– டாக்டர்.ஜெயராணி காமராஜ்,எம்.டி.

பெண்களை தெய்வமாக கொண்டாடி மகிழ்கிறோம்.ஆனால்,அவர்கள் உடல் நலத்தில் யாரும் அவ்வளவாக அக்கறை காட்டுவது இல்லை.வருடத்துக்கொரு முறை ஆயுதபூஜை  என்கிற பெயரில் எந்திரங்களுக்குக் கூடப் பூரண ஓய்வளிக்கிறோம்.வீட்டிலுள்ள உயிரற்ற பொருட்கள் அனைத்துக்குமே அன்றொரு நாள் உழைப்பிலிருந்து ஓய்வு கொடுத்து மரியாதை செய்கிறோம். ரத்தமும் சதையுமாக உணர்வுகளுடன் போராடிக்கொண்டிருக்கிற பெண்களுக்கு, போதுமான ஓய்வு கொடுக்கிறோமா? 

சமீபகாலமாக பெண்கள் இரண்டு மூன்று ஷிப்ட் வேலை செய்கிறார்கள்.காலையில் வீட்டில் சமையல்,பிறகு அலுவலகம்.இரவு மீண்டும் சமையல்.இதனால்  ஓய்வு இல்லாமல் மிகுந்த உடல் தொந்தரவுகளை எதிர்கொள்கின்றனர்.உடல் தகுதியும் பாதிக்கப்படுகிறது.

மாதவிலக்கு

இந்த நாட்களில் பெண்களுக்குப் பூரண ஓய்வு அவசியம் என்பதால் தான் அந்தக் காலத்தில் 3 நாட்களுக்கு அவர்களை வீட்டிலிருந்து ஒதுக்கி வைத்திருந்தார்கள்.அந்த 3 நாட்களில் எந்த வேலையும் செய்யாமல் அவர்களுக்கு மனமும் உடலும் முழு ஓய்வைப் பெறும்.அடுத்தடுத்த நாட்களுக்கான புத்துணர்வுடன் ஓடவும் தயார்ப்படுத்தும்.இந்தக் காலத்தில் அப்படி ஒதுங்கி உட்காரத் தேவையில்லை என்றாலும் ஓய்வெடுப்பது என்பது மிக முக்கியம்.

மாதவிலக்கு நாட்களில் சில பெண்களுக்கு ப்ரீமென்ஸ்டுரல் சிண்ட்ரோம் எனச் சொல்லக்கூடிய பிரச்னை வரலாம்.ஹார்மோன் மாறுதல் காரணமாகவே இது ஏற்படும்.மன அழுத்தம்,சோர்வு, கோபம், சோகம், அழுகை என இதன் அறிகுறிகள் எப்படியும் இருக்கலாம். இதற்கும் ஓய்வுதான் தீர்வு.

பிரசவத்துக்குப் பிறகு வளைகாப்பு,சீமந்தம்

என்று சொல்லி அம்மா வீட்டுக்கு அனுப்பி வைப்பதும் பிரசவத்துக்குப் பிறகு குறைந்தது 3 முதல் 6 மாதங்களுக்கு அம்மா வீட்டிலேயே ஓய்வெடுக்கச் செய்வதும் இந்தக் காரணத்துக்காகத் தான்.ஆனால், இன்றெல்லாம் அதைப் பத்தாம்பசலித்தனம் என்று சொல்லிக் கொண்டு குழந்தை பெறுகிற நாள் முதல் வேலைக்குப் போய்க் கொண்டும்,தாய்ப்பால் கொடுக்கும் ஆரம்ப நாட்களிலேயே வேலைக்குத் திரும்புவதும் அதிகரித்து வருகிறது .

கர்ப்ப காலத்தில் இதயத் துடிப்பு,ரத்த அழுத்தம், சிறுநீரக இயக்கம், சுவாசத்தின் தன்மை என பெண்ணின் ஒட்டு மொத்த உடலியக்கமும் மாறிப் போகும்.பிரசவத்துக்குப் பிறகு மெல்ல மெல்ல எல்லாம் பழைய நிலைக்குத் திரும்பும்.அதற்குக் குறைந்தது 6 வார கால ஓய்வு அவசியம்.அப்படி கட்டாய ஓய்வெடுக்கிற போதுதான், அந்தப் பெண்ணால், குழந்தைக்கு முழுமையாகத் தாய்ப் பால் கொடுக்க முடியும்.கைக்குழந்தை வைத்திருக்கும் பல பெண்களுக்குத் தூக்கம் ஒரு பெரிய பிரச்னையாகத்தான் இருக்கும்.இதைச் சமாளிக்க ஒரே வழி, குழந்தை தூங்கும்போது தாயும் தூங்கி ஓய்வெடுப்பது ஒன்றுதான்.

பிரசவத்துக்குப் பிறகு போதுமான ஓய்வு கிடைக்காவிட்டால், பெண்களுக்கு மன அழுத்தம் வரும் வாய்ப்புகள் அதிகம்.ஏற்கெனவே மனநோய் வரும் வாய்ப்புள்ள பெண்கள் என்றால் அவர்களுக்கு, பிரசவத்துக்கு பிறகு ‘போஸ்ட்பார்ட்டம் ப்ளு’என்கிற மனநல சிக்கல் தாக்கலாம்.தான் பெற்ற குழந்தையையே தூக்குவதைத் தவிர்ப்பது,அந்தக் குழந்தையையே தன்னுடையதில்லை என்பது, தாய்ப்பால் தர மறுப்பது,சுய சுத்தம் பேண மறுப்பது, தற்கொலை முயற்சி என இது பல பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தும்.குழந்தை வளர்ப்பு குறித்த பயம் அதிகரிக்கும்.எல்லோரிடமும் வன்முறையாக நடந்து கொள்வார்கள்.

சிலருக்குப் பிரச்னை முற்றி, குழந்தையையே கொலை செய்யும் அளவுக்கும் தீவிரமாகும். இவர்களுக்குப் போதுமான ஓய்வு இல்லாத காரணத்தால் தாய்ப்பால் சுரப்பு குறையும்.எரிச்சல் அதிகரிக்கும்.எனவே, பிரசவித்த பெண்ணிடம் மேற்கண்ட அறிகுறிகளை உணர்ந்தால் அவருக்கு ஓய்வு தேவை என்பதை அறிந்து அதற்கு உதவுவதே முதல் சிகிச்சை.

மெனோபாஸ்

மாதவிலக்கு முற்றுப்பெறும் காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிற பெண் களுக்கு அடிக்கடி மனநிலையில் மாற்றம், தலைவலி,படபடப்பு,கோபம், மன உளைச்சல், தற்கொலை எண்ணம், அழுகை எனப் பலவிதமான உணர்ச்சிகள் வந்து போகும்.மூளையில் உண்டாகிற ஹார்மோன் மாற்றங்களின் விளைவாகத் தூக்கம் இருக்காது.

எந்த விஷயத்திலும் பிடிப்பே இருக்காது.உடல் மற்றும் மனத்தளவில் உணரும் அறிகுறிகளின் காரணமாக தூக்கம் இருக்காது.அப்படியே தூங்கினாலும் பாதியில் விழித்து எழுவார்கள்.பயமும் பதற்றமும் அதிகமாக இருக்கும்.இந்த நிலையில் இருக்கும் பெண்கள் மருத்துவரை அணுகி, பதற்றத்தைக் குறைக்கும் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.கூடவே போதுமான அளவு ஓய்வு எடுக்க வேண்டும்.

வயதானவர்கள்

முதுமையின் காரணமாக உடலை வாட்டும் நோய்கள் அதிகரிக்கும்.ரத்த அழுத்தம் அதிகமாகும்.இன்சுலின் சுரப்பு பாதிக்கப்பட்டு, நீரிழிவு தாக்கும் அபாயம் அதிகரிக்கும்.ஓய்வும் தூக்கமும் இல்லாத பெண்களுக்கு பருமன் பிரச்னையும் சேர்ந்துகொள்ளும். மறதி, குழப்பம்,கோபம், தனிமைத் துயரம் என எல்லாம் அதிகரிக்கும்.உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கொடுத்து ஆரோக்கியமான உணவு மற்றும் சூழலை உருவாக்கிக் கொள்வது தான் இவர்களுக்கான அவசியத்தேவை.