
– வித்யா ராஜமோகன்
ஆயுளை வளர்க்கும் ரகசியத்தைத் தேடி பலரும் அலை பாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.இதில் நாய் வளர்ப்பும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று இனிய தகவல் கொடுத்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஸ்வீடனில் நாய் வளர்க்கும் 40 முதல் 80 வயதுக்குட்பட்ட 34 லட்சம் நபர்களிடம் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.12 வருடங்களுக்கு முன்னர் ஒவ்வொருவரிடமும் இதய நோய்த் தாக்கம் எப்படி இருந்தது என்பதை அதற்கான ஆவணங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அவர்களுடைய நாய்களுக்கு ஸ்வீடிஸ் வேளாண்மை அமைப்பின்கீழ் பதிவு செய்யப்பட்டு அதற்கான அடையாள எண்ணும் வழங்கப்பட்டிருந்தது.
ஒரு நாயை வளர்க்க ஆரம்பித்த பிறகு அவர்களிடம் உயிரிழப்புக்கான அபாயம் 20 சதவிகிதம் குறைந்ததோடு, இதயநோய் ஆபத்துகளும் 23 சதவிகிதம் தடுக்கப்பட்டிருப்பதாக அந்த ஆய்வில் தெரிய வந்தது.
அதிலும் சில குறிப்பிட்ட, சுட்டித்தனமான பொமரீனியன் போன்ற நாய்கள் மற்றும் லேப்ரடார் ரெட்ரீவர் போன்ற நாய்களை வளர்ப்பவர்களிடம் இந்த விளைவு மிகவும் வலுவானதாக இருந்ததையும் பார்க்க முடிந்தது.
வெளியே செல்வதற்கு, உடற்பயிற்சிகள் செய்வதற்கு மற்றும் சில சமூக ஆதரவு சார்ந்த நல்ல நோக்கங்களுக்கும் ஊக்கமளிக்கும் ஒரு காரணியாகவும் இருக்கிறது நாய் வளர்க்கும் பழக்கம் என்று கூறியிருக்கிறார்கள்.
நாய் வளர்த்தால் திருடன் வருவது தடுக்கப்படும்.நமது வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற கவலை குறையும்.நாய்கள்,நம்மோடு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நன்றி உணர்வோடு பாசமாகப் பழகும்.சொல்வதை தட்டாமல் கேட்கும்.
நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? அடிக்கடி மருத்துவமனை போகாமல் நலமுடன் வாழ நாய் வளர்த்துப் பாருங்களேன்!
-வித்யா ராஜமோகன்.

