் தெரிந்துகொண்டு, அவற்றை அடிக்கடி சாப்பிட்டுக்கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு லேக்டோஸ் இல்லாத செயற்கைப் பால் பவுடர் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தலாம். பெரியவர்களுக்கு பாலுக்கு மாற்றாக சோயா பால் உதவும். மோருக்குப் பதிலாக தயிர் சாப்பிடலாம். (தயிரில் லேக்டோஸ் இருக்கிறது என்றாலும் அதிலுள்ள பீட்டா கேலக்டோசைடேஸ் எனும் என்சைம் லேக்டோஸை செரிக்கும் குணம் உடையது.)பாலை மட்டும் தனியாகக் குடிப்பதற்குப் பதிலாக,திட உணவைகளைச் சாப்பிட்டு முடித்ததும் குடிக்கலாம். கடையில் வாங்கும் ஐஸ்கிரீமுக்கு மாற்றாக வீட்டில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம் நல்லது. புரோபயாடிக்ஸ் மாத்திரைகள் சிலருக்கு உதவக்கூடும். பயன்படுத்திப் பார்க்கலாம்.