புதிய நம்பிக்கை – 9

னிதர்களில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று இரண்டு வகைகளுண்டு… பொதுவாகச் சொல்லும் அடிப்படையான உண்மை, ’நல்லவர்கள் என்பவர்கள் மற்றவர்களுக்குத் துன்பம் கொடுக்கும் செயல் என்று கருதப்படும் எந்தச் செயலையும் செய்ய மாட்டார்கள்’ என்பதுதான்… அதற்கு மாறாக, ’கெட்டவர்கள் எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தங்களின் இன்பத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவார்கள்’ என்பது…

இந்த இரண்டு வகையான மனிதர்களிடமும் இருக்கும் இயல்பு என்பது, இருவருமே தாங்கள் செய்யும் செயலின் தன்மையை அறிந்தே நடந்து கொள்வது… நல்லவர்கள் தாங்கள் செய்வது மற்றவர்களுக்கு நன்மை என்று தெரிந்து, உணர்ந்து செய்வதைப் போலவேதான் கெட்டவர்களும் தாங்கள் செய்வது தீமையானது என்பதையும் தெரிந்தேதான் செய்கிறார்கள்…

இப்படித் தெரிந்தே நல்லதையும் கெட்டதையும் செய்யும் இந்த வகை மனிதர்களிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டு வாழும் மனிதர்களும் இருக்கிறார்கள்… இவர்களுக்குத் தாங்கள் செய்வது நல்லதா..? கெட்டதா..? என்ற எவ்விதமான அடிப்படைப் புரிதலோ, குறைந்தபட்ச சிந்தனையோ, தங்களைச் சுற்றியுள்ள சமூகத்தைப் பார்த்து அங்கு என்ன நடக்கிறது..? நாம் இப்படி இருக்கக் கூடாதே என்கிற உணர்வுகளெல்லாம் சுத்தமாக இல்லாமல் தங்கள் போக்குக்கு, தாங்கள் நினைத்ததைச் செய்து கொண்டு, விருப்பம் போல் வாழ்கிறார்கள் இந்த மூன்றாம் வகை மனிதர்கள்…

இப்படிப்பட்ட மனிதர்கள் மிகவும் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறார்கள்… இவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது என்பது கெட்டவர்கள் அதிகமாவதைப் போல, சொல்லப்போனால் அதை விடவும் மிகவும் ஆபத்தானது… இவர்களுக்குத் தாங்கள் செய்வது தவறு, தங்கள் தவறுகளால் இந்தச் சமூகம் பெருமளவு பாதிக்கப்படும் என்கிறப் புரிதல் எதுவும் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டே இருப்பார்கள்…

ஒரு உண்மையைச் சுட்டிக்காட்டலாம்…

கிரிக்கெட் கிரிக்கெட் என்று எப்பொழுதும், இளைஞர்கள் முதல் அனைத்து வயதிலுள்ள ஏராளமான மக்கள் நேரிலும், தொலைக்காட்சிகளிலும் கிரிக்கெட்டைப் பார்த்துக் கொண்டாடுகிறார்கள்… ஆரம்ப காலங்களில் அதில் ஒன்றும் தவறில்லை என்றுதான் பலரும் நினைத்தார்கள்…

ஆனால், இன்றைய நிலை என்ன..? கிரிக்கெட்டைத் தவிர வேறு எந்த விளையாட்டையும் பார்க்க மாட்டோம், மற்ற எந்த விளையாட்டையும் பற்றிச் சிந்திக்க மாட்டோம், அக்கறைக் காட்ட மாட்டோம் என்ற அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது… இந்த அவலமான நிலைக்குக் காரணம் எதைப்பற்றியப் புரிதலும் இல்லாத மூன்றாவது வகை மனிதர்கள்தான்…

“ஏன் இப்படி எப்பொழுதும் கிரிக்கெட்டை மட்டுமே கொண்டாடுகிறீர்கள்..? அது மட்டும்தான் விளையாட்டா..? இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி இல்லையா..? கால்பந்து இல்லையா..? கைப்பந்து இல்லையா..? கபடி இல்லையா..? இப்படி எத்தனையோ விளையாட்டுகள் இல்லையா..?” என்று இவர்களிடம் கேட்டால், “கிரிக்கெட்டும் ஒரு விளையாட்டுத்தானே, எங்களுக்குப் பிடித்திருக்கிறது… எங்களுக்குப் பிடித்ததைப் பார்ப்பது, அதைப்பற்றிப் பேசுவது, அதைக் கொண்டாடுவது, அதை அங்கீகரிப்பது, அதை விளையாடுவது என்பதில் என்ன தவறு இருக்கிறது..?” என்று திருப்பிக் கேட்பார்கள்…

கிரிக்கெட்டும் ஒரு விளையாட்டுதான்… அதில் ஒன்றும் தவறில்லை… நூற்றுக்கணக்கான விளையாட்டுகள் இருக்கின்றன… அவைகளுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை அவசியம் கொடுத்தாக வேண்டும்… முக்கியத்துவம் அல்ல கொடுக்க வேண்டிய அங்கீகாரத்தைக் கூடக் கொடுக்காமல், முற்றிலுமாக அனைத்து விளையாட்டுகளையும் ஒதுக்கி விட்டு, கிரிக்கெட்டை மட்டுமே கொண்டாடுவது என்பது அறிவுப்பூர்வமான, ஆரோக்கியமான செயல் இல்லை… அப்படிச் செய்வதால், இந்தச் சமூகத்துக்கோ, விளையாட்டுகளில் ஈடுபடும் இளைஞர்களுக்கோ எவ்விதமான நன்மையும் கிடைக்கப் போவதில்லை… இத்தனைக்கும் கிரிக்கெட் என்பது இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்படாத ஒரு தனியார் அமைப்பு… ஆனால், மற்ற விளையாட்டுகள் அப்படி அல்ல…  

அப்படியான அங்கீகாரம், முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் போனதால்தான், 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் இன்னும் இரண்டு இலக்க எண்களிலேயே விளையாட்டுகளில் நாம் பதக்கங்கள் வாங்கிக் கொண்டிருக்கிறோம்… ஒரு நாட்டின் மிகப்பெரிய கெளரவங்களில் ஒன்று, அந்த நாடு விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பது… ஆனால், இந்தியாவின் நிலை என்ன..? சில கோடிகள் மக்கள் தொகை கொண்ட சின்னச் சின்ன நாடுகள் எல்லாம் நூற்றுக்கணக்கில் பதக்கங்களை அல்லிச் செல்கின்றன…

20 ரூபாய் பாப்கார்ன் 200 ரூபாய்..!

இந்த மூன்றாம் வகை மனிதர்களுக்கு அரசாங்கமோ அல்லது இந்தச் சமூகமோ நடைமுறைப்படுத்தும் எந்த ஒரு காரியத்திலும் எவ்விதமான புரிதலோ, உணர்வோ, அறிவோ இருப்பதில்லை… சமூகத்தைப் பற்றிய அக்கறையல்ல, சிறிதளவு சிந்தனை கூட இவர்களிடம் இருக்காது என்பதுதான் அவலத்தின் உச்சம்…

திரையரங்குகளில் இருபது ரூபாய் பாப்கார்னுக்கு இருநூறு ரூபாய் கொடுத்து வாங்குவார்கள்… அதைப்பற்றிய எந்தவிதமான குற்ற உணர்ச்சியும், உறுத்தலும், தயக்கமும் இல்லாமல்… எதிர்க்க வேண்டிய எந்த ஒன்றையும் இவர்கள் கண்டு கொள்வதே இல்லை… அப்படித்தான் எல்லாவற்றிலுமே…

பள்ளி மற்றும் கல்லூரிகளில் உதாரணமாக ஆயிரம் ரூபாய் ஃபீஸ் வாங்க வேண்டும் என்று அரசாங்கமே ஆணையிட்டிருந்தாலும் அந்த ஆயிரத்தைக் கொடுத்துவிட்டு, கணக்கில் இல்லாமல் பள்ளி நிர்வாகம் நிர்ணயித்திருக்கும் கொள்ளைப் பணம் ஒரு லட்சம் ரூபாயாக இருந்தாலும் எவ்விதமான நெருடலும் இல்லாமல் கொடுப்பார்கள்… அத்துடன் மட்டும் இல்லாமல், வருடம் முழுவதும் எந்தக் காரணத்தையாவது சொல்லி பணம் பறித்துக் கொண்டேயிருக்கும் கல்வி நிறுவனங்களை எதிர்த்துக் கேள்வி கேட்கவேண்டும் என்ற உணர்ச்சிகளற்ற மரக்கட்டைகளாகத்தான் இருப்பார்கள்…

இப்படிப்பட்ட பள்ளி நிறுவனங்களை ஆரம்பத்திலேயே கேள்வி கேட்காமல் விட்டதின் விளைவு, இன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த அந்தக் கொள்ளைகள் எல்லா பள்ளிகளிலும் அங்கீகாரமாக ஆகிப்போனது… அடித்தட்டு மக்களுக்குக் கிடைக்க வேண்டிய எந்த விதமான உயர் கல்வியோ, உயர்தரக் கல்வியோ பணம் இல்லாமல் கிடைக்காது என்ற மோசமான நிலைக்குக் கொண்டுசென்று விட்டது… இதைப்பற்றிய சரி, தவறு என்கிற சிந்தனையெல்லாம் இவர்களிடம் இருப்பதில்லை…

இருபது ரூபாய் பாப் கார்னை இருநூறு ரூபாய்க்கு விற்பது தவறு, அதைத் தட்டிக் கேட்கவேண்டும், இல்லாவிட்டால், அதை அங்கீகரிக்காமல் இருந்தால் நாளடைவில் அவர்கள் இருபது ரூபாய் பாப்கார்னை இருநூறு ரூபாய்க்கு விற்க மாட்டார்கள் என்ற எவ்விதமான சிந்தனையும் இல்லாமல், அந்தப் பாப்கார்னை வாங்கியது சாதாரணமான நிகழ்வாகத் தோன்றலாம், ஆனால், அப்படியல்ல…

அதைப்போன்ற செயல்களெல்லாம் கார்பரேட்டுகள், மக்களை நாடி பிடித்துப் பார்க்கும் நயவஞ்சக வேலை… கொஞ்சம் கொஞ்சமாக எதையும் கேள்வி கேட்காமல் இருக்கும் இப்படிப்பட்ட ஜடங்களை அதிகரிக்க வைத்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று சின்னச் சின்னதாக ஆரம்பித்து அப்படியே எல்லாவற்றிலும் அதை அமல்படுத்திக் கொள்ளையடிக்கும் குள்ளரிநரித்தனத்தின் தந்திரம்…

சின்னச் சின்னதாக ஆரம்பித்து, எவ்விதமான எதிர்ப்பும் இல்லாமல் ஆக்கச் செய்துவிட்டதனால் கிடைத்த கொள்ளையில் மகிழ்ந்து, அப்படியே மற்ற எல்லாவற்றிலும் அந்தக் கொள்ளையை நடைமுறைக்குக் கொண்டுவந்து விட்டார்கள்… அப்படித்தான் கொரோனா காலத்தில் மொத்த உலகமும் வேலையில்லாமல், வருமானம் இல்லாமல் ஊரங்கிக் கிடந்தபோதும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட அனைத்துப் பொருள்களின் விலையையும் ஏற்றிக் கொள்ளை லாபத்தில் விற்றுக் கொள்ளை அடித்த நிகழ்வும்… அப்பொழுதும் அதற்கு எவ்விதமான எதிர்ப்போ, முனுமுனுப்போ கூட எழவில்லை…

அத்தியாவசியமான உணவுப் பொருள்களைக்கூட சாதாரண மக்களால் வாங்க முடியாமல் கஷ்டப்பட்டார்கள்… இப்படி, எல்லாவற்றின் விளையையும் ஏற்றிக் கொண்டே சென்றாலும் சரி, எருமை மாட்டின் மீது மழை பெய்ததைப் போல அவர்கள் எவ்வித உணர்வுமின்றி அதை அங்கீகரித்துக் கொண்டேதான் இருப்பார்கள் அந்த மூன்றாம் வகை மனிதர்கள்…

எந்தப் பிரக்ஞையும் அற்ற இப்படிப்பட்ட மனிதர்களுக்கு, பக்கத்து வீட்டில் இந்த நாட்டுக்காக வாழ்ந்த தேசத் தியாகிகள் வாழ்ந்தாலும் சரி, ஒரு மாபெரும் எழுத்தாளன் வாழ்ந்தாலும் சரி, மிகச்சிறந்த கலைஞன் வாழ்ந்தாலும் சரி இவர்கள் எதையும் அறிந்து கொள்ளவோ, அக்கறைக் காட்டவோ மாட்டார்கள்… அவர்கள் தங்கள் போக்கில், தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்…

இத்தகைய மனிதர்கள் ஏறக்குறைய உணர்வுகள் ஏதுமற்ற எந்திரங்களாக, விசையால் செலுத்தப்படும் பொம்மைகளாக, சுயசிந்தனை அறவே இல்லாதவர்களாக, இயற்கை மனிதர்களுக்கு என்றே கொடுத்திருக்கும் அளப்பரிய ஆற்றல் கொண்ட மூளையைப் பயன்படுத்தும் திறனற்றவர்களாக வாழ்கிறார்கள்…

இவர்களின் அன்றாட வேலை என்பது ’சாப்பிடுவது, தங்கள் வேலையைச் செய்வது, தங்களுக்குப் பிடித்ததைச் செய்வது’ என்பதைத் தவிர, விஷம்போல் ஏறும் பெற்றோல் விலையேற்றம், நெஞ்சை வெடிக்க வைக்கும் கேஸ் சிலிண்டர் விலை, நினைத்த போதெல்லாம் உயர்த்தப்படும் அத்தியாவசியப் பொருள்களின் விலை என எதற்கும் லேசான முனுமுனுப்பைக் கூட வெளிப்படுத்தாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்…

இயற்கையின் உண்மைத் தத்துவத்தை அறவே அறியாதவர்கள்… எங்கோ இருக்கும் அமேசான் காடுகள் அழிவது மொத்த பூமிக்கும் ஆபத்து என்ற உண்மையைப்பற்றிய புரிதலெல்லாம் இவர்களிடம் இருக்காது… அதைப்பற்றி விளக்க முயன்றால் அவர்களால் அதை புரிந்து கொள்ளவும் முடியாது…

இந்த உலகத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத செயல்கள் என எதுவுமே இருக்க முடியாது… ’நாங்கள் எங்கள் இஷ்டம்போல் வாழ்வதில் என்ன தவறு..?’ என்று இவர்கள் கேட்பதை விட அபத்தம், அறிவற்ற தனம் வேறில்லை… எதைப் பற்றியும் கவலைப்படாமல், எந்தத் தவறையும் பற்றி எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் வாழும் இவர்களின் செயலால் பாதிக்கப்படுவது இவர்கள் மட்டுமல்ல, இந்தச் சமூகத்தில் வாழும் ஒட்டு மொத்த மக்களும்தான்… இது கள்ளக்குறிச்சிப் பள்ளியில் நடந்த துயரச் சம்பவத்திற்குமே பொருந்தும் என்பதுதான் இயல்பான, அடிப்படையான உண்மை..!

தொடரும்…