கோடை காலம் தொடங்கிவிட்டது. பருவநிலை மாற்றம் நடந்து வருகிறது. உலக வெப்பமாதலால் அளவுக்கு அதிகமான வெயில்… குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் திட்டமிட வேண்டும்.

*தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.கூடவே நிறைய பழச்சாறை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* வெள்ளைப் பூசணி, சுரைக்காய், வெள்ளரிக்காய் போன்ற நீர் உள்ள காய்கறிகளை உண்ண வேண்டும். பச்சைக் காய்கறிகளை சாலட் செய்து, அதில் எலுமிச்சம் பழச் சாறு பிழிந்து அடிக்கடி சாப்பிடலாம்.

* இந்த வெயில் தாங்காமல் பலருக்கு தலைசுற்றல், வாந்தி போன்ற பிரச்னைகள் வரும். அதைத் தவிர்க்க, எலுமிச்சம் பழச் சாற்றை தினமும் கண்டிப்பாக அருந்த வேண்டும்.

* தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.அதிலும், மணத்தக்காளிக் கீரையை அதிகமாகச் சேர்க்க வேண்டும். வயிற்றில் ஏற்படும் புண்ணைக் குறைப்பதுடன், உடல் வெப்பத்தையும் இது தணிக்கும்.

* பாட்டில்களில் அடைக்கப்பட்ட மென் பானங்களை அருந்துவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் கேட்டாலும் வாங்கித் தந்து பழக்கப்படுத்த வேண்டாம்.அவை அப்போதைக்கு வேண்டுமானால் குளிர்ச்சியைக் கொடுப்பதுபோல் இருக்குமே தவிர,அதனால் அலர்ஜி ஏற்படுவதுதான் அதிகம்.

* பழச் சாறு நல்லதுதான் என்றாலும், பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் இன்னும் சிறந்தது. பழங்களின் சதைப் பகுதி, நார்ச்சத்து எல்லாம் குறையாமல் அப்படியே கிடைக்கும். பழங்களில் இருக்கும் சத்தும் முழுமையாகச் சேரும். குழந்தைகளைக்கூட பழங்களை அப்படியே சாப்பிடப் பழக்க வேண்டும்.

* எல்லாப் பழங்களுமே குளிர்ச்சிதான் என்றாலும் சாத்துக்குடி,ஆரஞ்சு, தர்பூசணி, முலாம்பழம், கிர்ணி போன்ற சீஸன் பழங்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்வது மிக நல்லது.

* வயிறு நிறையச் சாப்பிடாமல், வெளியே சென்றால் நொறுக்குத் தீனிகளை (ஜங்க் ஃபுட்) கொறிப்பதும், டீ, காபி, கோக் என்று குடிப்பதும் இந்தக் கால இளசுகளின் வழக்கம்.இதனால் வயிற்றில் அசிடிட்டி உண்டாகும்.இதைத் தவிர்க்க தினமும் நிறைய மோர் அருந்தலாம்.

கோடையில் நாம் சந்திக்கும் முக்கியமான இன்னொரு பிரச்னை நீர்க்கடுப்பு.அது வராமல் தடுக்க, பாலக் கீரையை உணவில் தினமும் சேர்த்துக்கொள்ளலாம். தண்ணீர் நிறையக் குடிப்பதன் மூலமும் இந்தப் பிரச்னையைச் சமாளிக்கலாம். ஏனெனில், சிறுநீர் போவது குறைவாக இருந்தால்தான் நீர்க்கடுப்பு வரும்.அதைத் தடுக்க வாழைத்தண்டு சாற்றில் எலுமிச்சம் பழச் சாற்றைக் கலந்து ஒரு நாளைக்கு 2, 3 தடவை குடித்து வந்தால் சரியாகிவிடும்.

இளநீர் ஓர் அற்புதமான இயற்கை பானம், கோடைக்கு அது ஓர் அருமருந்து.வசதிப்பட்ட நேரங்களில் எல்லாம் குடிக்கலாம்,கூல் ஆகலாம்!