
டாக்டர் மு.அருணாச்சலம், MD,
வருடத்துக்கு இருமுறை வந்து போகும் சாதாரண ஒருநோய் ‘பைல்ஸ்’ எனப்படும் மூலம். இருசக்கர வாகனங்களுக்குக்கூட தினசரி பெட்ரோல், இன்ஜின் ஆயில், டயருக்கு காற்று என பார்த்து பார்த்துக் கவனித்துக் கொள்ளும் நாம்,உடலுக்கு தேவையான தண்ணீர், காய்கறி,பழங்களுடன் கூடிய உணவு, உடற்பயிற்சி,நல்ல உறக்கம் எனத் தர மறுப்பதன் விளைவே 70 சதவிகித மூலநோயின் காரணம்.
அன்றாட உணவில் ஒரு காய்,ஒரு பழம்,2 லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொண்டால் மூல நோய் பக்கத்திலேயே வராது.அது மட்டும் அல்ல இந்த சமச்சீரான உணவு உடலுக்கு வைட்ட மின்களையும் நார்ச் சத்தையும் தரும். வயிற்றை நிரப்பி கலோரிகளைக் குறைக்கும்.திட உணவுடன் அது 8 மீட்டர் உணவுக்குழாயில் நீருடன் பயணம் செய்து, பல்வேறு சத்துகளை உடலுக்கு வழங்கி, காலையில் மலச்சிக்கல் சிரமம் இன்றி உடலை விட்டு வெளியேறுகிறது.
மலச்சிக்கல் என்பது சாதாரணமானதல்ல. ஆசனவாயை அழுத்தி, அங்கிருக்கும் ரத்தக் குழாய்களைக் கிழித்து, மூலம் என்ற நோய்க்கு முக்கிய காரணமாக அமைகிறது.தினசரி நமது உடலுக்கு காய்,கனி, நீர் மிகவும் அவசியம் என்பதை உணர்ந்தால் டயட்டீஷியன், நியூட்ரீஷியனிஸ்ட் எனப் பார்க்க அவசியமில்லை. ஆண்டுக்கு இருமுறை கோடையில் தண்ணீர் குடித்தாலும் – போதுமானதாக இல்லாமல், மழைக்காலத்தில் தண்ணீரே குடிக்காமல் போதுமானதாக இல்லாததால்,மலச் சிக்கல் அவதி வருகிறது.
மூலத்துக்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் மேலே கூறிய காய்,பழம், தண்ணீர் தேவையான அளவுக்கு உட்கொள் ளாததே பிரதான காரணம். உடற்பயிற்சியின்மை, அதிகமாக உட்கார்ந்திருப்பது (தையல் மெஷின், சைக்கிள் ஓட்டுவது) போன்றவையும், பருமன்,தீவிர ஓயாத இருமல்,மகப்பேறு போன்றவையும் காரணங்களாகலாம்.
மனிதனுடைய மலக்குழாய் 3-4 நாட்களுக்கான மலத்துடன், விரிவடைந்து தேக்கி வைக்கும் சக்தி உடையது.ஆனால், ஆசனவாய் மிகச்சிறிய அளவில்தான் விரியும். உடலில் தண்ணீர் இல்லாத பட் சத்தில் மலக்குழாயில் இருந்தும் உடலுக்கு தேவையான தண்ணீரை உறிஞ்சிவிடுவதால், மலம் மேலும் இறுகி, மலக்குழாய் சுவர்களை, ஆசனவாயை அழுத்தி காயப்படுத்தி,வெளியே தள்ளிக்கொண்டோ, கிழித்துவிட்டோ வருவதால் ரத்தப்போக்குடனோ, இல்லாமலோ உள்மூலமாகவோ, வெளிமூலமாகவோ மூலநோய் உருவாகிறது.
மூலநோயின் அறிகுறிகளாக ஆசனவாயின் வீக்கம், மலக்குழாயில் வலி, ரத்தப்போக்கு சீழ்கட்டி, ஜூரம்,மலக்குழாய் வெளியே தொங்கும் அளவுக்கு நடக்க முடியாமல்போவது போன்றவை இருக்கக்கூடும்.
மலக்குழாயின் முடிவிலிருக்கும் ஆசனவாயில் நல்லரத்தம்,கெட்ட ரத்தம் என்றில்லாமல் – இரண்டும் இணைந்த மிக அதிகமான ரத்தக்குழாய்களுடன், தசைகளும் சதையும் இருக்கும்.இவை ஆசனவாய்க்கே உரிய தனித்துவமான ரத்தக்குழாய்கள். மலத்தை அடக்குவதற்கு வெளி மற்றும் உள் தசை வளையம்(Anal sphincter muscle) இருக்கின்றன. மூலநோய்க்கு மருத்துவப் பரிசோதனை என்பது மருத்துவரே பார்த்து (Rectal Exam) கட்டிகள்,சீழ்கட்டிகள் போன்றவை இல்லை என்றபின் (Rectoscopy) மூலம் அறியப்படும்.சில வேளைகளில் MRI வரை தேவைப்படலாம். மலத்துடன் ரத்தம் வரும் போது அது மலக்குழாய் கிழிந்து (Anal Fissure) வருகிறதா,சீழ்கட்டி (Fistula), கேன்சர் கட்டிகள் என மற்ற நோய்களிலிருந்து வித்தியாசப்படுகின்றனவா எனப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மூலநோய்க்கு ஆரம்பத்திலேயே கூறியபடி ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் ஒரு காய்,ஒரு பழம்,2 லிட்டர் தண்ணீர் முக்கியம். வீட்டு கைப்பக்குவக் குழம்புகளை ஹோட்டல் குழம்புகளைப் போல செய்வதே, குழந்தைகளுக்கு இரைப்பை வலி, மலச்சிக்கலுக்கான காரணம்.இதை எப்படி படித்த மற்றும் படிக்காத தாய்மார்களுக்குப் புரிய வைப்பது என்று நவீன மருத்துவர்களுக்குத் தெரியவில்லை.
நோயின் ஆரம்பத்தில் உணவு தவிர, மலக்குழாயின் வலியைப் போக்க, வீக்கத்தைப் போக்க, சாதாரண கிருமிநாசினிகள், உறைந்த ரத்தம் கரைக்கும் மருந்துகள் தவிர ஆசன வாயில் தடவும் ஆயின்மென்ட் கள்,க்ரீம்கள் மற்றும் வீக்கத்தைப் போக்கும் சுடுநீர் ஒத்தடம் போன்றவை உதவி செய்கின்றன. நோயாளியின் ஒத்துழைப்புடன் நோயின் காரணம் தெரிந்து போக்கினால் மேலே கண்டவாறு மருந்தாலேயே குணப்படுத்த முடியும். அறுவை சிகிச்சையாக மாற்றாமல் குணப்படுத்த முடியும்.
அறுவை சிகிச்சையாக முற்றிய பின்பு ரப்பர் பேண்ட் இறுக்கிகள் (Rubber band ligation), ரத்தக்குழாயை அடைத்துப் போகச் செய் வது (Sclerotherapy) அல்லது லேசர் இன்ஃப்ளான்ட் (Infrared radiation, laser surgery), க்ரையோ சர்ஜரி (Cryosurgery), எலெக்ட்ரோ (Electrocautery) மூலம் ரத்தமின்றி அறுத்து எடுக்கலாம்.கத்தி கொண்டும் அறுத்து எடுக்கலாம்.
உணவுக்குழாயை அறிந்தவர்களுக்கு சமச்சீர் உணவில் நார்ச்சத்தின் முக்கியத்துவம் அறிந்தவர்களுக்கு, உடலுக்கு உணவைத் தவிர நீரும் மிக முக்கியம் என அறிந்தவர்களுக்கு மூலநோய் என்றால் என்ன என்பதே தெரியாது என்பதே சத்தியமான உண்மை!

