
ஒவ்வொரு வீட்டிலும் -குடும்பத்திலும் – முதலுதவி அளிப்பதற்கான சாதனங்களைக் கொண்ட ஒரு பெட்டி (First Aid KIT) அவசியம் இருக்கவேண்டும்.இந்த முதலுதவிப் பெட்டகம் (பெட்டி) சுத்தமான ஈரக்கசிவு (நைப்பு) இல்லாத இடத்தில் இருக்க வேண்டும்.அந்த ‘கிட்’ காற்றுப்புகாதபடி அழுத்தமான மூடியால் மூடப்பட்டிருக்க வேண்டும்.
பாத்ரூமிலோ வேறு இடத்திலோ இந்தப் பெட்டியைப் ‘பத்தோடு பதினொன்றாக’ வைக்காதீர்கள்.அவசர காலத்தில் தேவைப்படும்போதும் இங்கேதானே வைத்திருந்தேன்.எங்கே போச்சு? என்று பதட்டத்துடன் அதைத்தேடும் நிலை ஏற்படாமல். குறிப்பாக ஓர் இடத்தில் – குழந்தைகள் கைக்கு எட்டாத இடத்தில் வையுங்கள். பெட்டகத்தின்மீது செஞ்சிலுவைச் சின்னம் முதலுதவிப் பெட்டி என்றும் எழுதி வையுங்கள் அடிக்கடி அதை இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை – திறந்து பார்த்து அதில் இல்லாத பொருள்களை (பயன்படுத்தியதினால்) வாங்கி ‘ஸ்டாக்’ குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
மருந்துக் கடைகளில் சிறியதும் பெரியதுமாக முதலுதவிப் பெட்டகங்கள் கிடைக்கின்றன.அவரவர் வசதிக்கேற்ப வாங்கி வைத்துக்கொள்ளலாம். ஆனால் இப்பெட்டகம் அடிக்கடி பயன்படுத்தப் படாமையால் கவனிப்பின்றி போகக் கூடாது.செக்கப் செய்து, நாள்பட்ட மருந்து சாதனங்களை அகற்றி இல்லாத பொருளை வாங்கி இட்டு நிரப்பி அதை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியது முக்கியம்.
இப்பெட்டகம் உங்களிடம் நல்ல நிலையில் இருந்தால் இதை அவசர காலத்தில் -பிறருக்குக் கொடுத்தும் உதவலாம்.

